பக்கங்கள்

நம்பினார் கெடுவதில்லை...

பர்மா பஜாரின் அந்த கடையில் லேசான பதட்டத்துடன் நின்றிருந்தேன். விஷயம் வேறொன்றுமில்லை, இரு வாரங்களுக்கு முன் வாங்கிப் போன சிடி வேலை செய்யாததால் ரிடர்ன் செய்ய வந்திருக்கிறேன். உடனே வந்திருக்க வேண்டும், வேலைப் பளு, என்ன செய்வது.

இருந்தாலும் கடைக்காரர் என்னை அடையாளம் கண்டு கொண்டு..... சொல்லுங்க சார்.... !!! என்றதும் நிம்மதிப் பெருமூச்சு. சிடி வாங்கிப் பார்த்துவிட்டு, வேலை செய்யலயா…. சாரி சார் இந்த படம் ஸ்டாக் இல்லையே, வேறு ஏதாவது வாங்கிக்கிறீங்களா என்றார். மேலோட்டமாய் கண்ணை மேய விட்டு, அகப்பட்ட எதுவுமே மனசுக்கு பிடிக்காததால், கொஞ்சம் தயக்கமாய் நின்று கொண்டிருந்தேன்.

பரவாயில்ல சார், கேஷ் கொடுத்துறவா என அவர் கேட்க சந்தோசமாய் தலையசைத்தேன். கடைக்காரர் என்னிடம், எவ்வளவு சார் என்றதற்கு 40 என்று நான் பதில் தர, கடையில் வேலை செய்த பையன்.... இல்ல சார் 35 தான் என்றான். எனக்கு டவுட், 35 ஆ அல்லது 40ஆ. தீர்மானமாய் தெரியவில்லை, என்றாலும் கடையின் உரிமையாளர், சார் சொல்றாருல்ல… சரியாத்தான் இருக்கும் என எந்த தயக்கமும் இல்லாமல், சிரிப்புடன், 40 ரூபாய் கொடுத்து விட்டார்.

35 ஆ 40 ஆ என கேள்வி கேட்டுக் கொண்டே, கார் வரை வந்து விட்டேன். காரும் ஸ்டார்ட் செய்து கிளம்ப தயாரான போது, தயக்கம்… ஒரு வேளை 35 தானோ, சட்டென காரை நிறுத்திவிட்டு, குதித்து இறங்கினேன். விரு விரு வென வேகமாய் அவரிடமே திரும்பி வந்து, சரியா தெரியல சார், ஒரு வேளை பையன் சொன்னது சரியாயிருக்கும்… இந்தாங்க என ஒரு ஐந்து ரூபாய் காகிதத்தை....... அவர் மறுத்தும் !!!! ..... திணித்து விட்டு வந்து விட்டேன்.

மீண்டும் காரில் அமர்ந்த போது, மகிழ்ச்சி மற்றும் நிறைவு. ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு வந்ததா, இந்த மகிழ்ச்சி. இதயம் விம்மி பூரித்து இருந்ததை நான் உணர்ந்தேன். தலை உயர்ந்திருந்தது. மூச்சு சுகமான தாள லயத்தில் மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தது. உலகமே நல்லதாய், மனித நேயம் மின்னுவதாய் தோன்றியது.

நான் நினைப்பதை, உணர்வதை.... சில கேள்விகள் கேட்டு இன்னும் ஆழமாய் புரிந்து கொள்ள விரும்பினேன். என் எண்ணங்களை எடை போட்டு, பகுத்தறிவு வேலையை தொடங்கியது.

நம் எதிரில் இருப்பவர் நம்மை நம்புகிறார் என்பது, நமக்கு தரப்படும் மிகப் பெரிய அங்கீகாரம்... அவர் தரும் உச்சகட்ட மதிப்பு.

அந்த நம்பிக்கை தரும் உணர்வு .... எவரையும் கமிட் செய்து விடும். ஏமாற்ற சான்ஸே இல்லை. இல்லாமலா பின்னே… பாருங்களேன்…. வேலை மெனக்கெட்டா மறுபடி 5 ரூபாய திரும்பி கொடுக்க….. செல்ல சொல்லும்.

சக மனித நம்பிக்கை என்பது வரம். நண்பர்களுக்கிடையில், அலுவலகத்தில், குடும்பத்தில் இது அமைந்தால் வரப்பிரசாதம்.

சந்தேகம் என்பது சாக்கடை, நம்பிக்கை என்பது நறுமணம் கமழும் மலர் கொத்து.

தங்கத்தட்டாகவே இருந்தால் கூட, மண்ணை வைத்திருந்தால், அதையென்ன சாப்பிடவா முடியும்.

நம் மனம் எனும் தங்கத்தட்டை எதைக் கொண்டு நிரப்புவது எனும் முடிவு நம் கையில் உள்ளது.

நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக