பக்கங்கள்

உணர்வெனும் நீரோட்டம்...

எட்டயபுரத்து முண்டாசுக்கவி பாரதி, தமிழ்த்தாயின் அதிசயக் குழந்தை.

வலிமையான வார்த்தைகளை கோர்த்து வாசிப்பவர் மனதில் புத்துணர்ச்சியூட்டுவான். அது மட்டுமா, ஆழ்ந்த கருத்துச் செறிவுகளையும் செதுக்கி வைப்பதால், அவனை மகாகவி என நாம் கொண்டாடுகிறோம்.
அவனது ஒரு பாடலில் தத்துவ சிந்தனை மேலோங்கி, கேள்விகளால் நம்மை உலுக்கி எடுப்பான், உலக விசயங்களை எல்லாம் மூன்று மூன்றாக பகுத்து ஒரு பா புனைந்திருப்பான்.
உலக வாழ்க்கை என்பது என்ன. நாம் பார்ப்பது, பின்னர் நம் சிந்தை அல்லது அறிவு இது பற்றிய சிந்தனைகளை விரிவாய் வினவும் பாடலே அது.

பார்வையின் பரிமாணம் சொல்லும் போது, நம் பார்வையில் விரியும் காட்சிகளை சொல்லும் போது, மொத்தம் மூன்றே மூன்று பிரிவு தான். அவை நிற்பது, நடப்பது பறப்பது என்பான்.
அதே பாடலில் அதே மூன்று பிரிவுகளில், அறிவை சேர்க்கும் முறை பற்றி கூறும்போது.

கற்பது, கேட்பது, கருதுவது என்பான்.
அவ்வளவுதாங்க நம் அறிவு ஏற்பட்டது இந்த மூன்றே முறைகள் தான். நம்ம அறிவு கூட்டணும்னாலும் இந்த மூன்று வழிகள்தான்.
மாஞ்சு மாஞ்சு புத்தகம் படிச்சா மட்டும் போதாது, ஓடி ஓடி அடுத்தவர்கிட்ட பேசுனா மட்டும் போதாது, தனியாக இருந்து தகவல்களை உள்வாங்கி இதுதானா இப்படித்தான் இருக்குமோ என கேள்விகள் கேட்டு ஆலோசிப்பதும் பின் நாமாக ஒரு முடிவு வருவதும் கருதுவது என கொள்ளலாம். கருதுவதும் அறிவுக்கு மிக முக்கியம்.
அப்படி கருதிய ஒரு சிந்தனையை சுருதி சேர்ப்பதே இப்பதிவு. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தற்செயலாய் பார்த்தபோது நேர்ந்தது.

பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, ஆண்டு வந்த சிற்றரசன் நம் கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் உச்சகாலை பூஜையின் அதே நேரத்தில் அரண்மனையிலும் பூஜை செய்வது அவன் வழக்கம். பூஜையின் நேரம் அறிய திருச்செந்தூர் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை 40 கல் தொலைவிலும் வரிசையாய் மணி மண்டபங்கள் கட்டி, மணி ஒலிக்கச் செய்து, கோவிலில் பூஜை செய்யும் அதே வேளையில் அரண்மனையிலும் பூஜை செய்ததாக சரித்திரம் நமக்கு சொல்கிறது.
சிறு பிள்ளையாய் நான் இருந்த போது, இதென்ன வேலை மெனக்கெட்ட வேலை. இது அவசியமா, கோவிலில் நடக்கும் அதே நேரத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என என்ன கணக்கு. எத்தனை பண/ நேர விரயம் என நினைத்திருக்கிறேன். இன்னொரு பரிமாணத்தில் ஹூம்…..பாவம் தகவல் தொடர்பில் வேறு வழியில்லை. புராண காலத்தில் பூறாவை நம்பித்தானே போஸ்டல் டிப்பார்ட்மெண்டே இருந்தது. சேதி சொல்ல வேற வழி இல்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் ஒரு வீடியோ கான்பிரன்சிங்கில் ஒரு எஸ்.எம்.எஸ் சில் கூட முடித்து விடலாமே என தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்தும் சிந்தித்து இருக்கிறேன்.

