இந்த பதிவில் மூன்று கடிதங்களை பதிவிட்டு விட்டேன்.
1. நான் மனோதத்துவ மருத்துவர் டாக்டர் ருத்ரனுக்கு எழுதியது
2. என் அண்ணன் அக்கடித்த்துக்கு மறுமொழி
3. என் மறுமொழி
கடிதம் : 1
அன்புள்ள டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு,
தங்கள் பதிவு படித்தேன். தன்னையழித்தல் : மிக ஆழமான கருத்து பகிர்வு.
//// தற்கொலை என்றால் என்ன? தன்னுயிர் அழித்துக் கொள்ளுதல் தற்கொலை. ////
/// உயிர் என்பது எது? சிந்தையா செயலா? ////
நல்ல கேள்வி, ஆனால் ஒரு பதிலையும் சொல்லுங்களேன். மருத்துவர் என்பதால் உயிரின் பரிமாணம் தங்களுக்கு சிந்தையா செயலா என்பதாய் மட்டுமே தோன்றுகிறது.
என்னைக் கேட்டால், கம்புயூட்டரின் கிளாக் ஜெனரேட்டர் உயிர்.
பிராஸரோ, ஹார்ட் டிஸ்கோ, டி.சி. கரெண்டோ உயிர் அல்ல. கம்புயூட்டரைப் போல் மனிதனுக்கு, ஒரு ஆல்டேர்னேட்டிங் பல்ஸ் தருவது, மனிதனை செயல் படுத்துவதே உயிரின் வேலை. இந்து மித்தாலஜி படி குண்டலினி, எனும் தகவல் சரியாயிருக்குமோ எனவும் ஒரு சிந்தை.
/// ஒருவனது உணர்ச்சிகளை அவனது தன்மானத்தை அவனது ஒப்பனையென்றாலும் காட்டிக்கொள்ளும் உருவத்தைக் காலில் போட்டு மிதித்து கந்தலாக்கி காறி உமிழ்வது ஒரு கொலை என்றால், அதை நிறையவே செய்திருக்கிறேன். ////
ஹப்பா! என்ன ஒரு நல்ல சிந்தனை.
1. my name is Red. Oman Farakhi சொல்லும் விசயம் போல மிகவும் சுவாரசியமான தகவல்கள்.
2. இந்த பதிவு, ஒரு மனித வாழ்வு, இறப்பு, தத்துவம் என்பதாய்த்தான் எனக்கு தெரிகிறது.
புத்தகம் எழுத தேவையான ஒரு மேட்டரை பதிவோடு நிறுத்தினால் எப்படி. இன்னும் தொடருங்கள்.
அன்புடன்
____ (படுக்காளி)
கடிதம் : 2
உங்களைப் போன்ற ஒரு அறிவுஜீவிக்கு இது ஆழமாக சிந்திக்க வேண்டிய கரு.
என்னைப் போன்ற பண்பற்ற (பண்பட்ட) பகுத்தறிவுவாதிக்கு இந்த உயிர் / ஆன்மா சிந்தனைக்கு எளிய விடை உண்டு.
உடல் இயங்கிக் கொண்டிருக்கும் வரை உயிர் உள்ளது. விபத்தாலோ, உடல் நலக்குறைவாலோ, முதுமையாலோ, தேவையான சத்து மற்றும் தாதுக்கள் குறைந்ததாலோ உடல் இயங்க முடியாமல் போய் நின்று விடுகிறது. உயிரற்ற ஒரு உடல் தனது சுகாதாரத்திற்கு கேடு என்பதாலும் துர் நாற்றம் வீசும் என்பதாலும் - செதத பிணத்தை சாகவிருக்கும் பிணங்கள் - ஆறாவது அறிவின் படி - எரித்து, புதைத்து, நீரில் வீசி எறிந்து என இன்ன பிற வழிகளில் அப்புறப்படுத்தி விடுகின்றன. அவ்வளவு தான்.
ஆனால் - சக மனிதனின் இறப்பை இயற்கையின் நியதி என ஏற்றுக்கொள்ள உறவுகளும் உணர்வுகளும் தடுப்பதால் மனிதன் சோகமும் துக்கமும் கொள்கிறான்.
இந்த அவனது பலவீனத்தை ஆன்மீகவாதிகளும் மதங்களும் பயன்படுத்திக் கொண்டு இல்லாத கற்பனைகளை உருவாக்கி குண்டலினி சமைத்து கொண்டாடுகின்றன. வழக்கம் போல அங்ஙானத்தைப் பயன் படுத்தி விங்ஙானத்திற்கு சாயம் பூசுகிறது மெங்ஙானம். ஆறுதல் சொல்லப் புறப்பட்ட ஆன்மீகவாதிகள் ஆறாம் அறிவையே அழிக்கிறார்கள்.
இறந்தோர்கள் ஆன்மா வடிவிலே நம் நடுவிலேயே வாழ்கிறார்கள்..
சாந்தி அடையும் வரை புளிய மரத்திலே தொங்குகிறார்கள்...
மறுபிறவி எடுத்து மீண்டும் பிறந்து வருகிறார்கள்...
மறு உலகில் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்...
.....இப்படி அண்டப்புழுகுகளை அள்ளி விட்டு ஆதாயம் தேடுகிறது ஆன்மீகம்.
இப்படி குரூரமாக பதிலளித்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறேன். ஆணித்தரமாக என் கருத்தைச் சொல்லவும் உங்கள் சிந்தனையைத் தூண்டவும் வேண்டுமென்றே இப்படி எழுதுகிறேன்,
நிறைவாக ஒரு கேள்வி...
குண்டலினி / ஆன்மா போன்றவை மனிதனுக்கு மட்டும் தானா ? மற்ற உயிரினங்களுக்கும் உண்டா ? நான் நாளொன்றுக்கு நூறு கொசுக்களைக் கொல்கிறேன். இந்த கொசுக்களின் ஆவிகள் என்னை சுற்றிக்கொண்டிருக்கினவா ?
என்றென்றும் அன்புடன்
ஜோ பாஸ்கர்.
கடிதம் : 3
அன்பு அண்ணனுக்கு,
பிரமாதம்!!! சூப்பர். அக்கினிக் குஞ்சொன்றை இம்மெயிலில் (இம்மையிலும்) கண்டேன்.
ஆணித்தரமான கருத்து, அற்புதமான தமிழில்.
1. ஆன்மா இருக்கிறது என ஏன் நினைக்கிறாய் ?
2. மனிதம் உடலுடன் புல்ஸ்டாப் என ஏன் ஒத்துக் கொள்ள மறுக்கிறாய்?
3. ஆன்மா என ஒன்று இருந்தால் எல்லா ஜீவனுக்கும் உண்டா?
4. ஆன்மீகத்தின் நோக்கம் அறிவா, ஆதாயமா ?
எந்தக் கேள்வியுமே சாரம் குறைந்ததல்ல.
ஏன் எனக்கு உயிர் பற்றி இப்படி தோன்றியது. ஆன்மா என்ற ஒன்று உள்ளதாய் ஏன் உறுதி, என ஆணி வேரை உலுக்கி விட்டது. ஒரு வேளை நான் படித்த சில தகவல்களை உணமை என நம்பி நட்டாற்றில் நிற்கிறேனோ....
இதுதான் சரி என சொல்ல திடமும் திர்மானமும் இப்போது இல்லை. எனில் என்ன செய்ய.....
தங்கள் கேள்விகள் என்னுள் பிரசவித்த என் விடை தேடலை நம்புகிறேன். ...
அன்புடன்
_____ (படுக்காளி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக