பக்கங்கள்

மதினிக்கு கல்யாணம்


மதினிக்கு மகிழ்ச்சியா என்று தெரியாது, எனக்கு கொள்ளை குஷி. பள்ளிக்கு விடுப்பு அல்லவா, வகுப்புக்கு கல்தா அல்லவா. நேற்றே நண்பனிடம் எழுதி கொடுத்து விட்டேன் லீவ் லெட்டர். குடும்பத்தின் அங்கிகாரத்தோடு பொய்யாய் சொன்ன, உடல் நலக் குறைவு நினைத்தாலே இனித்தது. வேலிக்கு ஓணான் சாட்சி, முனுமுனுப்பாய் ஆச்சி சொன்னார். கல்யாண வீட்டு பக்கம் வாத்தியார் வரக் கூடாது மனதினுள் பிரார்த்தனை.

காலையிலே கிளம்பியாச்சு குடும்பமாக. காலை சாப்பாடு அங்கே தான். நெருங்கிய உறவினருக்கு மட்டும் தரும் உச்சகட்ட மரியாதை. மாமுல் உறவு என்றால் மதியம் தாலி கட்டும் சோறு மாத்திரம்.

சபாரி சூட் போட்டு துரை கணக்கா படுக்காளி. காலிலே கருப்பு ஷூ, நேற்று போட்ட பாலிஷில் இன்று பளபளக்கும். சைஸ் மட்டும் சின்னது. பெரு விரலில் வலிஎடுக்கும். வலி என்றாலும் ராஜ நடைக்கு குறைவு இல்லை. உலகமே இனிமையாய் இருக்கும்.

தெரு முனையில் கல்யாண வீடு தெரியும். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. கம்பத்தில் குழாய் கட்டப்பட்டு இருக்கும். உட்பகுதியில் மின்னும் சௌன்ட் சர்வீஸ் பெயர். கரகரப்பாய் இறை துதி வரவேற்கும், காதுகளை குடையும். இசையை விட இரைச்சல் அதிகம். கல்யாண வீட்டுக்கு வழி கேட்க கூடாது என்பதற்காக இப்படியா சௌன்ட் விடுவது.

சாமி பாட்டு தான் முதலில் போடணும், கொள்கை விளக்கம் தருவார் ஒலி பெருக்கி மேலாளர். சமிபத்தில் வெளியான திரைப்பட பாடல் இசை தட்டை நேர்த்தியாய் அடுக்கி வைப்பார். இளஞ் சோட்டு பிள்ளைகள் ஆவலாய் பார்த்திருக்கும்.

வீட்டு வாசலிலே குலை வாழை இருபுறமும், நட்ட நடு மையத்தில் (ஏங்க இப்படி ஒரு வார்த்தை பிரயோகம்) நல்வரவு பல்புகளாய் பளிச்சிடும்.
சிரித்த முகத்தோடு உறவினர் வரவேற்பார். சாப்பிட்டு விட்டு அப்புறம் பேசலாம் அக்கரையாய் சொல்லுவர். கண்கள் துலாவி நம் சோட்டு நண்பர்களை தேடும்.

வீட்டின் பின்புரத்தில் உணவு அருந்த இடம் இருக்கும். மெகா சைஸ் டின்னில் தண்ணிர் ததும்பி நிற்கும். திரை சீலைகள் மறைத்து இருக்க உண்ணுபவர் வெளி தெரியாது இருக்கும். ஒழுங்கில்லா தரையிலே செங்கலில் முட்டு கொடுத்து துருபிடித்த மேசை வரிசையாய் நின்றிருக்கும். மேசையின் அருகிலே உட்கார இருக்கை உண்டு. பொதுவாக நொண்டியாய் இருக்கும், சிலதுக்கு வயதானதால் கால்கள் ஆடும். கவனமாய் உட்கார வேண்டும் இல்லை என்றால் சேதாரம் அதிகமாய் இருக்கும்.

சோத்து பிரியர்கள் சிலர் அங்கிருந்து நகர்வதே இல்லை. அதற்கு பின்புறம் அடுப்பு மூட்டி சமையல் தூள் பறக்கும். மதி உணவிற்கான காய் கரி இப்போதே வெட்ட பட்டு கொண்டிருக்கும். அழுக்கான சமையல் காரர் பரபரப்பாய் இருப்பார். வேர்த்து விறுவிறுத்து கையில் கத்தியோடு இருப்பார்.
சாப்பிட உட்காரும் போது உறவினர் காண வருவார்.

புதிய உடுப்பிலே கல்யாண வீட்டினர் படபடக்கும் கால்களோடே நடப்பார். காது துளைக்கும் மங்கல ஒலியிலே உரக்கப் பேசுவது மட்டும் அல்லாது, காது வரை குனிந்து பேச வேண்டும்.
முற்றத்தில் உள்ள தென்னங் கீற்று பந்தல் குளுமையாய் பரந்திருக்கும். கால் நீட்டி உடம்பை தளர்த்த கண்கள் சொக்கும்.

கல்யாண நிகழ்வுகள் மங்களகரமாய் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக