பக்கங்கள்

குப்பை (சிறுகதை)

(அன்பிற்கும், பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய வாசக தோழமைக்கு வணக்கம்… உங்களுக்கும் எனக்கும் சௌகரியமான ஒரு தலைப்பை இக்கதைக்கு வைத்துள்ளேன்….அது என்ன............கதை படித்து முடிந்தவுடன்… கதை எப்படியிருக்கு… என்ன கதை…. என யாராவது கேட்டா….ஹும்..குப்பை என நீங்கள் சொல்லலாம்…. என்னிடம் யாராவது, ‘என்ன எழுதியிருக்கிற….???? என கேட்டால் குப்பை கதை எழுதியிருக்கிறேன் என சொல்லலாம்… ரொம்ப வசதி… சரி இனி கதைக்கு செல்வோமா)

நம் கதை நடக்கும் ஊரில்…. காலை இன்னும் தன் கணக்கை தொடங்கவில்லை, விடியாத காலை… விடிகாலை,… ஃப்ளீஸ் விடியேன் காலை…. என வேண்டுமானால் சொல்லலாம். மிதமான குளிர், மெல்லிய காற்றுடன் இணைந்து, மெலிதாக வருடிக் கொண்டிருந்தது.

மாதவன் அப்போது தான் விழித்தான். இரவு தூக்கம் முழுமையாக கிடைத்ததால், காலை எழும் போது புத்துணர்ச்சியாகவே இருந்தது.
சன்னல் வழியே வெளியில் பார்த்த போது, மனைவி குனிந்து கோலம் போடுவது தெரிந்தது. இந்த கோணத்தில் அவள் மிக அழகாக இருப்பதாக பட்டது. போர்வையை உதறி… மெல்லிய நடையில் முற்றம் வந்தான்.

அவன் வரும் சத்தம் கேட்டு, வாசுகி சிரித்தபடி, காப்பி தரட்டா என எழ முற்பட்டாள்…. அவசரமாக நிறுத்தி, இல்ல முடிச்சுரு… அவசரம் இல்ல அப்புறம் குடிக்கலாம் என்றான். திண்ணையில் இருந்து, சுவரில் சரிந்து, தோள்களை குறுக்கி, கை இரண்டையும் கால்களுக்கிடையே கொடுத்து, இருந்தான்.அவன் உட்கார்ந்திருந்த விதத்தை உட்கார்ந்து என எழுதுவதோ, அல்லது படுத்தான் என சொல்லுவதோ… பொருட் குற்றமாகி விடும். முகம் மலர்ந்து இருந்தது. கண்கள் குருகுருவென வாசுகியை மேய்ந்தது… 

அந்த நேரத்தில்… சிவபூஜையில் கரடி… சாரி…!!! எதித்தாத்து ஏகாம்பரம் மாமா குரல் வந்தது…

‘மாதவன் சார் … மாதவன் சார்……’
மனதிற்குள் மாதவன் மருகினான்… குருகுரு பார்வையை மாமா பாத்திருப்பாரோ… சே… இன்னும் கொஞ்சம் உஷாரா இனி இருக்கணும்..
‘குட் மார்னிங்… சொல்லுங்க சார்….’
‘கவனிக்கிறீங்களா….’
‘ஹாங்… ஆமா சார்… சொல்லுங்க..
‘இல்ல ஒரு வாரமாச்சு… குப்பை எடுக்கிற பையன் வரவேயில்லை… பிக் ப்ராப்ளம் சார்… குப்பை சேர்ந்து வீடே நாறுது… நம்ம வார்டுல தான் இந்த பிரச்சனையே… 6 வது வார்டு இப்படியில்ல, டெய்லி குப்பை வண்டி அங்க போகுது… அக்கம் பக்கம் எல்லா வார்டும் சரியாயிருக்குது.. நம்ம வார்டு மட்டும் தான் பிரச்சனையே… நம்ம கவுன்சிலர் வேஸ்ட்… ஒரு பவர்சும் காட்டுறதில்ல’

வாசுகி மெல்லமாக எழுந்து உள் சென்றாள்…
மாமா தொடர்ந்து பேசினார், 4 வது வார்டு குப்பை பையன் நடுங்கிறான்… காலைல அவன கூப்பிட்டு கேட்டேன்… கவுன்சிலர் கோவிச்சுக்கிடுவார் சார்ன்னு..  நடுங்கி என்கிட்ட பேசாமலே ஓடுறான்… அப்படின்னா என்ன அர்த்தம்….
பலவீனமாக, சிரித்த முகம் மாறாமல்… கோணாமல்… ஆர்வமாய் கேட்கும் பாவனையில் மாதவன் அவரை பார்த்துக் கொண்டே கேட்டான்… கரெக்ட்டு சார்…

சும்மா விடக் கூடாது… நான் ரெண்டு மாதிரி இதுக்கு யோசிச்சு இருக்கேன்…. எத செய்யலாம்… கரெக்ட்டா சொல்லுங்க…

உள்ளுக்குள் காப்பி கலக்கும் சத்தம் கேட்டது….. சூடான காப்பி என்பது மாதவன் எப்போதும் விரும்புவது… உடனே சென்றால்.. சூடாக குடிக்கலாம், இவர் பேச்சை முடித்து நம்மை பேக் செய்து அனுப்ப நேரம் எடுத்தால்… காப்பி…. க்க்க்க்க்க்க்க்க்க்காப்ப்பியாகத்தான் இருக்கும்…

வயதில் பெரியவர் வேறு. அசப்பில் மதிக்க கூடிய மாமாவின் சாயலோடு இருக்கிறார். முகம் வெட்டி பேச, நம் கலாச்சாரம் என்றுமே சொல்லிக் கொடுத்ததில்லை… மாமா தொடர்ந்தார்…

‘சார்… மாதவன் சார்… சொல்லுங்க ரெண்டு வழி வச்சிருக்கேன்… ஒண்ணு மொட்டை….
ஹா…………த்தூ………… காறி எச்சிலை தூற துப்பினார். மாதவன் யாருக்கு என கேட்க நினைத்தான், அவரே தொடர்ந்தார்… மொட்டை பெட்டிஷன்… க்ளீனா போட்டுரணும்… பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்டுக்கு… சுகாதார அமைச்சருக்கு…. சிசி டூ முதல்வர்… மொட்டை பெட்டிஷன பாத்தவுடனே ஹோல் ஆபிசே பதறிடும்… உடனே சொல்யூஷன் கிடைச்சுறும்… உடனே நடவடிக்கை எடுத்துறுவாங்க…
அடுத்தது… இன்னொரு ஐடியா…. நம்ம குப்பை வண்டி, அங்க குளத்துக்கிட்ட தான் இருக்குது… யாருக்கும் சொல்லாம, அந்த வண்டிய தள்ளிட்டு வந்து, இங்க வைச்சிடணும்…. அவன் வண்டிய தேடி அலையோ அலைன்னு அலைஞ்சு.. இங்க வந்து அதை எடுக்கட்டும்…. ரெண்டுமே ஓர்க் அவுட் ஆகிற ஐடியாக்கள் தான்…. பெருமிதமாய் சிரித்தார்.

ஏன் இப்படி விபரீதமாக சிந்திக்கிறார்…. பார்க்க சாதுவாக இருந்தாலும் இந்த பாய் பாய்கிறாரே…. அவரது அப்புராணி முகத்துக்கு பின் இப்படி ஒரு சிந்தனை கூட இருக்கிறதா… கொஞ்சம் ஆச்சரியத்துடன் மாதவன் சிந்தித்தான்….
சரி இவருக்கு என்ன பதில் சொல்வது, ரெண்டில் எந்த ஆப்ஷன் சரியென சொல்வது.. ரெண்டுமே திராபை என சொல்லலாமா… வேண்டாம்… அவரை காயப்படுத்த வேண்டாம் அவர் காயம் படாமல் அவர் ஆயுதத்தை மடக்கி வைக்க என்ன சொல்லலாம்… எப்படி சொல்வது, காலையில் உணர்ந்த மாலதியின் அழகும்…. புத்துணர்ச்சி காலையும், சூடான காப்பியும் கூட லேசாய் மறந்து போனது…

வாழ்க்கையை ஏன் இப்படி சிக்கல் ஆக்கணும்… ஏன் இப்படி போராடணும்… அடுத்தவன ஏன் இப்படி இம்சிக்கணும்….

மெதுவான குரலில் மாதவன் சொன்னான், ‘சார், களமறிந்து போராடணும்… திட்டமிட்டு செயல்படணும்… எதிராளி பலம் பலவீனம் தெரியணும்… 

அதனால முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். பத்து நாள் வரலேண்ணா, ஒரு வேளை, குப்பை வண்டிக்காரன் உடம்பு சரியில்லையோ, அல்லது ஊருக்கு எங்கயாவது அவசரமா போயிட்டானோ…. அத தெரிஞ்சுக்கணும்…

அது மட்டுமில்ல, நீங்க சொல்ற மாதிரி பயமில்லாம இருக்கான்னா, ஏன்னு யோசிக்கணும்…. ஒருவேளை கவுன்சிலருக்கு உறவாய் இருக்கலாம்… என்ன ஏதுன்னு தெரியாம நாம எதுவும் செய்யக் கூடாது…. அவசரப்படாதீங்க… உங்களுக்கு தெரியாததா…

மாதவன் மெதுவாய் நகர்ந்து உள் சென்றான்… இவர் யோசிப்பாரா… ஏதேனும் மாறுதல் அவருக்குள் நடக்குமா… ஒரு குப்பை விஷயத்தில் கூட இப்படி குதர்க்கமாய் கூருரமாய் சிந்திக்கும் இவரை என்ன செய்வது…
ஒரு 60 வயசு ஆகிறது… இவரை இனிமேல் வளைத்து திருத்த முடியுமா…

யப்பா….நல்ல வேளை…. இப்படி சொல்லலேண்ணா, ஒரு வேள குப்ப வண்டிய யாருக்கும் தெரியாம தள்றதுக்கு நம்மளயும் கூப்பிட்டுருப்பாரு… இல்ல மொட்டை காய்தம் எழுதுறதுக்கு வார்த்தை கேட்டுருப்பாரு என பலவிதமாய் யோசித்த படி… காப்பி சூடா இருக்குதா என பார்க்க அடுப்படி நோக்கி நடந்தான்…

பின் நடந்த அனைத்துமே…. மாதவனின் அன்றாட வாழ்க்கை காரியங்கள். இக்கதைக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவை. அதனால் அத்தனையையும் விட்டு விடுவோம்.

அன்று இரவில் மாதவன் முழு நாள் செய்த வேலை பழுவில் நன்கு உறங்கினான்…. எண்ணை கத்திரிக்காய் ரசித்து சாப்பிட்டான், ஏப்பம் தூக்கலாய் வந்தது… அதில் கத்திரிக்காயின் மணம் கூட இருந்தது… தூக்கத்தில் ஒரு கனவு கண்டான்….

மானேஜர், அவன் ஃபைலை அவனிடம் திருப்பி கொடுத்தார்… திட்டினார்… ஏன் இப்படி கவனக் குறைவாக வேலை செய்கிறாய்… மாதவனுக்கு புரியவில்லை… எல்லாம் சரியாகத்தானே செய்தோம், ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்தோமே… என்ன தவறு என யோசித்து படி ஃபைலை திறந்தான்…

பைல் முழுக்க குப்பை…. ஒரு வாரக் குப்பை… யாரும் அள்ளாத குப்பை… ஆபிஸே நாற்றமெடுத்தது…  நாற்றம் குப்பென ஆபிஸெங்கும் பரவியது….. ஓவ் என யாரோ சப்தமிட்டார்கள்… பார்த்தால் சப்தம் வந்த திசையில், ஸ்டெனோ ரிசப்ஷனில் கோலம் போட்டு கொண்டிருந்தாள். கோலம் அழகாக இருந்தது.

ஃபைனான்ஸ் ஹெட் அங்கிருந்து வேக வேகமாக வந்தார்…. ஃபைல் குப்பை, மானேஜர் மாதவன் எல்லோரையும் பார்த்தார்….. கோபத்தில் பல் கடித்தார்…. இடி இடியென சிரித்தார்… என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க…. சும்மா விட மாட்டேன்… என்னை என்ன ஒண்ணும் தெரியாதவன்னு நினைச்சீங்களா…  ‘ரெண்டு சாய்ஸ் இருக்குது… ஒண்ணு ஹெட் ஆபிஸுக்கு மொட்டை கடிதம் எழுதப் போறேன்… அல்லது…. இந்த ஃபைல யாருக்கும் தெரியாம…. தூக்கிகிட்டு போய்… என் கப்போர்டுல வைச்சுருவேன்…. ஜாக்கிரத என்றார்…

மாதவன் குரல் உயர்த்தினான்… பொறுமையை விட்டான்… நிறுத்துங்க சார்…. உங்க வயசுக்கு மரியாத கொடுத்து பேசாம இருக்கேன்… அசப்புல மலேசியா மாமா மாதிரி இருக்கீங்களேன்னு நினைச்சா…. அதிகம் பேசுறீங்களே… ஏன் சார், ஏன்.. இப்படி குதர்க்கமா யோசிக்கிறீங்க… இந்தா பாருங்க… குப்பை வண்டி வரலேண்ணா, என்ன… குடியா முழுகிப் போச்சு… ஏன் இப்படி சத்தம் போடுறீங்க….

மிஸ்டர் மாதவன், ஹௌ இர்ரெஸ்ப்பான்சிபிள்…பொறுப்பில்லாம அக்கறையில்லாம பேசுறீங்க.. எனக்கென்ன வந்துச்சுன்னு எல்லாரும் பேசாம இருக்கிறதாலதான் இப்படி நாறுது… இப்படியே எல்லாரும் போனா யாருதான் பூனைக்கு மணி கட்டுறது…

சார், குப்பை வண்டி வரலயா… மூணு நாள் பாத்திட்டு…. வொய்ப கூப்பிட்டு, சரி, குப்பை ரொம்ப சேந்து போச்சு… ஒரு ப்ளாஸ்டிக் பையில போட்டு கொடு, ஆபிஸ் போற வழியில குப்பைய போட்டுறேன்.. அந்த லெவல்ல தான் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்க தயார்… குப்பை வண்டிக்காரன சேஸ் பண்ணி, அவனுக்கு மெம்மோ கொடுக்கிற லெவல்ல யோசிக்க நான் தயாரில்ல…  நீங்க இதை செய்யுங்க…

வெரிகுட்….அப்ப, நான் செக்க ஆட்டுவேன்… எள்ள ஆட்டுவேன்… எண்ணை வழியும் போது மட்டும் நீங்க வந்து டின்னோட நிப்பீங்க…. அதான உங்க லாஜிக்… நீங்க மட்டுமில்ல இந்த உலகமே… நோவாம நோம்பி…

சார், சமூகத்த திருத்துறது உங்க வேலைன்னா அத செய்யுங்க… செய்யாத என்ன மாதிரி ஆள விடுங்க… நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி எங்ககிட்ட தவில் வாசிக்காதீங்க…

சொன்னா பொத்துகிட்டு வருதே…. சுரக்காய்க்கு உரம் வெக்காம சுண்டலிக்கு மட்டும் பல் பிரஷ் பண்ணுவீங்களா..

சார், நல்லா கேட்டுக்கோங்க… நல்லா சாப்பிடணும், நல்லா தூங்கணும்… என் பொண்டாட்டிய ரசிக்கணும்…. இதுதான் என் வாழ்க்கை… இதுதான் என் பிரையாரிட்டி… சமூகத்த திருத்துறதோ, சமூகத்துக்கு ஹெல்ப் பண்றதோ இல்ல என் ஸ்கோப்.. புரிஞ்சுதா…

கோலம் போட்டு கொண்டிருந்த ஸ்டெனோ… எழுந்து உரத்த குரலில்…. கை தட்டினாள்… அவள் கையில் இருந்த கோல மாவு புகை மாதிரி பரவியது. ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்து… சூப்பர் என்பது போல் மாதவனிடம் காட்டினாள்.. பின் அந்த இரு விரல்களையும் வாய்க்குள் வைத்து…. அவள் வாய்க்குள் வைத்து…. விர்…விர்… என விசில் ஊதினாள்….

விர்…விர்… விசில் சத்தம் காதை பிளந்தது…

மாதவன் தூக்கம் கலைந்து விழித்தான்.. விர்…விர்… விசில் சத்தம் காதை பிளந்தது… என்ன இது, கனவில் தானே… விர்…விர்… விசில் சத்தம் காதை பிளந்தது…

அருகில் படுத்திருந்த வாசுகி, அடித்து பிடித்து எழுந்தாள்… குப்பை வண்டிக்காரன் வந்துட்டான்… அவன் விசில் சத்தம் கேக்குது… சாரி நீங்க தூங்குங்க… அவள் சென்றாள்…

சன்னல் வழி மாதவன் பார்த்தான்… குப்பை வண்டிக்காரன் புது சட்டை அணிந்திருந்தான்… அவன் ஏன் வரவில்லை… எதனால் ஒரு வாரம் வரவில்லை…தெரியவில்லை…. ம்… தெரியவே போவதில்லை….. இவனும் கேட்க மாட்டான்… இதெல்லாம் தெரிந்து கொள்ள முயன்றால் வாழவே முடியாது.

எதிர் வீட்டு மாமா குப்பை வந்து கொட்டினார். இனி அவர் இது பற்றி பேச மாட்டார் என மாதவன் நினைத்தான். மாதவன் சொல்ல நினைத்ததையும் அவரிடம் சொல்ல மாட்டான். கனவில் சொன்னதோடு சரி.
எதிர் வீட்டு மாமாவிடம் தான் உணர்ந்ததை, தான் நினைத்ததை சொல்லப் போவதே இல்லை… உபயோகிக்காத பொருட்களை குப்பை என்கிறோம்… உபயோகிக்காத சிந்தனையையும், சொல்லையும் குப்பை என சொல்லலாமா…

வாசலில் வாசுகி அதே போல் குனிந்து கோலம் போட்டு கொண்டிருந்தாள்… குப்பை வண்டி பையன், குப்பைகளை வாரிக் கொட்டிக் கொண்டிருந்தான்… வாயில் அவன் வைத்திருந்த விசில் விர்…விர்… என காதை குடைந்தது…

2 கருத்துகள்:

  1. //உபயோகிக்காத பொருட்களை குப்பை என்கிறோம்… உபயோகிக்காத சிந்தனையையும், சொல்லையும் குப்பை என சொல்லலாமா…//

    Idhu thaan super ji.... Kalakkunga

    பதிலளிநீக்கு
  2. தேங்க்ஸ் ஜி....

    இன்றும் நன்றியோடு தங்கள் அன்பை நினைவு கூர்கிறேன்..

    இப்படி எழுதுவதற்கு காரணமே நீங்கதான்...

    8- 9 வருசத்துக்கு முந்தி.. ப்ளாக்ன்னா என்ன... தமிழ் டைப்பிங்ன்னா என்ன... கூகுள் டிரான்ஸ் லிட்டரேட்ன்னா என்னன்னு அறிமுகப்படுத்தி... ஆலோசனை சொல்லி... கொஞ்சம் கொஞ்சமா... எழுத கத்து கொடுத்த... அன்பு.... இன்றும் என்னை நன்றியுடன் நினைவு கூர செய்கிறது............

    தேங்க்ஸ்.. தலைவா................

    பதிலளிநீக்கு