பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 28/10/09

வழக்கமாக செய்யும் அஞ்சாறு தானியங்களை எடுத்து தாளிக்காமல், வெறும் க்டுகை மட்டும் எடுத்து..... சாரி கம்யூனிஸம் மட்டும் எடுத்து தாளித்து உள்ளோம்.

படுக்காளி : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
நம் உலகின் கதவு திறக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆச்சி : என்னடா பாட்டெல்லாம் பலமாயிருக்கு
படுக்காளி : ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்
ஆச்சி : 16 வயதினிலேல மயிலு ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேங்கிற மாதிரி இருக்குடா. ஏண்டா மீன் திங்க ஆசை வந்தா தூத்துக்குடி போ வேண்டியதுதான ஏன் வங்காளம் அல்ல கேரளா போன.
படுக்காளி : வங்காள நொங்கா ஒண்ணும் புரியல
ஆச்சி : பேன விட்டுபுட்டு ஈர பிடிக்குர பாரு. கம்யூனிச சிவப்புக் கொடி அங்க மட்டுந்தானடா படபடக்குது.
படுக்காளி : இல்ல ஆச்சி, நேத்து ஒரு சினிமா பாத்தேன், அதுல இருந்து தான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.
ஆச்சி : உன்ன சொல்லி குத்தம் இல்ல. புஸ்தகம் படிச்சுட்டு தானே பூரா பயலும் கம்யூனிஸம் பேசுறான்.
ஆமா இது பழங் கஞ்சியாச்சேடா, இப்போ எதுக்கு அதே வேக வைக்கிற.
படுக்காளி : ஆச்சி! இந்த மேசையில, அந்த சாக்பீஸ்ல உழைப்பு இருக்கு. மேசையில் இருந்து உழைப்ப எடுத்துட்டா மரத் தூள், சாக் பீஸ்ல இருந்து உழைப்பு எடுத்துட்டா வெறும் தூள்.
ஆச்சி : தூள் டக்கர்டா..... கிளாப்ஸ் அள்ளியிருக்குமே....

வெட்கத்தில் படுக்காளி நெளிய, ஆச்சி இடைமறித்து

ஆச்சி : அட அரை வேக்காடு, ஒரு காலத்தில சமூகம் பணம், ஜாதி, மதம்னு சொல்லி அடக்கி வைச்சாங்க. இப்போ எங்கடா இருக்கு. முதல் தலை முறை தொழில் அதிபர் ஓராயிரம் பேர் இப்ப இருக்கானேடா. இன்போசீஸ் மூர்த்தி, மைக்ரோசாப்ட் கேட்ஸ்னு அப்பன் பணத்தில் இல்லாம் தன் உழைப்புல முதலாளி ஆனானேடா.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் இன்னைக்கு இல்லையா
ஆச்சி : வெறுமன கொட்டாவி விட்டுட்டு முதலாளி போற கார், அவன் பங்களா எல்லாம் பாக்காம, கிட்ட போயி அவன் பொறுப்புணர்ச்சி, தில், திட்டமிடல் உழைப்பு இதெல்லாம் பார்த்தா நீயும் தொழில் அதிபர் தான்.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் வேஸ்டா.
ஆச்சி : அத யாருடா சொன்னா, நல்ல விசயம், நம்ம யேசு கிறிஸ்து சொன்ன அடிப்படை.
படுக்காளி : யேசு கிறிஸ்துன்னா!!! இந்த கிறிஸ்துவ மதம் உண்டாக்கினாரே அவரா
ஆச்சி : ஆமடா,

படுக்காளி : ஆச்சி, அவர் கடவுள். கடவுள் எப்படி கம்யூனிஸ்ட் ஆவார்.
ஆச்சி : நல்லா கேட்டுக்க. ‘வானத்து பறவைகளை பாருங்கள். அது விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. ஆயினும் உங்கள் வானகத் தந்தை அவற்றை போஷிப்பதில்லையா. எதை உண்போம், எதை குடிப்போம் எதை உடுத்துவோம் என அது குறித்து நீங்கள் கவலை பட வேண்டாம்.
படுக்காளி : ஆங்... ஆச்சி, இத நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சொல்லி இருக்காரு
ஆச்சி : என்ன்ன்னு
படுக்காளி : ‘மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்’
ஆச்சி : அதே தாண்டா. சமமான சமுதாயம் ஆன்மீகமா கம்யூனிசான்னு நீயே டிசைட் பண்ணு
படுக்காளி : ஆச்சி கம்யூனிசம் காத்து மாதிரி
ஆச்சி : ஏண்டா காணாம போச்சுக்கிறியா
படுக்காளி : இல்ல ஆச்சி, எங்கும் நிறைந்து இருக்கு. பில் கேட்ஸ்லயும் இருக்கு, பைபிள்லயும் இருக்கு, சினிமாவிலயும் இருக்கு. கம்யூனிசம் பேசினா, எல்லாரும் என்ன பிஸ்துன்னுவாங்க. கை தட்டெல்லாம் சல்லிசா கிடைக்கும்.

அதனால..... ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.

ஆச்சி : விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதை ராமனுக்கு சித்தப்பனான்னு ! கிளம்பிட்டியாடா....

சமர்ப்பணம்:

என் பதினைந்து வயதில் தொடங்கி மேடை நாடகம், ரேடியோ நாடகம் என என் கைபிடித்து இது தான் நடிப்பு, இது தான் கதை, வசனம் என பாடம் சொல்லிக் கொடுத்த என ஆசான் முல்லை எம். பெர்க்மான்ஸ் அவர்களை இந்த தருணத்தில் வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.

‘வாடுவதற்கா இந்த மலர்கள்’ எனும் மேடை நாடகத்தில் நான் கிறிஸ்துவ பாதிரியார். குண்டடிபட்டு அடைக்கலமாய் வரும் நக்ஸலைட் திவிரவாதியுடன் நடக்கும் விவாதம் விதைத்த்தே இந்த பதிவின் வித்து அல்லது மூலம்.

4 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.

    சோஷியலிசம், கம்யூனிசம் இரண்டுமே மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை தான்.

    இந்தியாஒரு சோஷியலிசக் குடியரசு.

    திருவள்ளுவரின் திருக்குறள் சோஷியலிசத்தை அடிப்படையாகக் கொண்டவை.

    புத்தன் ஒரு பொதுவுடமைப் பிரியர்.

    பெரியார் ஒரு கருப்புச்சட்டைக் கம்யுனிஸ்ட்.

    அண்ணா ஒரு சோஷியலிசவாதி.

    புரட்சித்தலைவர் பாடல்களும் கொள்கைகளும் வசனங்களும் ஆட்சி நெறிமுறைகளும் சிந்தனைகளும் சோஷியலிச வெளிப்பாடுகள்.

    பராசக்தி காலத்து கருணாநிதி பிச்சைக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வந்த பொதுவுடைமைவாதி. (இப்போது பழுத்த முதளாளித்துவவாதி).

    இயேசு கிறிஸ்து முழுக்க முழுக்க ஒரு பொதுவுடைமைவாதி.

    பணக்காரனை சொத்து அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கச்சொன்ன புரட்சிக்காரர்.

    ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைவதை விட பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினம் என்ற போராளி.

    கோவிலிலே வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் பின்னியெடுத்த தீவிரவாதி.

    தொடரும்

    பதிலளிநீக்கு
  2. தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர்.
    தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி
    இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி

    சந்தேகமே இன்றி இயேசு கிறிஸ்து ஒரு பொதுவுடைமைவாதி.

    பதிலளிநீக்கு
  3. படுக்காளிக்கும் ஆச்சிக்கும் ஒரு வேண்டுகோள்.

    இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பொதுவுடைமை கொள்கைக்குள் அடங்காத, எனக்கு புரியாத இரண்டு விடயங்களை தயவு செய்து விளக்குங்களேன்.

    ஓன்று. "இருப்பவனுக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லாதவனிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும்" .

    இரண்டாவது. ஊதியம் பற்றிய உவமை: முதலாளி காலையில் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மதியம் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மாலையில் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். நாளின் முடிவில் சம்பளம் வழங்கும் பொது எல்லோருக்கும் ஒரே சம்பளம் வழங்குகிறார். காலையிலிருந்தே வேலை செய்தவர்கள், மாலையில் வேலைக்கு வந்து சில மணி நேரங்களே வேலை செய்தவர்களும் தங்களைப் போன்றே சம்பளம் வாங்குவதை எதிர்த்து போர்குரல் எழுப்பும்போது சம்பளம் கொடுப்பது தனது விருப்பம் என்றும் காலையில் வேலைக்கு சேர்ந்தவர் ஒத்துக்கொண்ட சம்பளம் அவருக்கு கிடைக்கும் பொது அடுத்தவர் சம்பளத்தைப் பற்றி கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை இல்லை என்கிறார்.

    இது காலையில் சேர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியா ? மாலையில் சேர்ந்தவருக்கு வழங்கப்படும் தாராளமா ?

    பதிலளிநீக்கு
  4. நல்லாருந்துச்சி. உங்களுடைய மற்ற பதிவுகளையும் சமயம் கிடைக்கும்போது படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு