ரத்த சிவப்பிலே பாலைவன மண். எங்கு பார்த்தாலும் சிவப்பாய் ஒரு பூமி. சுட்டெரிக்கும் வெயில். உஷ்ணக் காற்று மணல் வாரி தட்டும். நடக்கும் பொது கால்கள் புதையும். சொக்கன் குடிஇருப்பு என்று பெயர் இந்த ஊருக்கு.
தூத்துக்குடி அருகிலே இந்த ஊர் சில ரகசியங்களையும் சரித்திரத்தையும் தன்னுள் ஒளித்து வைத்து இருக்கிறது. அந்த ரகசியங்களை பங்கு வைக்க படுக்காளி நான் விரும்புகிறேன். வாருங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னே நடந்த ஒரு உண்மை சம்பவம் சொல்லி நம் பதிவை தொடங்குவோம்.
கால்நடைகளை நம்பி இங்கே ஜீவனம்.
ஆடு மேய்க்க கிளம்பினான் நம் சிறுவன் ஒருவன். கருத்த மேனி, மெலிந்து இருந்தது அவன் உடுத்திய அரை குறை ஆடையில் தெரிந்தது. கோவணம் தானே இங்கு ஊர் முழுவதும் தேசிய ஆடை. பித்தளை தூக்கு சட்டியில் மதியம் உண்பதற்காய் பழைய சோறு.
கையில் ஒரு கழியோடு தோளில் போர்த்திய கந்தல் ஒன்றோடு அன்றாட பணிகளை தொடங்கினான் அவன். பச்சையாய் வளர்ந்து இருந்த குத்து செடிகள் சிலவற்றில் கால்நடைகளை மேய விட்டு விட்டு அங்கிருந்த மரத்து நிழலில் சாய்ந்தான். தருவை ஏரி குளிர்ந்த காற்றை வீசி அடித்தது. நடந்த களைப்பும், குளு குளு காற்றும் கண்ணை அசைக்க வாய் திறந்து ஒரு கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தான்.
"செத்த மூதி கண்ணை கட்டுதே, இப்ப தூங்கினா கருத்த ஆடு ஓடி போயிரும். அவன பிடிக்கிறது பெரிய துன்பம், என்ன செய்யலாம் கட்டி போட்டுட்டு கட்டையை போட வேண்டியது தான்" என மனசுகுள்ளே பேசி விட்டு ஆடு கட்ட எதாவது தோது படுமா என்று சுற்றி முற்றி பார்த்தான்.
சற்று தொலைவில் ஒரு கட்டை. சிவந்த மண்ணில் ஒரு கருப்பு கட்டை. கை தடிமனில் ஒரு அடி உயரத்தில். பட்டு போன மரமா, அல்லது யாரும் இறுக்கி அடித்த ஆப்பா. தெரியவில்லை.
அதன் பலம் பரிசோதிபோம் என்று ஆட்டி பார்த்தான். அசையவில்லை. கை தான் வலித்து. ஏறி நின்று பார்த்தான். ஒரு ஆட்டமும் இல்லை. அவனுக்கு வினோதமாய் இருந்தது. சின்ன கட்டை. பட்டு போன மரத்தின் கிளையும் இல்லை. ஆனால் பலமாக உள்ளது. சரி மண்ணை தோண்டி பார்ப்போமே, என்று கையில் உள்ள கம்பு கொண்டு மண்ணை விலக்க ஆரம்பித்தான். சில அடி தூரத்தில் படுத்த வாக்கில் அதே போல் இன்னொரு கட்டை. என்னடா இது.
தலை உயர்த்தி பார்த்து சக சிறுவர்களை உதவிக்கு அழைத்தான். அவர்களும் உதவிக்கு வந்து, சில மணி துளிகள் செலவழிக்க ஒரு கிறிஸ்துவர் சிலுவை அங்கே இருந்தது. 'டே வேத கோயில் சிலுவைடா' என்று குரல் கொடுத்தனர்.
சிலுவை விவரம் கிராமத்தில் தெரிய ஆரம்பித்தது. காட்டு தீ போலே அந்த ஊரை சுற்றி கொண்டது. ஊர் மொத்தமும் அந்த இடத்தில கூடியது. சிலுவை இருந்த இடத்தில இன்னும் தோண்டினர். ஒரு சிமெண்ட் தரை தென்பட்டது.
எல்லோருக்கும் ஆச்சரியம். சரி மேலே தோண்டுங்கள் என்று எல்லோரும் கை கொடுத்தனர். தோண்ட தோண்ட ஆச்சரியம் விரிந்தது. ஒரு பனை உயரம் தோண்டி பின் ஒரு கோவில் அங்கு இருப்பது தெரிந்தது. மண்ணை விலக்கி எல்லோரும் அந்த கோவிலினுள் வாசலை திறந்தனர். நீண்ட அந்த கோவில் உள் அறையை கண்டு பேச வார்த்தைகளின்றி நின்றனர். அங்கே அவர்களுக்கு ஒரு ஆச்சரியம். நட்ட நடு பூசை மேடையில் ஒற்றையாய் ஒரு மெழுகு திரி. சுடர் விட்டு பிரகாசமாய் எரிந்து கொண்டு இருந்தது.
தன்னிசையாய் எல்லோரும் முழந்தாள் இட்டு இறைவனை வணங்கினார்கள். அதிசயம் அற்புதம் என்று எல்லோரும் கூக்குரல் இட்டனர்.
ஊரே திகைப்பும் ஆச்சரியத்திலும் உள்ள போது அந்த திண்ணை கிழவியை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவள் பார்வை தொலை தூரத்தில் நிலை பெற்று இருந்தது. கண்ணில் சில நீர் துளிகள். வாய் மட்டும் முணு முணுத்து கொண்டு இருந்தது.
“புண்ணியவதி ..... அநியாயமாய் அவளை கொன்னுடிங்களே!!! தலையிலே ஆணி இறங்கினபோ அவ என்ன பாடு பட்டுருப்பா, அவ சாபம் நம்ம சும்மா விடுமா”
............. தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக