பக்கங்கள்

பொங்கல் பொங்குச்சா

பள்ளி நாட்களில் படுக்காளி குதூகலித்தது, பங்கு வைக்கும்போது பரவசம் ஆகிறது .

பத்து நாட்களுக்கு முன் தான் கிறிஸ்து பிறப்பு, புது வருட பிறப்பு.
மீண்டும் ஒரு கொண்டாட்டம். சலித்ததே இல்லை.

கொண்டாட்டத்தின் ஆயத்தங்கள் ஊக்கம் தரும். உற்சாகத்திற்கு வேர் ஊன்றும்.
பொங்கல்கட்டி
, தூசு தட்டி எடுப்பது முதல் படி. ஒரு வருடமாய் பார்க்காததால் ஒளிந்துகொண்டு இருக்கும் மூன்று கட்டிகள் , கிடைத்தும் நிறைவு தரும். சுலபமாய் கிடைக்கும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் மக் - சுண்ணாம்பு வாங்க .

சுடுகாடு பக்கத்தில் சுண்ணம் விற்கும் கடையிலே கூட்டம் பர பரக்கும். தர தர வென கொதித்து கொண்டு இருக்கும், சுண்ணம் பெரிய திவலைகளிலே . வெண்ணை போலே இருந்தாலும், வாசனை கிரு கிறுக்கும் . லேசாய் சூடிருக்கும். ஒரு கோப்பை நாலணா.

சிப்பி சுண்ணாம்பு வாங்கி , பக்கத்து கடையிலே காவி பொடி வாங்கி, மேல் சட்டை பையில் வைத்து , வீடு வந்த பின்பு தெரிந்தது சட்டையை வீணாக்கியது. ஆச்சியிடம் திட்டு.

வெள்ளையாய் வர்ணம் பூசி காவியிலே இடை கோடு. எட்டி பார்த்த ஆச்சி பாராட்டி விட்டு செல்வார்.
ஊரெங்கும் உற்சாகம், புதுசாய் முளைத்திருக்கும் சாலையிலே கடைகள். கரும்பு ஓய்யாரமாய் சாய்ந்து இருக்கும், காய்ந்த பனை ஒலை குவிந்து இருக்கும், கண்ணு பிள்ளை பஞ்சு தொங்கி கொண்டு இருக்கும். காய் கறி கடைகள் கல கல விற்பனையில் .

கொண்டாட்டம் போகியில் தொடங்கும்.
உடைக்கத் தயாராய் மண் பானைகள் திராவிட பாரம்பரியம். எரிக்கும் வழக்கம் ஆரிய உபயம் என்றாலும், சைக்கில் கடையில் வாங்கிய பிஞ்சு போன டயர் - பற்ற வைத்தால் பரவசம். புகை கக்கும் டயர் சுழற்சியிலே நெருப்பு பூ பூக்கும்
பொங்கல் தினம்.
விரித்து வைத்த வாழை இலையில் சாஸ்திரத்துக்கு என்று எல்லா காய்கறிகள். இறைவனுக்கு படையல் இயற்கைக்கு படையல்.
கண்ணு பிள்ளை பஞ்சு வாசலிலே வேப்பன்கொழுந்துடன் கூட்டணி.

கொதிக்க தயாராய் மூவரும் கோதாவில் . முக்கோணமாய் பொங்கல் கட்டிகள், பச்சரிசி களைந்த உலை நீர் , மஞ்சள் கிழங்கு சுற்றி- அழகிய கோலமுமாய் பொங்க பானை .

சூரியனுக்கும் நமக்கும் போட்டி. சரியாய் அவன் வருவதற்கு முன் நாம் பொங்கலை பொங்க வைத்து விட வேண்டும்.
ஊதுகுழல் அன்று பெரிதாய் கிராக்கி.

ஆவேசத்தில் ஊதும்போது தலை கிரு கிறுக்கும். ஆக்ஸிஜன் அளவுக்கு அதிகம் ஆனதால் - மண்டைக்குள்ளே .

பொங்கிய பானையிலே மனதும் பொங்கும்.
மங்கள குலவை ஒலி குயில் போலே மலரும் .
பொங்கலோ பொங்கல் என்ற சத்தத்தில், தெரு திரும்பி பார்க்கும்.

புத்தம் புது உடையிலே நண்பர் எல்லாம் வருவார்.
பொங்கலின் வாழ்த்து இது "பொங்கல் பொங்குச்சா "
என் சோட்டு காரர் எல்லாம் எடக்காய் பதிலுரைப்பார்
"வயிறு வீங்குச்சா "

4 கருத்துகள்:

  1. நண்பர்கள் அனைவருக்கும் மனம்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    மார்கழி முடிந்து பிறந்தது தை
    மனதில் நாளும் நம்பிக்கை வை

    புதிதாய் வாங்கிய பானை இங்கு
    அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

    சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
    அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

    மாவால் போடப்பட்ட நெளிக்கோலம்
    அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

    உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
    அது நீரோடு நீராக ஒட்டி உரசி

    அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
    அதை பதமாய் சமைத்தது இல்லம்

    மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
    சூரிய கதிர்கள் பிரகாசம் காட்ட

    அனைவரும் உரக்க கூவினோம் - பொங்கலோ பொங்கல்

    சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய
    நம் பூவுலகின் இருள் விலகியது.
    அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
    இறைவனை வேண்டுவோம்

    பதிலளிநீக்கு
  2. உலகின் பல்வேறு பகுதிகளில் உழைப்பு காரணமாக நாம் சிதறிக்கிடந்தாலும், தமிழர் திருநாள் நம் அனைவரையும் ஒன்றிணைப்பது உண்மை. சொந்த மண்ணில் அனைவரும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடிய இனிய நினைவுகளில் திளைப்பதும் உண்மை. அந்த தித்திக்கும் நினைவுகளை மிகச்சிறப்பாக வார்த்தைகளில் வடித்த படுக்களிக்கு மனமார்ந்த நன்றி. உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. கரி நாள் இன்பச்சுற்றுலா நினைவுகளையும் பகிர்வீர்களா !!

    பதிலளிநீக்கு
  4. பொங்கலோ பொங்கல் ! பொங்கலோ பொங்கல் !

    படுக்காளிக்கும் , திரு.பிரபாகர் அவர்களுக்கும் என் இனிய மனம்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

    அன்புடன்,
    அபு - துபாய்.

    பதிலளிநீக்கு