ஆனால் இன்று பளிச்சென்று இன்னொரு பரிமாணத்தில் சிந்தனை பயணித்தது.

ஆண்டவனுக்கு பூஜை, அரசன் பூஜை செய்கிறான் எனும்போது, நாட்டு மக்கள் அத்தனை பேரும் என்ன செய்வார்கள். எண்ணத்தால் ஒருங்கிணைவார்கள் அல்லவா. அது நிச்சயம். மணி ஒலி கேட்ட உடனே மனதில் இந்த சிந்தனை எழுந்திருக்கும். ஒரு சிலர் பூஜையும் செய்யலாம். அதாவது செயலிலும் ஒருங்கிணைந்திருக்கலாம்.

ஒரு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே சிந்தனையில் ஒரே செயலில் கொண்டு வரும் அற்புதம் அல்லவா இங்கு நிகழ்கிறது. ஒரு உணர்வு / இறை உணர்வு நாட்டின் அத்தனை குடிகளிடமும் நீரோடை போல் இணைவது ஒரு மந்திரம் போல் எனக்கு படுகிறது. அது ஒற்றுமை வளர்க்கும், நாட்டுப்பற்றை ஊற வைக்கும்.

இச்செய்கையின் வலிமை புரிந்ததால், இதை இன்று நாம் ஏன் செய்ய முடியாது என கேள்வி கேட்கிறது.

இப்படி வைத்துக் கொள்ளலாமே, வருடத்தில் ஒரு நாள், ஒரே நேரத்தில், ஒரே உணர்வில் காலை பத்து மணிக்கு குழுமி ஒன்றாகிறோம் என வைத்துக் கொள்வோம்,
நம் தேசத்தின் எல்லா கொடி மரங்களிலும் தேசிய கொடி ஏற்றப்படட்டும். நம் நாட்டின் எல்லா குடிமகன்களும் அக்கொடியின் கீழ் ஒன்று கூடுவார்கள். தலை வணங்கி கொடி மரியாதை செய்து எல்லோரும் மௌனமாய் இருப்பார்கள். சரியாக 10.05 க்கு தேசிய கீதம் ஒலிக்கும். பின்னர் 10.08 க்கு அனைவரும் கலைந்து செல்வார்கள். என்று நாம் ஏன் செய்யக் கூடாது.
இது போல் நம் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு நடக்குமா. ஒரு தேசமே, ஒரே சிந்தனையில் ஒரே செயலில் ஈடுபடுமா.
இங்கு கூறுவதில் செலவு இல்லை, நேர விரயம் இல்லை. ஆனால் விளைவு பிரமாண்டமான ஆக்க சக்தி உண்டாக்கும்.
அதிகமில்லை ஒரிறு நிமிடங்கள் இப்படி மனங்களும் மனிதர்களும் இணைவார்களா, அப்படி நடந்தால் மகத்தான மனப் பகிர்வு இருக்கும் என நம்புகிறேன்.

6 கருத்துகள்:

  1. நண்பா நீங்க யாருன்னு எனக்குத்தெரியல ஆனா முல்லை பெர்க்மான்ஸ் உங்க ஆசான்னு ஒரு பதிவுல சொல்லி இருக்கீங்க. அவருடைய எழுத்துகளின் தீவிர வாசகன் நான். அவருடைய எல்லா ஆக்கங்களையும் படிக்க விரும்புகிறேன். அவரது புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?
    அவர் 70 களில் நம்வாழ்வில் எழுதிய கேள்வி - பதில், ஞானதூதனில் எழுதிய பீரங்கி பக்கங்கள், சாந்தினி பதில்கள், பேட்டிகள் இவை அனைத்தையும் தொகுத்து வெளியிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
    நன்றி
    DAVIS

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பர் DAVIS,தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

    //// முல்லை பெர்க்மான்ஸ் உங்க ஆசான்னு ஒரு பதிவுல சொல்லி இருக்கீங்க. அவருடைய எழுத்துகளின் தீவிர வாசகன் நான். அவருடைய எல்லா ஆக்கங்களையும் படிக்க விரும்புகிறேன். அவரது புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?
    அவர் 70 களில் நம்வாழ்வில் எழுதிய கேள்வி - பதில், ஞானதூதனில் எழுதிய பீரங்கி பக்கங்கள், சாந்தினி பதில்கள், பேட்டிகள் இவை அனைத்தையும் தொகுத்து வெளியிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. தெரிந்தால் தெரியப்படுத்தவும்////

    ஆசிரியராய், ஆசானாய், நட்புடன், என்னை நெறிப்படுத்தியவர் பெர்க்மான்ஸ் சார்.. வாய்ஸ் மாடுலேஷன் என்றால் என்ன, தொண்டையில் காற்று தருவது என்பது என்ன, டைமிங் என்றால் என்ன, என சில நுணுக்கங்களை கற்றுத்தந்தவர். என்னை சிந்திக்கவும் தூண்டியவர் அவரே.

    அவரது எழுத்துக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களிலும், சில மேடை நாடகங்களிலும், நடிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன்.

    முத்து நகர் விட்டு, திரை கடலோடி திரவியம் தேட கிளம்பியதால் இன்று அவரது தொடர்பில் இல்லை.

    தங்களை போலவே அவரது எழுத்துக்கள் வாசிக்கும் தாகம் எனக்கும் உண்டு, ஏதேனும் தகவல் தெரிந்தால் நிச்சயம் தெரிவிப்பேன், தாங்களும் அது போல் தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. மனத்தால் ஒன்றி இணைந்து இருப்பது தான் காதல்... வாழ்வதுதான் வாழ்க்கை. நாம் யாவரும் மனதால் ஒரே எண்ணத்தோடு, இணைய விரும்பும் உங்கள் எண்ணத்திற்கு ஒரு வணக்கம்... நல்லது... அப்படி நடந்தால் அந்த நொடியில் இருந்து நாம் தான் எவ் வுலகின் ராஜா... ஆமாம்... ஏன் ? உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒன்றாக நினைக்க... நடக்க தொடங்கினால்...

    செல்லத்துரை , மதுரை- துபாய்.

    பதிலளிநீக்கு
  4. தல படுக்காளி....

    முண்டாசு கவியை சக கவிஞர்களே அவரின் பிறந்த நாளின் போது தான் நினைக்கிறார்கள்... ஒரு மலர் மாலை வாங்கி “சாத்து”கிறார்கள்... உயிருடன் இருந்த போது, அவருக்கு ஒரு வேளை சோத்துக்கு வழி செய்யாத அயோக்கியர்கள் எல்லாம், இன்று குளித்து, விளையாடி மகிழ்வது பலப்பல கோடிகளில்...

    இது தான் நம் நாட்டின் நிலைமை...

    அதை விட கொடுமை.... பாரதியார் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார் என்று ஒரு அரசியல்”வியாதி” சொல்ல, இன்னொரு அல்லக்கை அரசியல்”வியாதி” எந்த படத்துலன்னு கேட்டானாம்... கலிகாலம்....

    வீரபாண்டிய கட்டபொம்மன்.... இவரை பற்றி பல்வேறான செய்திகள் வந்திருக்கின்றன... நாம் எல்லோரும் சிவாஜி வெள்ளித்திரையில் ”வரி, வட்டி, கிஸ்தி, மஞ்சள், எம் குல பெண்கள், மாமனா, மச்சானா, மானம் கெட்டவனே” என்றெல்லாம் கர்ஜித்ததை தான் கண்டிருக்கிறோம்... வீரபாண்டிய கட்டபொம்மன் மிகுந்த வீரம் மிக்கவர் என்று படித்திருக்கிறோம்...

    ஆனால், உண்மையில் அவர் பாஞ்சாலங்குறிச்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான வரியை எடுத்துக்கொண்டு ஜாக்சன் துரையை தேடி எல்லா ஊர்களுக்கு அலைந்ததாகவும், அவரை ஜாக்சன் பல பகுதிகளுக்கும் அலையவிட்டே, பின் வட்டியை வசூல் செய்ததாகவும் படித்த ஞாபகம்...

    இதில், எது வரலாற்று பிழை என்று தெரியவில்லை.

    எனக்கு தெரிந்ததெல்லாம் முறுக்கு மீசையுடன், தலைப்பாகையுடன் திரையில் கர்ஜித்த சிவாஜி கணேசன் என்ற கட்டபொம்மன்....

    கடித்து துப்பி, தமிழ் பேசிய ஜாக்சன் துரையாக ஜாவர் சீதாராமன்....

    தப்பா நெனக்காதீங்க.......வர்றேன் “தல”.........

    பதிலளிநீக்கு
  5. /// R.Gopi சொன்னது…
    முண்டாசு கவியை சக கவிஞர்களே அவரின் பிறந்த நாளின் போது தான் நினைக்கிறார்கள்... ///

    என்ன செய்யுறது ஜி! அவரது தமிழ் மறந்ததால் தான் சில தறுதலையாய் சுற்றுகிறது. வளரும் தலைமுறைக்கு அவரை நினைவுபடுத்தும் நம் முயற்ச்சிகள் நிச்சயம் தொடரட்டும் தலைவரே.

    /// வீரபாண்டிய கட்டபொம்மன்.... உண்மையில் அவர் பாஞ்சாலங்குறிச்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான வரியை எடுத்துக்கொண்டு ஜாக்சன் துரையை தேடி எல்லா ஊர்களுக்கு அலைந்ததாகவும், அவரை ஜாக்சன் பல பகுதிகளுக்கும் அலையவிட்டே, பின் வட்டியை வசூல் செய்ததாகவும் படித்த ஞாபகம்...

    இதில், எது வரலாற்று பிழை என்று தெரியவில்லை.////
    வரலாறு எனும் போதே சம்மன் இல்லாமல் சர்ச்சை ஆஜராகிவிடும் அல்லவா ஜி. அரசுக் கோப்புக்கள், ஆவணங்கள் இப்படி கூறுகின்றன. நாட்டுப் புற பாடல்களும் சில இலக்கியங்களும் எதிர் திசையில் கூறுகின்றன. என்றாலும் மணி மண்டபம் மேட்டரு உண்மைதான் தலைவரே, இன்னைக்கும் இந்த மண்டபங்கள் இருக்குது.

    //// எனக்கு தெரிந்ததெல்லாம் முறுக்கு மீசையுடன், தலைப்பாகையுடன் திரையில் கர்ஜித்த சிவாஜி கணேசன் என்ற கட்டபொம்மன்....கடித்து துப்பி, தமிழ் பேசிய ஜாக்சன் துரையாக ஜாவர் சீதாராமன்....////
    ஜி… ஜாவர் நினைச்சுப் பார்த்து குறிப்பிட்ட உங்களுக்கு நிச்சயம் ஒரு ஓ போடலாம். சினிமாவில அன்னிக்கு தேதியிலயே மைதா மாவு ஸ்டார்ட் பண்ணினது அண்ணாத்தக்கு போட்ட மேக்கப்ப்பூ… தான்.

    பதிலளிநீக்கு
  6. //// cdhurai சொன்னது…
    நாம் யாவரும் மனதால் ஒரே எண்ணத்தோடு, இணைய விரும்பும் உங்கள் எண்ணத்திற்கு ஒரு வணக்கம்... நல்லது... அப்படி நடந்தால் அந்த நொடியில் இருந்து நாம் தான் எவ் வுலகின் ராஜா... ஆமாம்... ஏன் ? உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒன்றாக நினைக்க... நடக்க தொடங்கினால்...//
    வருகை தந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
    நீதிமன்ற தீர்ப்பை நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தருணத்தில் ஒற்றுமை உணர்வும், நாட்டுப்பற்றும் நம்மை மதத்தின் பெயரால் சிதைத்து விடக்கூடாதே எனும் எண்ணம் தான் இப்பதிவு.
    அதை சுட்டிக்காட்டி பின்னூட்டம் இட்ட தங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு