நேத்து கோவிலுக்கு நடுஇரவு ஜெபம் சென்றோம். உறக்கத்தை உதறி விட்டு பாதி ராத்திரி கோவிலுக்கு வருவது சுக அனுபவமே.
வானத்து நட்சத்திரங்கள் சில, பூமிக்கு வெக்கேஷேனுக்கு வந்து கோவிலின் வெளிச்சுவரில் குந்திக் கொண்டிருந்தது. குந்திக் கொண்டிருப்பது சும்மா இல்லாமல் தும்மிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் குதூகலமாய் இருந்தது. தூங்கத் தயாராய் கண்கள் மட்டும் சொருவிக் கொண்டு நிற்க, பள பள உடையுடன் கும்பல் கும்பலாய் விசுவாசிகள். அவர்கள் நடுவே, சுறுசுறுப்பாய் சில வாலெண்டியர்கள் ஆண்களும் பெண்களுமாய். பார்வையாளர்களை விட வா(லெ)லிண்டியர்களின் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி.
பேமிலியா வந்திருக்கீங்களா, எங்க உங்க ஒய்பு, அவங்களா சரி... சரி... சின்ன புள்ள இருந்தா லெப்ட்ல போங்க, இல்லன்னா ரைட்டுல என நம்மை மேய்ந்து கொண்டிருந்தார் அந்த நல்ல மேய்ப்பன்,. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் அதை இணைத்திருந்த சிவப்பு பட்டையில் சார்ஜா கோவிலின் பணக்காரத்தனம் தெரிந்தது.
பண்டிகைன்னா மட்டும் கோவிலுக்கு போகும் பெஸ்டிவல் கிறிஸ்டியன்களால் கோவில் கொஞ்சம் திமிறி சிரமப் பட்டு கொண்டிருந்தது. க்ளோஸ்ட் சர்க்யூட் புரோக்ஜனில் பூஜை வெளி திட்டில் தெரிந்தது. எந்திரிச்சு போக வசதியா இருக்கும், இங்கயே இருப்போம் என ஒரு நற்சிந்தனை கும்பல் அங்கேயே பட்டறை போட்டது.
சே, அப்பாவும் அம்மாவும் சர்ச்சில எவ்வளவு இன்வால்வ்ட்டா இருப்பாங்க, நாமும் நம் குடும்பமும் இது மாதிரி கோவில் பூனையா இருக்கணுமே என மனம் அவசர திட்டமிட்டது. காசா பணமா திட்டம் தான் திகு திகுன்னு வருமே, செயலாக்கம்தேன் திரு திருன்னு முழிக்கும். அது பத்தி நமக்கென்ன கவலை, அத பின்னாடி பார்ப்போம்.
கோவிலின் உள்ளே, ஏசி குளிர் நல்லா போர்வை மாதிரி போர்த்துச்சு. காங்கிரிட்டு மேடையில் கொப்பும் குலையுமா மஞ்சப் பூ பூத்திருந்துச்சு. மூக்க உறிஞ்சு எப்படியாவது மோப்பம் புடிக்கலாம்ன்னா ஹூம்.. ஹூம்... பேப்பர் பூ மாதிரி பார்க்கத்தேன் பவுசு, ஸ்மெல்லு ஸ்மைலுதேன் என பல்லிளித்தது.
சைடு பூரா மறைச்சு பெரிய டெக்கரேஷன. கருப்பு கலர் மலை பேப்பர்ல, அங்க இங்க பூத்த வாடின செடி. ஏ நல்லாதேம்ல இருக்கு டெக்கரேஷன் அசத்திப்புட்டாங்களே என அடிமனம் கூவியது. நட்ட நடு செண்டர் மையத்தில , தெர்மகோல் பாறை வட்ட வடிவத்துல அடைச்சு இருந்துச்சு. ஆங்... அந்த தெர்மகோல் திறந்து உள்ள இருக்குற உயிர்த்த சேசு தெரிவாரு. ஐடியா நல்லா இருக்கே. நாமளும் வீட்டுல இதமாதிரி செய்ய பார்க்கணும். அது சரி குடில் வைக்கிறது கிறிஸ்துமஸ் தான, ஈஸ்டருக்கும் அலவ்ட்டா... அலர்ட்டா யோசிக்கணும்.
அலம்பலா டிரஸ் பண்ணிக்கிட்டு விளம்பரம் படம் எடுக்கப் போறாங்களோ என ஐயப்படும் வகைகளில் ஐயாக்களும் அம்மா மார்களும். இண்டெர்வியுக்கா வந்திருக்காக இம்பரஸ் பண்ணிரதுக்கு என கேக்கலாம்ன்னு தோணுது சில கோட்டு போட்ட கனவான்கள பார்க்கும் போது.
சுத்தமா, உங்களுக்கு சௌகரியமா ஏதாவது உடுத்துனா என்ன. ஏன், என்ன மாதிரி ஒரு டீ சர்ட்டோ அரை கை சட்டையோ போட்டா போதாது. சமூக அங்கிகாரத்துக்கு இங்கயும் கடை விரிக்கணுமா என நான் கேட்டால், ‘ஏண்டா ஊரோட ஒத்து வாழேன் என சில நல்ல இதயங்கள் வாளெடுக்கும்.
பூசையின் முன்னுரை ஒரு கிரகஸ்தனின் குரலில் தொடங்கியது. பரவாயில்லையே, மக்களை முன்னிறுத்தி நல்லாதான் நட்த்துறாங்க கோவில என ஷொட்டு சொட்டு சொட்டாய் வழிந்தது.
முந்தி பூசை வேற மாதிரி இருக்குமே. இப்ப புதுசாவில்ல இருக்கு. ஆல்பாவும் ஒமேகாவும் என மெழுகுவத்தில கோடு போடுவாரே எங்க அது. இந்த இரவிலேதான், இந்த இரவிலேதான்னு ராகம் போட்டு போட்டு வாசகமா வாசிப்பாங்களே எங்கே அது. தீர்த்தம் மந்திரிப்பாங்களே எங்க அது என சில பூசையின் பிர்காக்களை காணவே இல்லை. இப்ப மாத்திட்டாங்களோ, நமக்கு சொல்லவே இல்ல. ஆடிக்கும் அம்மாவாசைக்கும் அங்கனக்குள்ள போனா அப்படித்தேன்.
பிரசங்கத்துல பெரிய வெடி பத்த வைச்சாரு நம்ம சாமியாரு. மக்களே, மக்களின் மக்களே, பெருங்குடி மக்களே, பூசை முடிஞ்சதும் குடிக்கப் போற மக்களே. 1986 ல Last Temptation of Jesus படம் பார்த்துருக்கீங்களா, இல்ல Da vinci Code நாவல் படிச்சுருக்கீங்களா, படமாவது பார்த்துருக்கீங்களா, சரி கேமரூன் படம் The Last Tomb of Jesus அதாவது பாத்துருக்கீங்களான்னு கேள்விய தூக்கி நம்மகிட்ட வீசுனாரு. ஒண்ணும் விளங்கல.
சாமியார் பாராட்டினாரு. பரவாயில்லையேப்பா, இவ்வளவும் கேட்ட பின்னாலயும் நீங்க கோவிலுக்கு வந்திருக்கீங்களே உங்கள பாராட்டணும். நீங்க எத நம்புறீங்க, இந்த வேத புத்தகத்தையா, அல்லது அந்த கதைகளையா என கேட்டாரு. என்ன பதில் சொல்றது எனக்கு புரியல. பைபிள தான் நம்புறோம் என சிலர் குரல் கொடுதாங்க.
என்னுடைய பகுத்தறிவு கொஞ்சமே கொஞ்சம் முழிச்சு, ஒரு கேள்வி கேட்ட்து. சரிப்பா, வெள்ளி கிழமை சேசு, சிலுவையில செத்தாரு. கூடி இருந்தவங்க எல்லாம், ஆமா செத்துட்டாருன்னு சொல்லி அவரோட உடம்ப கல்லறையில வைச்சுட்டு போயிட்டாங்க. அப்புறமா வந்து பார்த்தப்போ அங்க உடம்பு இல்ல. அவரு உயிர்தெழுந்துட்டாரு.
அப்படின்னா என்னதான் நடந்துச்சு. ஆவியை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன் என சிலுவை மரத்தில் தொங்கிய படி யேசு கொடுத்த உயிரை தந்தை திரும்ப கொடுத்து விட்டாரா. அந்த உயிர் திரும்பி புதைக்கப்பட்ட உடலில் புகுந்து கொண்டதா.
இது புதுமை அல்லவா. அற்புதம் தானே, மிகவும் நல்லதல்லவா. இத வைச்சே விட்டத பூரா புடிச்சு புடலாமே. மக்கள பூரா அவர் வசம் திருப்பி புடலாமே, அத ஏன் விட்டுட்டாரு.
அப்படி திரும்ப கிடைத்த உடலையும் உயிரையும் ஏன் உடனிருந்த சீடர்களே அடையாளம் காண முடியாமல போனது. கை கால்களின் ஆணி காயத்தை காண்பித்து தன்னை அவர் அறிமுகம் செய்தாரே. அதன் பின்னர் ஏன் நாற்பது நாளில் இந்த அற்புத மரணம் வென்ற உடலும் உயிரும் ஏன் வானகம் செல்ல வேண்டும்.
கேள்வியின் வேர்கள், கொஞ்சம் கிளை விட அது போகும் திசை பார்த்து நான் விழித்தேன். பயந்தேன். இது தேவையா, விடை காண முடியுமா, விடை கிடைக்குமா. விடை தெரிந்தால் கூட விடை புரிந்தால் கூட பயன் உணடா.
‘டாடி வீட்டுக்கு போவோமா, பசிக்குது, தூக்கம் வருது’ செல்ல மகள் என் கை சுரண்டி கூப்பிட. ஐய்யோ, மணி 12 ஆச்சே, நாளைக்கு ஆபிஸுக்கு போணுமே. ஆமா அந்த கஸ்டமர் கடிப்பானோ. சே இந்த வண்டி பார்க்கிங்கில இருந்து வெளிய எடுக்க முடியலயே. இனிமே வண்டிய விடும் போது எடுக்கறதுக்கு தோதா விடணும்.
இப்ப வீட்டுக்கு போற வழியில எங்க ஈஸ்டர் எக் கிடைக்கும்.
கேள்விகளும் கடமைகளும் சிந்தனையை ஆக்கிரமிக்க கோவிலில் கேட்க ஆரம்பித்த கேள்வி ஏங்கோ புதைந்து போனது.
அருமையான நடையில் எழுதியிருக்கீங்க, இன்றைக்கு பண்டிகை கால கிறிஸ்தவர்கள் நிச்சயமாக பெருகிப் போனது வருத்தம் அளிக்கும் விஷயம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி எட்வின், தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
பதிலளிநீக்குஅடிக்கடி வந்து ஆலோசனை சொல்லுங்கள்
அன்புடன்