கை பற்றி, மெல்லமாய் அழுத்தி, கண்கள் நேருக்கு நேர் சந்தித்து டாடி ஐ லவ் யூ.... என சொல்லி இருக்க வேண்டும். அப்போது சொல்லாமல், என் தந்தை இறந்து அவர் உடல் நடு வீட்டில் கிட்த்தியபோது அழுது கொண்டே ... டாடி ஐ லவ் யூ
திரும்ப திரும்ப மனம் சொன்னது. கண்கள் என் கட்டுப்பாடின்றி கண்ணீர் சிந்தியது.
அந்த வெப்ப நீர் பார்வையை மறைத்தது.. வெளி உலக பிரஞ்கை இன்றி எனக்குள் பேசிக் கொண்டு இருந்தேன்.
சாரி டாடி... இன்னும் உங்களை பார்த்திருக்கணுமோ. தவறி விட்டேனோ. ஒரு மனுசனாய் இருக்க வைத்ததே நீங்கள் தானே. இந்த உடல், உள்ளம், படிப்பு, சோறு, வாழ்க்கை தரம் என எல்லாம் நீங்கள் தந்தது தானே. பிறந்த நிலையில் நான் இருந்திருந்தால் அன்றே இறந்திருப்பேனே... தங்கள் கருணைக்கு.... நன்றி என வாய் வார்த்தையாய் சொல்லவில்லையோ.
நன்றி என எப்படி சொல்வேன், நான் உங்களின் மறு பிம்பம் தானே.
ஏன் இந்த அழுகை. ஏன் இந்த புலம்பல். ஏன் துயரம். மரணம் தெரியும் தானே. ஓ புரிகிறது... மெல்லிய உணர்வான கவிதையை என்னுள் கலந்து விட்டதாலும், தத்துவ சிந்தனையை என்னுள் தக்க வைத்து கொண்டதனாலேயும் தான் இந்த துயரம். இரண்டும் இல்லை எண்பது வயசு தகப்பன் சாகும் போது சமனம் தானே .
ஆறு மாதம் முன்பு விடுப்பு எடுத்து வந்த போது நானாய் நினைத்து கொண்டேன். அடுத்த முறை உங்களை உயிருடன் பார்ப்பேனா...... மனதினுள் கேள்வி கேட்டு. தெரியாது, சரியாய் சொல்லவும் தெரியாது என பதிலும் யோசித்தேனே. அந்த நினைப்பு வந்த்தால், உங்கள் அருகில் அமர்ந்து நிறைய நேரம் பேசினேனே. மெல்ல தோள் அணைத்து உங்கள் மறுப்பையும் மீறி, அருகில் இருந்த பூங்கா சென்று அமர்ந்தோமே. நீண்ட நேரம் உங்களை பேச விட்டு கண்கள் மூடி கேட்டேனே.
சுகர் இருக்குது, பிஸ்கட் சாப்பிடலாமா, என அக்கம் அக்கரையாய் சொன்னபோது, மலங்க மலங்க விழித்து, பொக்கை வாய் காட்டி சிரித்தீர்களே.... அப்போது புரிந்தது. நான் அறிந்த தந்தை காணாமப் போயாச்சு. ஆள் பாதியாய், ஆடையில் பாதியாய், கன்னத்து சதைகளை காற்றுக்கு கொடுத்து விட்டு, கண்களில் கருங்குழி கவிதை வாசித்திருக்க..... காலம் தங்களை சிதைத்து தான் இருந்தது.
அவசரக் குடுக்கையாய் அறிவுரை எல்லாம் சொல்லாது, எல்லாம் தெரிந்ததாய் நான் நடிக்காது, மழலையின் மன நிலையில் உங்களிடம் நான் கேட்டேன்... வேறு என்ன ஆசை. எதுவும் சாப்பிடணுமா, எதுவும் வேணுமா, சினிமா போகணுமா, உடுப்பு எதுவும் வேணுமா.... இதமான புன்னகையில் மறுத்து சிரித்த போது.............. உலகில் அழகு நீங்கள் தான் என தோன்றியது.
மெல்லிய வார்த்தையில் உங்கள் வாழ்வு வெற்றிகரமானது. உழைப்பால் முன்னேறி, நல்ல ஒரு குடும்பம் சமைத்த்தை நினைவு கூர்ந்து எல்லாம் நல்லதே என நாம் இருவரும் கருத்தில் இணைந்தோமே. மெல்லிய அந்த உணர்வு நம்மை இணைத்ததே... புனிதம் இறையியம் என்பது எனக்கு புரிந்தது.
எல்லா கடமையும் நல்ல படியா முடிஞ்சுச்சு, மேல இருக்கிற ஐயா எப்போ கூப்பிட்டாலும் ரைட்டு என குண்டி மண்ண தட்டி விட்டு போக வேண்டியது தான் என நயம்பட சொன்னீர்களே. தூத்துக்குடி காரர் நீங்கள், கடல்கரை மண்ணில் உட்காருவதும், எழுந்து உடைகள் சரி செய்வதும் என் நினைவுக்கு வந்த்தே. வாழ்க்கை என்பது நம் கடமைகள் நிறைவேற்றும் .... அல்லது பொறுப்புக்கள் முடிக்கும் தளமாய்த்தான்.... யோசித்தீர்களா.
நீங்கள் வாழ்வை ரசித்தீர்களா, இன்பம் துய்த்தீர்களா. ஐயா கூப்பிட்டா போக வேண்டியது தான் எனும் வார்த்தை பிரயோகத்தில் இறை நம்பிக்கையும், அன்பு கலந்த வாஞ்சையும் தெரிகிறது. இறைவனை காதலனாகவும், வேலைக்காரனாகவும் பார்க்கும் பாரதியின் பக்குவம் இதை சொல்லிக் கொடுத்ததோ...
மரணம் மனிதனுக்கு முழுதும் புரியாதது.
ஓங்கி நிற்கும் குழப்பத்தில் பயமே பிரதானம். வெல்ல முடியாத மரணத்தில் இயலாமையே பல் இளிக்கும். சே !!!! என்னடா இது நாமளும் செத்துப் போவோமே என கோபம். ஏனோ தெரியவில்லை, அமைதியாய் அன்பாய்... ஆங்.... தெரியுமப்பா பிறந்தால் இறப்போம் என அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் மரணிக்க கடினம் உள்ளதே. எங்களுக்கெல்லாம்............ !!!!
உங்களுக்கு எப்படி....... ????
இல்லை. தூக்கத்தில் பிரிந்த தங்கள் உயிர், மூடிய போர்வை விலகாத விந்தை, எனக்கு தாங்கள் மனித இயலாமையை மீறியதாய் தோன்றுகிறது. முரண்டு பிடிக்காது, அன்புடன் மரணத்தை
முத்தமிட்டதாய் தோன்றுகிறது.
அறிவியல்,............. மனிதன் என்பவன் உடல் தான் அதைத்தாண்டி ஒன்றும் இல்லை... என அடம் பிடிக்கும். ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாத மன இயல் கூட பிற்பாடுதான் ஒட்டிக் கொண்டது. இன்றோ......... ஆன்மீகம் சில ஆஸ்ரமங்களை கடந்து ஆஸ்பத்திரியில் நுழைந்து இருக்கிறது.
புற்று நோயால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு பிராணிக் ஹீலீங், ரெய்க்கி என தனி பிரிவு அமைத்து அப்பல்லோ எனை ஆச்சர்யப்படுத்தியது.
மதங்கள் மனித குலத்துக்கு செய்தது என்ன........ நித்திய வாழ்வு, சொர்க்கத்தில் சுகம்........ என மதங்கள் எத்தனை மத்தளம் வாசித்தாலும் சராசரி மனிதன் சஞ்சலம் தீரவில்லை.
ஆமா... யில்ல!!! என சொல்லிவிட்டு ; இல்ல..... ஆமாம்!!! என சிந்திக்கிறான்.
என் அன்னை இறந்த போது, எனக்கு வாழ்க்கை மேல் ரெளத்திரம். கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
எனை பெற்றவளுக்கு தமிழ் இலக்கியத்தில் நல்ல புலமை. சங்க, சமகால இலக்கியத்தில் ஏறக்குறைய எல்லாம் தெரியும். எந்த கடின வார்த்தையாயினும் அர்த்தம் தெரியும்.
தமிழ் மொழி மட்டுமின்றி, நான் அறியாத........... அழிந்து போன கிரந்தம் எல்லாம் தெரியும். கல்வெட்டில் முனைவர் ஆக முயற்சி வேறு.
அரைகுறை தமிழ் தெரிந்த நான் வெட்கத்தில் தலை குனிந்து ... சே! எப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்குவேன் என ஏக்கப் பார்வை இட வைத்த அன்னை மறைந்த போது.
இவ்வளவுதானா. எங்கே அந்த ஞானம், எங்கே அந்த புலமை. என திரும்ப திரும்ப கேள்வி பிறந்து, போச்சா.... மூச்சோடு அதுவும் போச்சா... இது தான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும். எதுக்கு கஷ்டப்படணும் என சிறு குழந்தை போல் திகைத்து நின்றது என் பகுத்தறிவு.
எதுவுமே எதற்குமே அர்த்தம் இல்லை என்பதாய் அவசர தீர்மானம் செய்தது.
....குழப்பத்தில், முடிவு எடுக்காமல் முற்றிப் போயிற்று அந்த எண்ணம்.
ஆனால் தங்கள் மறைவு எனை சமனமாக்கியது. இவ்வளவு தாண்டா வாழ்க்கை, பெரிசா அலட்டிக்கிறதோ, கவலைப்படறதோ அவசியமில்லை. என எதிலும் சாராமல் உணர்வுகள் அனாதையாய் இருக்கின்றன.
தங்கள் மறைவு எனக்கு மறைமுகமாய் என் சாவு பற்றி பறை அறைகிறது. அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது. என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள் சுவடு தெரியாமல் காணாமல் போயிற்று. என் மரணம் பற்றிய தீர்மானத்தில் வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது.
நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம். என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.
ஐ லவ் யூ டாடி.....
உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ச்சியோடு பொங்கி வந்த உண்மை வார்த்தைகள்.
பதிலளிநீக்குபாசமும், பண்பாடும், பச்சாதாபமும் பரிமளிக்கும் பாந்தமான சிந்தனைகள்.
வெற்றிகரமாய் வாழ்ந்து, அவையத்து முந்தி இருக்கச்செய்து, மன நிறைவோடு மறைந்த தந்தைக்கு மகன் எழுதிய மனமார்ந்த அஞ்சலி.
/// உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ச்சியோடு பொங்கி வந்த உண்மை வார்த்தைகள். ///
பதிலளிநீக்குநேர்மையாய் நான் உணர்ந்ததை சொல்ல, அதை உணர்ந்து வார்த்தையில் வடித்த தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.
/// பாசமும், பண்பாடும், பச்சாதாபமும் பரிமளிக்கும் பாந்தமான சிந்தனைகள். ///
சிந்தனை ஒட்டம் நம் பண்பாட்டின் பாதை என ஆழமான விசயம் தொட்டீர்கள். மிக நன்று.
/// வெற்றிகரமாய் வாழ்ந்து, அவையத்து முந்தி இருக்கச்செய்து, மன நிறைவோடு மறைந்த தந்தைக்கு மகன் எழுதிய மனமார்ந்த அஞ்சலி.///
எங்கப்பா இப்படி அல்லவா செய்வார்கள். இப்படி நான் சிந்திப்பது என் அப்பன் குணம்ல்லவா என சிந்திக்காத மனிதன் உண்டா,பிரிக்க முடியாத பந்தம் தகப்பன் மகனது.
என்ன செய்வது அன்பை பெற்ற அன்னையிடம் அறிவை பெற்ற தந்தையிடமும் அஞ்சலி.
நன்றி.
//வாழ்க்கை என்பது நம் கடமைகள் நிறைவேற்றும் அல்லது பொறுப்புக்கள் முடிக்கும் தளமாய்த்தான் யோசித்தீர்களா//
பதிலளிநீக்கு//இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்//
உண்மையான வரிகள்.
தந்தையின் இழப்பு எல்லோருக்கும் வருத்தம் அளிப்பது தான் .தந்தையின் நேசிப்பை மறக்க முடியாத நானும் இப்படித்தான் தந்தையைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பேன்.
/// கோமதி அரசு சொன்னது…
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்.
தந்தையின் இழப்பு எல்லோருக்கும் வருத்தம் அளிப்பது தான் .தந்தையின் நேசிப்பை மறக்க முடியாத நானும் இப்படித்தான் தந்தையைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பேன்.///
எண்ணங்கள் ஒன்றே என கேட்கும் போது இதயம் கனக்கிறது. காலம் மட்டுமே மருந்து.
ஏதோ எழுதி முடித்தவுடன் ஒரு நிறைவும் இலகுவும் வந்தது.
தங்கள் பின்னூட்டத்தில் அதுவே வலுப் பெறுகிறது.
மிக்க நன்றி.
நானும் என்தந்தையை இழந்தவன்தான் அதன் வலியை உணர்ந்திருக்கிறேன்....உங்களின் வரிகள் என்னை ஒரு கனம் என்தந்தையை திரும்பிப் பார்க்கவைக்கிறது. ஆறுதலுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வது.
பதிலளிநீக்குபிறந்தாலும் அதுவே
இறந்தாலும் அதுவே
பாடலின் வரிகளே முனுமுனுக்கிறேன்.
கிளியனூர் இஸ்மத் சொன்னது…
பதிலளிநீக்கு/// வலியை உணர்ந்திருக்கிறேன்....உங்களின் வரிகள் என்னை ஒரு கணம் என்தந்தையை திரும்பிப் பார்க்கவைக்கிறது.///
நான் உணர்ந்ததை உரைத்த போது உணர்த்தியது என சொன்ன வார்த்தைக்கு மிக்க நன்றி.
/// ஆறுதலுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வது.///
கவி நயம் மிக்க தங்கள் வரிகள்.
//// பிறந்தாலும் அதுவே
இறந்தாலும் அதுவே
பாடலின் வரிகளே முணுமுணுக்கிறேன். ////
தத்துவார்த்தமான முடிவு வரி. மிக்க நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.
அன்புள்ள படுககாளிக்கு,
பதிலளிநீக்குஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..மனதில் உள்ளவற்றை கண்ணீர் வெளியே தருவிக்கும்.... தந்தையின் மரணம், தங்களிடம் ஒரு ஆத்மார்த்தமான் ஒரு சிந்தனையை விட்டு சென்றுள்ளது... “இதுவும் கடந்து போகும்” நம் வாழ்வில் அனைத்தும் கடந்து போகும்...மரணம் உட்பட நம்மை கேட்காமால்....
செல்லத்துரை....
/// cdhurai சொன்னது…
பதிலளிநீக்குதந்தையின் மரணம், தங்களிடம் ஒரு ஆத்மார்த்தமான் ஒரு சிந்தனையை விட்டு சென்றுள்ளது... “இதுவும் கடந்து போகும்” நம் வாழ்வில் அனைத்தும் கடந்து போகும்...மரணம் உட்பட நம்மை கேட்காமால்....செல்லத்துரை.///
மிகச் சரியாக சொன்னீர்கள்.
இதுவும் கடந்து போகும்.உணர்ச்சி, துக்கம், சிந்தனை ... அதுவும் நம்மைக் கேட்காமலே....
இன்று பெற்ற தெளிவு நித்தியமாக வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
ஆழமான கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும் நல்ல தமிழுக்கும் நன்றி.
நண்பனே, பிரியமான பிரபா:
பதிலளிநீக்குநாம் பிரிந்த காலங்களிலிருந்து நெடுந்தூரம் நடந்திருக்கிறோம். உன்னுடைய பாதையிலே சிறந்த தத்துவக் கனிகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது என்பதை நான் அறியவில்லை. "நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம். என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்" என்ற உன் சிந்தனையை வியந்து, அதிலேயே என் மனது சுற்றிச் சுற்றி வருகிறது.
அவையில் முந்தியிருக்கவும், வாழ்வில் வெல்லவும் தங்களை உருக்கிய பெற்றோர்கள் கிடைத்தது நம் தலைமுறைக்கு கிடைத்த வரம். அவர்கள் இறப்பிலும் நமக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டுத்தான் போகிறார்கள் இல்லையா?
/// ஏவிஎஸ் சொன்னது… நண்பனே, பிரியமான பிரபா:
பதிலளிநீக்குஉன் சிந்தனையை வியந்து, அதிலேயே என் மனது சுற்றிச் சுற்றி வருகிறது. ////
பிரியத்துக்கும் மதிப்பிற்கும் உரிய ஏவிஎஸ்,
பொல்லா வினையேன்
நின் பெறுஞ்சீர் அத்தனையும் நானறிவேன்...
என் பெறுஞ்சீர் புகழுமாறு ஒன்றறியேன்....
ஹா... ஹா...
/// அவையில் முந்தியிருக்கவும், வாழ்வில் வெல்லவும் தங்களை உருக்கிய பெற்றோர்கள் கிடைத்தது நம் தலைமுறைக்கு கிடைத்த வரம். அவர்கள் இறப்பிலும் நமக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டுத்தான் போகிறார்கள் இல்லையா? /////
நிச்சயம்.
எந்தையும் தாயும் இருந்ததும் இந்நாடே,
அதை வந்தனை கூறி மனதினில் இறுத்தி வாயுற வாழ்த்துவோம்.
அயன் கொல்லங்கொண்டான் நீர் வராத மதகும்,நம் வாழ்வை பற்றிய எண்ணங்களும் பேச்சுக்களும் இன்னும் பசுமையாய் என்னுள் பட்டயமிட்டிருக்கிறது.
மிதி வண்டியில் பயணித்துக் கொண்டே நாம் பகிர்ந்து கொண்ட தகவல்களும் வாழ்வு பற்றிய கண்ணோட்டமும் என்னை எனக்கு புரிய வைத்தது மட்டும் அல்லாது தங்களை புடிக்கவும் வைத்தது.
தாங்கள் இது செய்கிறீர்கள், இங்கனம் சாதிக்கிறிர்கள் என தகவல்களாய் கேள்விப் படும் போது,ஒரு கணம் பிரிவை எண்ணி மனம் விம்மி, அடுத்த கணம் சந்தோசத்தில் கூத்தாடும்.
பிறந்த இடம், பள்ளி, குடும்பம் என நம் பயணம் துவங்கியது ஏறக்குறைய ஒரே இடத்தில். காலத்தின் வேகத்தில் பாதைகள் வேறு.
கற்றுக் கொள்வோம், கரைந்து செல்வோம், உலகை வெல்வோம்.