பக்கங்கள்

என்னை எனக்கு பிடித்தது

துபாய் சாலை... காலை நேரம்.

அலுவலகம் செல்லும் அவசரத்தில் – ஆண்களும் பெண்களும் வாகனங்களில் இருந்தார்கள். வழுக்கும் பாதையில் வண்ண வண்ண வாகனங்கள்  நழுவிக் கொண்டிருந்தன. அந்த வாகனக் கூட்டத்தில் நானும் இருக்கிறேன்….

இன்னொரு வாடிக்கையான நாள் என நினைத்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கு தெரியவில்லை. நான் இன்று ஒரு புதிய அனுபவத்தை பெறப் போகிறேன் என்று.

சன்னலைத் திறந்தால் தலைமுடி மட்டுமல்ல – கண்களே கூட கலங்கும் வாகன வேகம். சட்டென என் காரின் வேகத்தை குறைக்க வேண்டியதாயிற்று. ஆம்  சாலை ஓரத்தில் அந்த இளம் பெண்ணை கண்டேன்.

அப்பெண், உள்ளூர் பெண். நீண்ட கருப்பு அங்கியிலே. வெள்ளை வெளேரென… வயது  சுமார் 18-19 இருக்கலாம்.

அடித்து சுழன்ற காற்றிலே அவள் அங்கி பட படத்து விலகியது. உள்ளே உடை ஒன்றும் இல்லை. ஆண்டவா....   என்ன இது என்று எண்ணும்போதே அவளை சுற்றி ஒரு 5-6 பேர் நிற்பது தெரிந்தது. கூர்ந்து கவனித்ததில் அழுத கண்களும் அடி வாங்கி கன்னிய முகமும் தெரிந்தது. ஏதோ பிரச்சினை. வாகனத்தை மெதுவாக்கியபடி..

கண்ணாடி சன்னல் வழியே கேட்டேன் "ஏதேனும் உதவி வேண்டுமா"

"என்னை பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் விட முடியுமா" – இது அவள்

"சரி ஏறி கொள்ளுங்கள்"

அந்த கும்பலில் இருந்து அவள் தப்பித்தது போல் அவசரமாய் உள் அமர்ந்தாள்... உள்ளே அமர்ந்ததும் குப்பென்று ஒரு துர் நாற்றம். முந்தின இரவு உற்சாக பானம் அருந்தி வாந்தி எடுத்த வாசனை. கை பையை துழாவி நறுமண தைலம் எடுத்து பூசி கொண்டாள். அவளுக்கும் உரைத்து இருக்க வேண்டும்.

அமர்ந்து சிறிது நேரம் ஆனாலும் பட படக்கும் விழிகளுடன் அரை நிர்வாணம் தந்த அசௌகரியமும் ... அவள் நிலை கொள்ளாது இருந்தாள்.

மெலிதாய் சொன்னேன். நான் உங்கள் சகோதரன் போலே, எனக்கும் மகள் உண்டு. ஏதோ பிரச்னை என்று தெரிகிறது. வருந்த வேண்டாம் பாதுகாப்பான கரங்களில் உள்ளிர்கள் என்று உணர்ந்தால் போதும். வாக்கியம் முடிக்கும் முன்னே கண்ணீர் பிரிட ஒ…. என்று அழத் தொடங்கினாள்.

குழந்தையும் இல்லாத பெண்ணும் இல்லாத அந்த இரண்டாம் கட்டான் அழுவது பாவமாய் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை, என்றாலும் அழுகை அவள் உணர்ச்சியை சரி படுத்தும் என்பதும் புரிந்தது.

அழட்டும், அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். சற்று நேரத்தில் அழுது முடித்த பின் முன்னால் குனிந்து வைக்கப்பட்டு இருந்த தேனிர் கோப்பையை பார்த்தாள். நான் குடித்து முடித்து வைத்து இருந்தது. அதை கையில் எடுத்து ஏதேனும் மிச்சம் உள்ளதா என்றும் பார்த்தார்.

ஐயோ என்ன கொடுமை இது. இன்று பார்த்து தண்ணிர் கூட இல்லையே. மன்னிப்பு கேட்டேன்.

அதற்குள் என் கண்களில் சாலையில்….. ஒரு போலீஸ் காரர் தென் பட்டார். இரு சக்கர வாகனத்துடன் டிராபிக் கண்ட்ரோல் செய்பவர்…..
 
வாகனத்தை  நிறுத்தி அவர் அருகில் சென்று சுருக்கமாய் சொன்னேன் "யார் என்று தெரியாது, என்ன பிரச்சினை என்றும் தெரியாது, காவல் நிலையம் செல்ல வேண்டும் என்று மட்டும் சொன்னார்.. என விளக்கினேன்.

காவலர் என் வண்டியின் அருகில் சென்று அவளுடன் பேசினார்.

எனக்கு தெரியாத/ புரியாத மொழியில் இருவரும் பேசி கொண்டார்கள்.

மொழி புரியவில்லை… ஆனாலும் என்னால் சிலவற்றை உணர முடிந்தது.

சில வார்த்தைகள், சில உணர்வுகள்  அந்த விஷயத்தை விளக்கத்தானே செய்கின்றன.. மெலிதாய் எனக்கு  புரிந்தது ஒரு பாலியல் வன்முறை அரங்கேறி இருக்கிறது. அது என்ன.. எப்படி நடந்தது... என ஆர்வம் இருந்தாலும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முனைப்பு என்னிடம் இல்லை.

 பாவம் சிறு பெண்… ஏதோ ஒரு அசம்பாவிதம்…. அது என்ன என கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாத என் மனதை… நான் உற்று நோக்கினேன்… அப்போது…. என்னை எனக்கு பிடித்தது.

சிறிது நேர பேசி விட்டு வந்த……  காவலர் என்னிடம் சொன்னார்.. இப்போது நான் புரிந்து கொள்ளும் ஆங்கிலத்தில்...  "என்னை பின் தொடர்ந்து வாருங்கள், அருகில் உள்ள காவல் நிலையம் வரை"

ஒரு விண்ணப்ப தொனியில்... நான் "அலுவலகத்திற்கு செல்ல வேண்டும், நீங்களே பார்த்து கொள்ள முடியுமா" என்றதை கண்களால் மறுத்தார்.. "மன்னிக்க வேண்டும், நீங்கள் வந்தால் தான் சரி"

சரி ஆனது ஆச்சு, முடித்து விட்டு சென்று விடுவோமே என்று வண்டியை எடுத்து அவர் பின்னால் சென்றேன்.

அவரோடு சென்றதால் சாலை விதிகளை மீறி ஒரு வழி பாதையில் எதிர் திசையில் சென்றேன். அவசர காலத்தில் காவல் வண்டிகள் செல்லும் சமிக்கை - சைரன் ஒலியோடு விரைவாய் சென்ற அந்த பயணம் ஒரு புதிய அனுபவம்….

சாலையில் செல்லும் கார்கள் எல்லாம் கூட… என் வண்டியை ஆர்வமாய் பார்த்தது… யார் அது உள்ளே.. .என சில எட்டிப்பார்த்தது… நான் மெலிதாய் சிரித்தபடி. பயணிக்கிறேன்….

அந்த எஸ்கார்ட் போலீசுடன்.. துபாய் நகரில்.. கார் ஓட்டியது… வித்தியாசமாய் இருந்தது.... என்னை எனக்கு பிடித்தது...

அரபியில் எழுதப்பட்ட, காவல் நிலையத்தில் வண்டி நின்றது... எங்களை எதிர்பார்த்து நின்றிருந்த பெண் காவலர்... ஒரு போர்வையுடன் என் வண்டி அருகில் வந்தார்...

...
 
இந்த காவலர் அதனுள் தகவல் தந்து ... எங்களை வரவேற்க்க தயாராய் இருந்திருக்கிறது....

பெண் காவலர், போர்வையைப் போர்த்தி, அந்த பெண்ணை ஆதரவாய் அணைத்தபடி கொண்டு சென்றார்…. அந்த பெண் இறங்கி சென்றதும்... மெதுவாய் நான் இறங்கினேன்...

சட்டென அவள் என் டீ கோப்பையை பார்த்தது நினைவுக்கு வந்தது.

பார்வையில் பட்ட பெட்டி கடையுள் சென்று குடிக்க தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து, மெல்லிய நடையில் உள் நுழைந்தேன்... அவள் அதற்குள் உடுத்தி அப்பெண் காவலருடன் பேசிக் கொண்டிருந்தாள்..

தூரத்தில் இருந்தபடி, பாட்டிலை காட்டினேன்.. அவள் ஓடி வந்து அதை. நன்றியோடு பெற்று கொண்டாள்.

காவல் நிலையம். மரியாதையாய் என்னை ஒரு அறையில் இருக்க செய்து விட்டு அந்த பெண்ணை அழைத்து சென்று தனியாய் விசாரித்து கொண்டு இருந்தார்கள்

காவல் நிலையம் ஒரு மாதிரியான இடம். சட்டம் மீறுபவர்களும், அதனால் பாதிக்க பட்டவரும் அதை கண் காணிப்பவர்களும் உள்ள இடம். சராசரி மனித மென்மை அங்கே தொலைந்து போய்  (பொய்) இருக்கும்.

பார்வையிலே ஒரு சந்தேகம் இருக்கும். காற்றிலே ஒரு வன்முறை தூக்கலாய் இருக்கும். மென்மை மனம் கொண்டவர்கள் அங்கே அசௌகரியமாக இருப்பார்கள். நானும் அங்கனமே.


சீக்கிரம் முடித்து விட்டு போனால் தேவலை என்பதாய் அமர்ந்து இருந்தேன். தனியாய் அமர்ந்து இருந்த அறையில் புயல் போலே ஒரு பெண் காவலர் வந்தார்.

"
சரியாக எங்கே அந்த பெண்ணை பார்த்திர்கள்" ... நான் விளக்கமாய் அந்த இடத்தை சொன்னேன். சரி என்று சொல்லி விட்டு வேகமாய் நகர, அவசரமாய் அவரை வழி மறித்து கேட்டேன். "நான் செல்லலாமா" மறுத்து சொன்னார் "இது பெரிய பிரச்சினை, நீங்கள் அமருங்கள்"

லேசான பயம். தேவை இல்லாமல் ஆழம் தெரியாமல் கால் விட்டேனோ. என்னவெல்லாம் நடக்குமோ என்று பலவீனமான ஒரு சிந்தனை. சராசரி சிந்தனை என்னை அப்பிப் பிடித்தது.

தலை சிலுப்பி என்னை நானே கடிந்து கொண்டேன். என்ன தவறு செய்தாய். ஒன்றும் இல்லையே. பின்னே என்ன.... என்ன ஆகி விடும். எது ஆனாலும் பரவாயில்லை. இறுதி வரை நின்று பார்த்து விடு. சுரீர் என்று அந்த சிந்தனை என்னை சமப் படுத்தியது. அமைதி ஆனேன்.  போராடும் குணம் என்னுள் தெரிந்தது… அப்போது…. என்னை எனக்கு பிடித்தது.

நேரங்கள் கடக்க ஒரு உயர் காவல் அதிகாரி வந்தார். "மன்னிக்கவும் நேரம் ஆகி விட்டது, உங்களை காக்க வைத்து விட்டோம், அவசர கதியில் அந்த சிலரை பிடிக்க சில ஏற்பாடுகள் செய்தோம் அதனாலையே இந்த தாமதம் என்றார்" உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியுமா.... நான் பதில் ஏதுவும் சொல்லாமல்.. தலை அசைத்து...  தெரியாது என்பதாய் சொன்னேன் .

அமர்ந்து விவரித்தார்… இப்பெண் துபாய் அல்ல… வெளியூர்….. ஆண் நண்பர்களோடு…. நேற்று மாலை இரவு விடுதி ஒன்றில் இந்த பெண் உற்சாக பானம் அருந்தி இருக்கிறார்.

பின்னர் வண்டியில் அழைத்து செல்வதாய் சொன்ன சிலரோடு சென்ற போது மயக்க மருந்து உபோயோகித்து வன்முறையில் ஈடு பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணிற்கு அவர்கள் யார் என்றோ, அந்த இடம் எது வென்றோ தெரியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பித்து வந்திருக்கிறாள்….

நல்ல உள்ளம் கொண்ட உங்களின் சமயோகித உதவியை நன்றி கூறுகிறார். இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம், தங்கள் உதவிக்கு நன்றி என்று அழுத்தமாய் கை கொடுத்தார். என் தொலைபேசி எண்ணையோ, விலாசம் என எதுவும் கேட்காமல்...

’CELL எண்ணை; வாங்காமல்….. ’என்னை செல்..!!!!!!’  என சொன்னது... ஆறுதலாய் இருந்தது..

வெளியே வந்து... வெளிக் காற்றை சுவாசித்தபோது... இலகுவானது.. ஏதோ ஒரு பெரிய பாரம் இறங்கியது போல.. என் பயங்கள்/ சந்தேகங்கள் எனை விட்டு நழுவி இருந்தது.

ம்... அந்தப் பெண் பாதுகாப்பாய் இருக்கிறாள்… இனி என்ன செய்வாள்… என்ன முடிவெடுப்பாள்.. அவள் குடும்பம் என்ன செய்யும்… என்ன சொல்லும்…

தெரியாது…

சின்னப்பெண்... தன்னையும் உலகையும் புரிந்து கொள்ளும் பக்குவம் பெறவில்லை… வாழ்க்கை அனுபவமோ இல்லை.

இன்பம் தேடும் வயது இது என்று புரிகிறது.

இன்பம் தேடுதல் இயல்பும் நியாமும் என்றாலும்..... எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய அவசியம் பெண் குழந்தைகளுக்கு உண்டு. ஒரு பெண்ணை பெற்ற தகப்பன் என்ற சிந்தனை தந்த அறிவுரையோடு மெல்ல காவல் நிலையம் விட்டு வெளி வந்தேன்.

இனி அவளைப் பார்ப்பேனா என்பது தெரியாது…..

என் மகளாய்த் தோன்றிய அப்பெண்ணை… மனதால் ஆசிர்வதித்தேன்…. அவளிடம் பேசினேன்….

இந்த சம்பவத்தில் இருந்து பாடம் படி… இதை மற….

வாழ்க்கை மேல் அவ நம்பிக்கை கொள்ளாதே… வாழ்வு உன்னதமானது தான்.

மனிதர்களிடம் கவனமாயிரு…. உன்னைச் சிதைக்கும் மிருகங்களோடு… கனிவும் கருணையும் கொண்ட மனிதர்களும் இப்புவியில் உண்டு…

வண்டி ஓடத் துவங்கியது... ஒரு மாறுதலுக்காய், ஏசியை அணைத்து விட்டு, சன்னலை மெதுவாய் திறந்தேன்... காற்று சுழன்று அடித்தது

2 கருத்துகள்:

  1. நந்தவனத்தில் தென்றலின் கையை பிடித்து நடந்த படுக்காளி
    இங்கே ஒரு புயலின் கையை பிடித்து பாலைவனத்தில் நடந்த
    நிகழ்வு இது.

    செயலின் வன்மத்தை சட்டென உணர்ந்த படுக்காளியின் அந்த
    சமயோசிதம் பாராட்டுக்குரியது.

    உதவி வேண்டுமென்ற போது மகாபாரத்தில் வந்த கண்ணன் போல,
    இந்த பெண்ணின் துயர் அறிந்து படுக்காளி அங்கு நின்றது போற்றுதலுக்குரியது.

    அந்த பெண் சில வன்முறையாளர்களால் வன்புணர்வு செய்யப்பட்டதை
    அறிந்த நம் படுக்காளி, உடனே சற்றென்று முடிவு செய்து அந்த பெண்ணை
    காவல்நிலையம் அழைத்து சென்றது பாராட்டுக்குரியது.

    அந்த கலவரத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, படுக்காளியின் கூர்மையான விழிகள் அந்த பெண்ணின் உடையை ஊடுருவியது எப்படி என்பது வியப்பிற்குரிய விஷயமாக படுகிறது.

    என்னவென்றாலும், காலத்தால் செய்த படுக்காளியின் உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மானப்பெரிது.

    வேண்டும்போது கடவுள் எல்லா நேரத்திலும் அவதாரமாய் தோன்றுவதில்லை. இது போன்ற படுக்காளிகள் மற்றும் பாட்டாளிகள் மூலமும் தான் தோன்றுகிறார். வேண்டிய உதவிகள் செய்கிறார். அதுபோலவே இந்த நிகழ்வையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    எல்லாம் நன்மைக்கே என்ற ரீதியில், அந்த பெண், இந்த வன்புணர்வில் இவருக்கும் பங்கு உண்டு என்று கை காட்டாமல் இருந்தது, அவர் செய்த புண்ணியம். ஏதோ, ஒரு நடுக்கத்திலோ, அல்லது கலக்கத்திலோ கைகாட்டி இருந்தால் கூட, படுக்காளியின் பாடு மிகவும் திண்டாட்டமாக போயிருக்கும். அதுபோல் நடக்காததற்கு அவருக்கு அல்லாவோ, முருகனோ அல்லது அவர் வழிபடும் ஏசுவோ துணை இருந்திருக்கிறார்கள். தெய்வத்தை நாம் என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன, தெய்வம் தெய்வம் தானே??

    நன்றி படுக்காளி. உங்களை போல் சிலர் இங்கு உளரேல், இங்கு எல்லோருக்கும் பெய்கிறது மழை. இனி, நான் எங்கு, எப்போது மழையில் நனைந்தாலும், அதில் உங்கள் பங்கு உண்டு என்று உங்களை நினைத்துக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  2. துணிவு என்பது அஞ்சாதது அல்ல. அஞ்சுவது அஞ்சி அதன் விளைவுகளை உணர்ந்து தீர்க்கமான முடிவோடு அதை எதிர்கொள்வது தான் துணிவு.

    உங்களின் செயல் துணிவான செயல்.

    பாரதி கனவு கண்ட அந்த ஏழாவது மனிதனே !

    உனக்கு உன்னைப்பிடித்தது.
    எனக்கு உன்னைப்பிடித்தது ..
    படைத்ததை படித்ததும் பிடித்தது...
    பிடித்ததை படைத்ததால் பிடித்தது ....

    பதிலளிநீக்கு