பக்கங்கள்

செரோக்கி பழங்குடியினரின்...வாழ்க்கை ரகசியம்!!!

தென் கிழக்கு அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பழங்குடியின மக்களே செரோக்கி. மலை வாழ் மக்கள்! அல்லது குகையின் மைந்தர்கள் !! என குறிப்பதே செரோக்கி எனும் சொற்பதம். அவர்கள் பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருப்பதை சரித்திரம் நமக்கு குறிப்பிடுகிறது.

அவர்களிடையே இருந்த ஒரு பழக்கம் மிகவும் சுவாரசியமானது. அதையே இங்கு பதிவிடுகிறேன்.

குழந்தைக‌ள் வ‌ளர்ந்து அவ‌ர்க‌ள் ம‌னித‌ர்க‌ள், என‌ அறிவிப்ப‌த‌ற்கு அவ‌ர்க‌ளிடையே ஒரு விசித்திர‌ ப‌ழ‌க்க‌ம் இருந்த‌து.

அக்குழ‌ந்தையின் த‌ந்தை அல்ல‌து காவ‌ல‌ர் அக்குழ‌ந்தையை அல‌ங்க‌ரித்து காட்டிற்குள் அழைத்து சென்று க‌ண்க‌ளை க‌ட்டி விட்டு, இவ்வாறு கூறுவாராம்.
ம‌க‌னே! உல‌க‌ம் கொடுமையான‌து, இங்கு ச‌ர்வைவ‌ல் மிக‌ சிர‌ம‌ம். ந‌ம்மை குத்தி குத‌ற‌ வ‌ன‌ வில‌ங்குக‌ளும், ஏன் ம‌னித‌ர்க‌ளும் கூட‌ உண்டு. ம‌ர‌ண‌ம் என‌ ஒரு முடிவும் உண்டு. நாம் வாழ‌.... ந‌ம் முய‌ற்சியும்!!! ந‌ம‌க்கு மேல் ஒரு ச‌க்தியும் உண்டு. இந்த‌ ம‌னித‌ வாழ்வின் ப‌ரிமாண‌ம் புரிந்து கொள்ள‌ இப்போது நீ ஒரு ப‌ரிட்சை எழுத‌ப் போகிறாய்.
உன் க‌ண்க‌ளை க‌ட்டி, உன்னை இந்த‌ ந‌டுகாட்டில் சூரிய அஸ்தமனத்தில் த‌னியாய் விட்டு விடுவேன். எந்த‌ அபாய‌மும் இல்லாம‌ல் நாளை சூரியன் உதிக்கும் போது நீ பிழைத்து இருந்தால் உன் முக‌த்தை சூரிய‌ ஒளி தாக்கும் போது நீ க‌ண் க‌ட்டியிருக்கும் துணியை அக‌ற்ற‌லாம்.

இந்த‌ சோத‌னையின் போது நீ இர‌ண்டு விச‌ய‌ங்க‌ளை செய்ய‌க் கூடாது. உத‌வி என்றோ, வ‌லி என்றோ நீ க‌த்த‌க் கூடாது, ம‌ற்ற‌து.... நீ பிழைத்து வ‌ந்தால் இங்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ன‌ யாருக்கும் சொல்ல‌ கூடாது. அது ர‌க‌சிய‌ம். நீ சாகும் வ‌ரை உன்னுள் புதைந்தே இருக்க‌ வேண்டும். இதுதான் மனித வாழ்வு எனும் வேள்வியின் பாதை.
இந்த கோட்பாடுகள் வடிவமைத்த ஒரு நிகழ்வை இப்போது பார்ப்போமே...

இது போல்... மனிதன் ஆக, பரிட்சை எழுதிய ஒரு மழலையின் கூடவே நாமும் சென்று, அங்கு நடப்பதை பார்ப்போமே. அன்று விடிகாலையில் தொட‌ங்கி அவ‌னுக்கு வீட்டில் அல‌ங்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்டு பெற்ற தாய், ம‌ற்றும் உற‌வின‌ர்க‌ள, இந்த‌ ப‌ரிட்சைக்கு த‌யாராக்கி கொள்கின்றன‌ர்.

மாலை சூரிய‌ன் மேற்கில் ந‌க‌ர்ந்த‌தும், த‌ந்தையுட‌ன் காட்டில் ந‌ட‌க்க‌ தொட‌ங்குகிறான். அட‌ர்ந்த‌ காடு அவ‌னை வ‌ர‌வேற்கிற‌து. உய‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளும் அட‌ர்ந்த‌ புற்க‌ளும் அவ‌னை பிர‌மிப்பூட்டுகின்ற‌ன‌. ந‌டுகாடு அடைந்த‌தும் த‌ந்தையை வ‌ண‌ங்கி க‌ண் க‌ட்டி கொள்கிறான்.

தொட‌க்க‌த்தில் ப‌ய‌ம்.

காட்டு ம‌ர‌ங்க‌ளின் அசைவு, சில் வ‌ண்டின் ஓசை. அவ்வ‌ப்போது கேட்கும் சில‌ வ‌ன‌ வில‌ங்குக‌ளின் ச‌த்த‌ம். ஒரு முறை ஏதோ ஒரு வ‌ன‌வில‌ங்கின் ச‌த்த‌ம் அருகாமையில் கேட்ட‌து. அத‌னை தொட‌ர்ந்து அது தாக்க‌ப்ப‌ட்டுவ‌து போல‌வும் ஓசை கேட்ட‌து.

இது என்ன‌ பிர‌ம்மையா, தெரிய‌வில்லை. நான் உயிருட‌ன் இருக்கிறேனா. ஆம் இருப்ப‌து போல‌த்தான் உள்ள‌து. என்றால் உயிர் என்ப‌து என்ன‌, ப‌ல‌ கேள்விக‌ள் ப‌தில் கூட‌ பாதி பாதி வ‌ருகிற‌து.

இதென்ன விபரீதம். வாழ அல்லது உயிருடன் இருக்க போராட வேண்டாமா. கண்கள் அல்லது காட்சி நமக்கு ஒரு கொடை அல்லவா. எதிரிகளை காணவும் அவர் பலம் தெரியவும் வேண்டாமா. தெரிந்தே.... என்னை தாக்க அனுமதிக்கலாமா. அடர்ந்த காட்டில், விலங்குகளின் மத்தியில் என்னை தனியே இருக்க விடலாமா.... சம்மதத்துடன் இறக்க என்னை அனுமதிப்பது எப்படி..

உற‌க்க‌ம் என‌ சில‌ க‌ண‌ங்க‌ளும்... கிற‌க்க‌ம் என‌ சில‌ க‌ண‌ங்க‌ளுமாக‌... நேர‌ம் க‌ட‌ ந்த‌து. என்றாலும் சுள்ளென‌ சூரிய‌ ஒளி ப‌ட்டு க‌ன்ன‌ம் சூடான‌தும் ... ஆ!!! அட‌டே விடிந்து விட்ட‌தே. நான் உயிரோடிருக்கிறேன். இற‌க்க‌வில்லை. என‌க்கு இன்னொரு வாழ்வு இருக்கிற‌து, என‌ உற்சாக‌மாய் க‌ண்க‌ளை க‌ட்டியிருந்த‌ க‌ட்டை அவிழ்த்தான்.

எதிரில்.... த‌ந்தை ஒரு பாறையில் அம‌ர்ந்து அவ‌னையே பார்த்து கொண்டிருப்ப‌து தெரிந்த‌து.

மௌன‌ம் அங்கு க‌ன‌த்து இருந்த‌து.

தந்தை பேச‌வில்லை, ம‌க‌னும் பேச‌வில்லை. அவ‌ர்க‌ள் பார்வையிலே அர்த்த‌ம் பொதிந்து இருந்த‌து. அதாவது, தந்தையும், மகனும் கண்ணோடு கண் கொண்டு நேர் நோக்கி பார்த்த போது, அங்கு இருவருக்குமே பேச்சு வரவில்லை... அங்கு மௌனமே அவர்களின் பரிபாஷை.
அந்த‌ மௌன‌த்தின் அர்த்தம்.... மனித‌ வாழ்க்கையின் அர்த்தமாக‌ இருந்த‌து.