பக்கங்கள்

காணும் பொங்கல்...

உழவுத் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் என பெருமையுடன் கொண்டாடும் நம் கொண்டாட்டங்களின் வாழ்த்துக்கள். இக்கொண்டாட்டங்களின் சில பழைய நினைவுகளை இங்கு பதிவிடுகிறேன். இன்றைய அதிவேக கலாச்சாரத்தில் தொலைந்து போன சில தகவல்களின் வாயிலாய் சில நினைவுகளை சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

பொங்கலின் அடுத்த தினத்துக்குத்தான்… அடேயப்பா!!! எத்தனை பெயர்கள். மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், கரி நாள். இதில் இந்த கரிநாள்…. !!! ஏன் இந்த பெயர் வந்தது... எனத் தெரியவில்லை … தெரிந்தால் சொல்லுங்களேன். (ஆட்டுக் / கோழிக் கறி சாப்பிடும் நாள் என குறிப்பிடுவதாய் இருந்தால்….. சூப்பர்…. சப்புக் கொட்டிக்கொண்டு அங்கீகரித்து விடலாம்..)

பொங்கல் கொண்டாடிய எல்லோரும் நிச்சயம் எடுக்க வேண்டிய அடுத்த முடிவு கொண்டாட்டத்திற்கான அடுத்தகட்டம். அதுவே இந்த காணும் பொங்கலுக்கான ஏற்பாடு. திட்டமிட்டு அருகாமையில் ஒரு பயணம் செல்வது குடும்பமாக. பண்டை தமிழரின் நிலாச்சோரு நிகர்த்த நிகழ்வு எனவும் கொள்ளலாம்.


வீட்டின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை. கடமைக்காய் குடும்பத் தலைவர்… ஒரு நாள் வெளியில் செல்லும் ஆசையோடு - சுதந்திரக் காற்றுக்காய் குடும்பத் தலைவி…., அடுத்த வீட்டு மல்லிகா புதுப் புடவையின் நிறமும் பவுசும் தெரிந்து விடும் எனும் நப்பாசையோடு. பருவத்தின் வாயிலில் உள்ளோர்கள்…. நாங்க இருக்கோம்…. எங்களையும் கவனிங்கப்பா…. என தங்களை விளம்பரப் படுத்தும் குதூகூலத்துடன்.

என் சொந்த ஊர் தூத்துக்குடி என்பதால் அது சார்ந்த நினைவுகளே இங்கு பதிக்கப்பட்டிருக்கிறது. முயல் தீவு, சிங்காரத் தோப்பு, கோரம் பள்ளம், ரோச் பூங்கா, கட்டபொம்மன் கோட்டை என மற்ற நாட்களில் மறந்திருந்த கேளிக்கையின் இடங்கள் எல்லாவற்றிற்கும் இன்னிக்கு மவுசு அதிகமாச்சு. மாநகராட்சி புண்ணியத்தில் சுத்தம் செய்யப்பட்டு இந்த விழாக்களுக்கென ஒப்பனை செய்து... ரெடியாக இருக்கும் இந்த இடங்கள்.

இவ்விடங்களுக்கு போய் வர என இன்று என பிரத்யேகமாக வாகனங்கள் தயாராகும். வருடம் பூரா மீன் பிடித்த படகுகள் எல்லாம் இன்று மீன் பிடி, வேலை நிறுத்தி பயணிகள் வாகனம் ஆகும். ஸ்பெஷல் பஸ்கள் என உபரி பேருந்துகள் - பேருந்து நிலையத்தை நிறைக்கும். என்ன ஒரு விசேஷம், ஸ்பெஷல் சர்வீஸ் என்பதால் சேருமிடத்தை கையால் எழுதி, கோணல் மாணலாய் சில சமயம் தப்பும் தவறுமாய் பெயர்ப் பலகை இருக்கும். என்றாலும் நம் முகத்தில் மகிழ்ச்சி வந்து சிரிக்க தூண்டும் இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்த்தான் மகிழ்வின் ஸ்டாம்ப் எனவும் கொள்ளலாம்.

பயணிகள் அனைவரும், கை நிறைய பொதிகளுடன் குடும்பத்துடன் குஷாலாய் கிளம்பி விடுவார்கள். உட்கார விரிப்புக்கள், உணவு, கொறிக்க ஸ்னாக்ஸ் மற்றும் விளையாட இண்டோர் கேம்ஸ் – தாயக் கட்டைகள், பாம்பு கட்டம், செஸ் முதலியன.


சோத்து பொதியில் முதலாக, முந்தைய நாள் வெண் பொங்கல் இன்று புதியது போல சூடு பண்ணி பாத்திரத்தில் இடம் பிடிக்கும். புலால் உண்ணும் கூட்டத்தின் சாப்பாட்டு பொதியில், வருத்த கறி சிவந்த மேனியில் எண்ணை குளித்து மூக்கை துளைக்கும். அது என்னவோ தெரியவில்லை, நம்ம வீட்ட விட அடுத்த வீட்டு கறிக் குழம்புக்கு மணம் ஜாஸ்தி.

குடும்பத்தினருக்கிடையில் எப்போதும் சண்டை உண்டு - யார் சோத்து மூட்டை தூக்க என்று. பொதியிடும்போதே அக்கரையாய் நாம் ஒரு ஆலோசனை சொல்வோம். தூக்கி வீச ஏதுவாய் இலைகளிலும், காகிதத்திலும் பொதி தயார் செய்ய சொன்னாலும், அம்மா ஏனோ… எப்போதும் பாத்திரத்திலே அடைத்திடுவார், அவருக்கு அது ஈசியாய் இருப்பதால். நமக்குத்தான் ஆத்திரமாய் வார்த்தை வரும். தூக்கிச் செல்வது ஒரு சுமை என்றால், எச்சில் பாத்திரத்தை மறுபடியும் அல்லவா தூக்கி சுமக்க வேண்டியிருக்கும்…. காலிப் பாத்திரமே ஆனாலும் கூட…


நல்லதாய் இடம் பிடிக்க எப்போதும் ஆசை உண்டு, அதற்கென, ஒவ்வொரு முறையும் சீக்கிரமாய் கிளம்ப வேண்டும்..... சூரிய உதயத்துக்கு பக்கமாக என திட்டம் ஜகஜோதியாய் இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, எப்போதும் தாமதமே ஆகும். என்றாலும் பரவாயில்லை. போகின்ற வழி எல்லாம் சந்தோசமாய் தெரியும் மனிதர்கள் நம் உற்சாகம் கூட்டுவர்.

சிலர் நம்மை திகைக்க வைப்பர். நாம் செல்லலாம் என தீர்மானித்த இலக்கு அடுத்தவர் ஆலோசனையில் கேள்வியாய் நிற்கும். முயல் தீவில குடிக்கத் தண்ணியே இல்லீங்களே…. கட்டபொம்மன் கோட்டையில நல்ல தண்ணி, இதமா நிறைய மரம். அதுதாங்க பெட்டர். என கேட்டவுடன்… ஐய்யய்யா… தப்பா யோசிச்சுட்டமோ…. என தயங்கி நிற்கும்.

பேருந்து நிலையத்தில் மீண்டும் நமக்கு தயக்கம், மறுபடியும் சோதனை. நாம் செல்ல வேண்டிய இலக்கில் பேருந்து குறைவாய் இருக்கும் அல்லது மிகுந்த கூட்டத்தோடு இருக்கும். அது ஏங்க இப்படி இருக்குது என இன்று வரை விடை இல்லை. நம்ம போறதுக்கு எதிர் திசையில போக நிறைய பஸ்சு…. அது மட்டுமா… உக்கார்றதுக்கு இடம் வேற.

எப்படியோ ஒரு முடிவெடுக்காமல் நாம் நின்று கொண்டிருக்கும் போதே தொலைவில் நம் கண்ணில் தெரியும் நமக்கான பேருந்து. உடனே பரபரப்பு உடம்பில் தொற்றும். கீழ் வைத்திருந்த பொதிகளை பத்திரப்படுத்தி விட்டு, உட்கார இடம் தேடி, உதிரம் உச்சத்தில் ஓடும். ஓடி, சாடி, தேடி இடம் கிடைத்து பெருமூச்சு வரும் போது , மனம் உலகையே வென்றதாய் இருக்கும்.

இடம் கிடைக்காது நிற்கின்ற சக பிரயாணிகளை பாவமாய் பார்க்க தோன்றும். என்றாலும் சில சமயம் சிக்கல் வரும். அங்கு நிற்பவர், தெரிந்தவராய் இருந்து, நிற்கும் தகுதியை கடந்து இருந்தால் என்ன செய்வது. பள்ளியின் வாத்தியாராய் இருக்கலாம், உறவில் மூத்தவராய் இருக்கலாம், உடலில் முதிர்ந்தோ அல்லது குழந்தையை தூக்கி கொண்டோ நிற்கலாம். அப்படி என்றால் நம் சீட் பறி போகும்.

சன்னலோர இருக்கையும் கிடைத்து, அமர்ந்திருந்தால் ஓடாத பஸ்சில் - தூசியான காலடியில், உணவை வைக்க மனம் இல்லாது மடியிலே வைக்க நேரிடும் கொடுமை சில சமயம் உண்டு. என்ன செய்வது சில சமயம்… அவை சுடும் வாய்ப்பு உண்டு. அது நம்மிடம் வந்த உணவுப் பொதியை பொறுத்தது. பேருந்து கிளம்பாமல் காத்திருத்தல் மிகக் கொடுமை, என்றாலும் அந்த பேருந்தின் வயிறு பிளந்து காக்கி சட்டை ஓட்டுனராய் அமர சந்தோசமாய் ஒரு பெருமூச்சு வரும். உடம்பெல்லாம் விரைப்பாகும். வண்டி நகர துவங்க, அடித்து வீசும் முரட்டு காற்று வியர்த்த தேகத்தில் இன்பமாய் படரும்.


இன்று கூட்டம் அதிகமானதால், பயணசீட்டு வழங்க வேண்டி ஊர் எல்லையில் பஸ் நிற்கும்போது சுத்த காற்று உத்வேகம் தரும். இனிமையாக இருக்கும். என்றாலும் கூட்டத்தோடு மல்லுக் கட்டி, டிக்கெட் டிக்கெட்டு என கத்தி தொண்டை கட்டிய கண்டெக்டர்…. பாவம்!!! என தோன்றும். அதோடு கூட, விடுமுறை நாளிலும் வேலை செய்யும் ஓட்டுனர் நடத்துனர் அவர் தம் குடும்பம் என இறக்கம் லேசாய் எட்டி பார்க்கும். நம் நிலமைக்கு ஆண்டவனை நோக்கி... நெஞ்சார நன்றி சொல்லும்.

இலக்கை அடைந்ததும் நல்ல இடம் தேடி கண்கள் அலையும். தேர்வு செய்த இடத்தில் அரை மனதாய் போர்வை விரிக்க படும். இன்னும் நல்ல இடம் இருந்திருக்கலாம், இருந்தாலும் பரவாயில்லை என்பதாகவே என்றும் விரிக்கப்படும். நாம் வீசி விரிக்க, துவைக்கும் கடினம் தோன்ற அக்கரையாய் அம்மா மட்டும் பார்ப்பார். பார்த்து விரியேண்டா என சில சமயம் சொல்வார். அந்த ‘பார்த்து….’ எனபதின் அழுத்தம் இன்றுதானே புரிகிறது. விரித்து வைத்த போர்வையிலே, மர நிழலிலே நம் இருப்பு நிச்சயம ஆகும். வேறு ஆட்களுக்கில்லை, இனி இது நம் இடம், நாம் எழுந்து செல்லும் வரை. சக மனிதர் சுற்றி இருப்பார் என்றாலும் நாம் விரித்த போர்வையே நம் எல்லையாகி விடும்.

மொத்த குடும்பமும் நெருங்கி அமர்ந்து, அனுசரணையாக இணைத்திடும் அந்த நேரம் இனிமையானது. அத்தனை மனங்களும் இன்பமாய் இணையும் குடும்ப அன்பிலே. நேற்று போட்ட சண்டை கூட இன்று மறந்திடும். இது நம் குடும்பம் என்று பெருமையாய் உணரும் தருணம்.

உணவுக்கு ஆசைப் பட்டு நாய்கள் கூட நம்மை சுற்றி குழைந்து வால் ஆட்டிக் கொண்டும் நிற்கும் வாய்ப்பு உண்டு. அது நம் உணவின் மணத்தை பொறுத்தே என்பது மறுக்க முடியாத உண்மை சோத்து பொட்டலம் பிரிக்கலாமா என்று பெரிசுகள் சொல்லும், உடனடியாய் மறுத்து இளம் சோட்டு உறுப்பினர் எல்லாம் ஒரு நடை செல்ல ஆசை படுவார் ..

புதிய சூழ்நிலையில் சாப்பாட்டின் சுவை கூடும். அரக்க பரக்க சாப்பிட்ட மற்றைய தினத்தின் முறை மறந்து ஆர அமர உண்பது ஒரு புதிய அனுபவம். பறந்து வரும் தூசிகூட எளிதாக மறந்து போகும், சிரமம் இல்லாமல் அவை நம் உணவோடும் கலக்கும்.

நண்பர்கள் சிலர் ஒரே உடையில், சீருடையாய் கூட்டமாய் திறிந்திடுவார், தனி மனித அடையாளமோ அங்கிகாரமோ வேண்டாத / விரும்பாத சில காளைகள். குழுமத்தில் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட மனது உடையவர் எடுக்கும் முடிவு அது. சுற்றுலாவே வந்தாலும் கடமையாய் காதில் ஈயர்போன் மாட்டி இசை கேட்கும் சிலர்…. என்றாலும் ஒரு கேள்வி உண்டு. அங்கு பாட்டு கேட்பது உண்மையிலேயே தங்களுக்காகவா அல்லது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவா…

நெருங்கிய நண்பராக இருக்கலாம், வகுப்பறையில் அடுத்த இருக்கையிலும் இருக்கலாம், என்றாலும் அவனது குடும்பத்தை அறிய மாட்டோம் . ஆனாலும் இன்று அந்த அறிமுகம் கிடைக்கும். உறவு பலப்படலாம். இனிமேல் ராஜா வீட்டுக்கு போயி, புஸ்தகம் வாங்கிட்டு வர்றேம்மா எனும் போது நம் குடும்பத்திற்கும் விளக்கம் கிடைக்கும்.

இளம் வயதினருக்கு சில நேரம் லாட்டரி அடிக்கலாம். ஆம்… சிலருக்கு காதல் பூக்கும், பூத்த காதல் சிலருக்கு மலரும், சந்தோஷமான மனதில் நல்லதே நடக்கும் அல்லவா. கனவில் உள்ள தேவதையை சிலர் இங்கு தான்… இன்று தான்…. காணுவர், நாளையில் இருந்து அவன் நாற்பது நாட்களுக்கு காதல் கவிதையாக எழுதி திளைப்பான்.

காதல் சிலரை பதம் பார்ப்பதும் உண்டு, வெகு காலமாய் முயன்று வரும் தன் காதல் சிலருக்கு தோற்கும். தன் நாயகியை வேறு ஒருவரோடு காண்பார், நாளை முதல் தாடி வளர்ப்பார். அவரும் கவியாவார்.

சூரியன் மேற்கில் சாய மெதுவாய் கிளம்பி வீடு வந்து சேருவோம், அடுத்த முறை பயணம் எங்கே என்று அன்றே தீர்மானிப்போம், ஆனாலும் எப்படியும் நம் திட்டம் மாறும் என தெரியாமலேயே.
நாளை அலுவல் நோக்கி கொஞ்சம் அசதியுடன் காத்திருப்போம், அடுத்த முறை ஆயதங்கள் மறுபடி இனிமை சேர்க்கும். வாழ்வு ஒரு சுழற்ச்சி….

மைனா – திரை விமர்சனம்

மனம் கவரும், தரமான நல்ல சினிமா இந்த மைனா.

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு இடம் பிடிக்கும் எல்லா தகுதிகளையும் தன்னுள் கொண்டுள்ளது. கலை ரசனையிலும், அவார்டுகளின் அங்கிகாரத்திலும், வர்த்தகத்திலும் இப்படம் அடைந்த வெற்றி உரக்கச் சொல்வது ஒரு உண்மையையே. நல்ல படம் எடுங்கய்யா…. பாக்கிறதுக்கு நாங்க இருக்கிறோம் எனும் சராசரி ரசிகனின் அங்கீகாரமே அது.

சாதிக்க துடிக்கும் மனித வாழ்வு வரப்பிரசாதம். ஆதிக்கம் செய்ய நினைக்கும் மனசு தன்னையும் தன் சுற்றத்தாரையும் அழிக்கும் எனும் ஒற்றை வரிக்கதையே மைனா.

ஒற்றை வரி மற்றும் ஒற்றை நாள் கதை என்றாலும் அந்த கதையை சொன்ன விதத்தில் இயக்குனர் மின்னியிருக்கிறார். இடையிடையே வரும் நேரக்குறிப்புக்கள் கதை ஓட்டத்தை பாகம் பிரித்து நம்மை கட்டிப் போடுகிறது. கண்ணைக் கவரும் அந்த பச்சை புல் போர்த்திய மலையும், ஆறும், பனியும் ஒரு புறம் நம்மை கவர, நேர்த்தியாய் புத்திசாலித்தனமாய் அமைத்த திரைக்கதை வழி நடத்த, நடிப்பு இசை எனும் அனுபவங்கள் மேலும் மெறுகேற்ற, விளைவு நமக்குத்தான் நல்ல திருவிழா.

சினிமா பார்க்கும் நமக்கு, நல்ல அனுபவம் கிடைக்கிறது.

விரைப்பான காக்கி சட்டைக்கு பின்னால் இருப்பது ஒரு சராசரி மனிதனே. பாசமும், பயமும் கோபமும் அவனிடத்தில் இயல்பாக உண்டு என நமக்கு என்னவோ தெரியவில்லை. இதுவரை வந்த திரைப்படங்கள் நம் மனதில் காக்கி சட்டைக்கு, என கொடுத்திருக்கும் பிம்பம், சாரி….!!!! கொஞ்சம் கொடுரமானதே. இயக்குனர் அதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருப்பது ஆதாரமான உண்மை.

இயலாமையால் இன்ஸ்பெக்டர் கோபம் கொண்டு, உன்னாலதானடா எனக்கு இவ்வளவு கஷ்டம், பாருடா உன்ன கஞ்சா கேசுல போடுறேன், உன்ன வாழ விட மாட்டேண்டா என சீறும் போது….. இப்படி செஞ்சுருவாரோ என நம்மை எதிர்பார்க்க வைப்பது மேற்கூறிய இந்த... நமது மன நிலையே.

திரைப்படத்தின் ஆரம்ப காட்சி அட்டகாசம். தீபாவளிக்கு ஊருக்கு கிளம்பும் மன நிலையும், விழாவின் பொறுப்புக்களும், கடமையின் விரைப்புக்களும் சரிவிகிதத்தில் அலைக்களித்தாலும், தொலைந்த பந்துக்காக பணம் நீட்டும் காவலரின் குணமும் அருமையாக சொல்லப் படுகிறது. அதே பந்தை மைனாவுடன் விளையாடும் சுருளியும் என அந்த தினம் மிக நேர்த்தியாக திரையில் வந்திருக்கிறது.

எதுக்குடா இப்படி இந்த தலைத்தீபாவளி காட்சி முதல்ல வருது கதைக்கு சம்பந்தம் இல்லையே என நினைத்தாலும், உச்சக் காட்சியில் அதை இணைத்ததுதான் பிரபு சாலமனின் புத்திசாலித்தனம்.

யதார்த்த சம்பாஷணைகள் படத்துக்கு மெறுகேற்றுகின்றன, என்ன பாஸ்கர் பங்ஷன்லெல்லாம் எப்படி போச்சு, அது நல்லா போச்சு சார், ஒரு ப்ராப்ளம் சார், என பிரச்சனையை விளக்கியவுடன், என்ன பாஸ்கர் அசால்ட்டா சொல்றீங்க, இன்னிக்கு கவர்மெண்ட் லீவு, எப்படியாவது புடிச்சுருங்க, அதுவரைக்கும் தான் நான் அட்ஜஸ்ட் பண்ண முடியும் என சொல்லும் மேலதிகாரியும் என படம் முழுக்க பிரமாதம்.

முக்கிய கதாபாத்திரங்கள் மின்னுவது மட்டுமல்லாது, துணைக் கதாப்பாத்திரங்களின் கனம் படத்தின் மிகப் பெரிய பலம்.

அண்ணன்கள், நார்த்தனார்களை தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டு, புருஷனையும் அதே லெவல்ல வைக்க முனையும் அந்த வில்லி கதாப்பாத்திரம் அதிர்ச்சி தரும் ஆனால் யதார்த்தமான பாத்திரப் படைப்பு. உச்சக் காட்சியின் போது, தியேட்டரில் உரக்க கேட்கும் கைதட்டுதான் அந்த பாத்திரப் படைப்பின் மிகப் பெரிய அங்கீகாரம் அல்லது வெற்றி.

பொறுப்பில்லாத குடிகார புருஷனால் கைவிடப்பட்டு, நடுத்தெருவில் விழுந்த பின்னும் மூர்க்கமாய் போரிட்டு வெற்றி பெரும் அந்த பணியாரக் கடைக்காரி ஒரு அற்புதம் என்றால், தன் மகள் வாழ்வு வீணாகி விடுமோ என அஞ்சி அவசர அவசரமாய் காதலனை சாமர்த்தியமாய் போலீசில் மாட்டி விட்டு அவர் ஏற்பாடு செய்யும் திருமணம் ஆகட்டும், தப்பித்து வந்தவனிடம் காட்டும் ரௌத்திரமாகட்டும் கனக் கச்சித பாத்திரப்படைப்பு… பின் நடிப்பு.

ஒரு சில விசயங்கள் நெருடுகிறதே.....

இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு ரௌடி கதா நாயகன், வீரமான கதா நாயகி, மற்றும் அடிதடிக்கு ரெடியான ஒரு சப்போர்ட்டிவ் அப்பா / அம்மா என அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாய் இந்த ஒரு பெண்ணின் அரிவாளுக்கு பயந்து ஓடுவது கொஞ்சம் யதார்த்தம் இல்லையோ…. பஞ்சர் ஆகும் டெம்போ, விபத்துக்குள்ளாகும் பஸ், பேஷன் ஷோ போல…. அடுத்தடுத்து வந்து காமெடியும் கவர்ச்சியும் காட்டும் அந்த சக பயணிகள், விலங்கு எடுத்ததும் தப்பி ஓடும் தம்பதிகள் என கொஞ்சம் செயற்க்கைத்தனங்கள் தெரிந்தாலும் அந்த உச்சக்காட்சியும், இடைவேளையின் பஞ்ச்சும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

எங்கு ஆரம்பிக்கிறது, எதை நோக்கி நகருகிறது என கணிக்க முடியாத சாட்டமே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

பிரபல நடிகர்கள், கவர்ச்சி, ஆக்‌ஷன், காமெடி என சைடு சமாச்சாரங்களில் நம்பிக்கை வைக்காமல் தன் கதையையும் உணர்வையும் மட்டுமே நம்பி களத்தில் நிற்பது இயக்குனரின் நல்ல தன்னம்பிக்கை.

முக்கியமாய் இந்த விஷூவல் மீடியத்தை புரிந்து கொண்ட இயக்குனரின் திறமையும், அறிவும் மிகவும் பாராட்டுக்குறியது. இப்படத்தின் வெற்றியும் ரசிகர்களின் ஆதரவும், அவார்டுகளும் மிகவும் ஆரோக்கியமானதே.

http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post_16.html

இயக்குனர் பிரபு சாலமன் நமக்கு நல்ல நண்பரே..

என்றாலும் இந்த விமர்சனம் எழுதும் போது, நடு நிலை தவறவில்லை.

எல்லா ஒளிர்வுக்கும் பின்னால், ஒரு வெப்பம் இருக்கும்…..

விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சு, எங்க வீட்டு கரெண்ட் பில்லு இந்த மாசம் ரூபாய் 70,69,488 என மும்பாய் தொழிலதிபர் ஒருவர் சொல்வதாய் சேதிகள் வந்ததும், நம் துப்பறியும் மூளை தகவலுக்கு ஏங்கியது.

இலக்கங்கள்ல தப்பில்லையே, 70 லட்சத்தி சொச்சந்தானே, என நம் கையை நாமே கிள்ளி பார்த்து விட்டு, மேலே படிப்போம். இருக்கவே இருக்கிறார், நம்ம கூகுள் அண்ணாச்சி, அவரை நாடி சென்று தகவல்கள் தேத்தினோம்.

முகேஷ் அம்பானியின் மும்பை நகரத்து அண்டிலியா எனும் அவரது வீட்டின் பில்தான் இது. நிஜந்தானா, ஒஹோ!!! இது இந்திய சராசரிப்படி சுமார் 7000 வீட்டுக்கான கரெண்ட் தொகையாவில்ல இருக்கு. சரி…. என்ன ஆதி... இப்படியாயிப்போச்சே என அக்கறையுடன் பார்த்தால் 9 எலிவேட்டர்தான்… லிப்ட் பண்ணி இப்படி வகை தொகையில்லாம போச்சு.

மொத்தம் 27 மாடி ஆனா 60 மாடிக்குள்ள உயரத்தில நிக்குது. முதல் ஆறு வெறுமனே போயிட்டு வர்ற கார நிறுத்துறதுக்கு. என்ன செய்யுறது, 168 கார் இருக்கும்போது நிறுத்துறதுக்கு இடம் வேண்டாமா. அப்புறமா, ஏழாவது மாடியில இருந்து குடும்பம் தங்குறதுக்கு, குளிக்கிறதுக்கு சாப்பிடுறதுக்குத்தான் மீதியெல்லாம்.

அங்க தங்கியிருக்கிறது ஆறு பேரு ஆனா 600 வேலைக்காரங்க இருக்காங்க. அங்கனக்குள்ளேயே தங்கி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறாங்க, அதாவது ஒத்த ஆளுக்கு சராசரி 100 பேரு.

முந்தியெல்லாம், அமிதாப் வீடு சாருக்கான் வீடுன்னு படையெடுத்த லோக்கல் டூரிஸ்ட்டுங்க இப்ப இங்கயும் வாராங்களாம்.

சரி இந்த தகவல்களை கேட்கும் போது நம் மனித மனம், என்ன யோசிக்கிறது. அனேகமா கீழ் காணும் டயலாக்குல ஒண்ணு உங்களுக்கு பொருந்தலாம்….. குத்து மதிப்பா….. பாருங்களேன். இல்லாம புதுசா ஏதாவது தோணுச்சுன்னா, பின்னூட்டத்தில சொல்லுங்க… ப்ளீஸ்….

  • அடேயப்பா, பொறந்தா பொறக்கணும் இப்படி…, இல்லேண்ணா மூடிக்கிட்டு சும்மா இருக்கலாம்.
  • எப்படியாவது இங்க போயி ஒரு நாளாவது வாழ்ந்திரணும் இல்ல அட்லீஸ்ட் பார்த்துரணும்.
  • அடப் போடா, இது என்ன ஜூஜூபி… இத வீட பொம்பாடா நான் கட்டப் போறேன் பாரு…
  • இதெல்லாம் தேவையா, என்னத்த சொல்றது… அற்பனுக்கு பவுசு வந்தா மிட் நைட்டுல கூலிங் கிளாஸ் போடுவான்

இந்த பதிவை படித்து முடித்து மடக்கும்முன்…….. இந்த வீட்டின் உரிமையாளரைப்பற்றி நாம் இதையும் படித்து விடுவது நல்லது.

முகேஷ் அம்பானி

கல்வித் தகுதி : MBA, Stanford University; Bachelor's Degree University of Mumbai; MBA University of Mumbai

அவர் கம்பெனியின் வருடாந்திர வருமானம் : ________ கோடிகள் எல்லா வரிகளும் செலுத்தியபின்

அவரது சம்பாத்தியம் : ________

அவர் நிறுவனத்தில்: இவர் தரும் சம்பளத்தை நம்பி வீட்டில் உலை வைப்பவர்கள் ___

எல்லா ஒளிர்வுக்கும் பின்னால், ஒரு வெப்பம் இருக்கும்….. நம் பார்வையில் ஒளி தெரிந்தபின்....

அந்த வெப்பத்தை உணர்ந்தால் நம் சிந்தை சிறக்கும்

நந்தலாலா – திரை விமர்சனம்

ரசித்து எடுக்கப்பட்ட மிக நல்ல படம். நேர்த்தியான இயக்கம், நெகிழ வைக்கும் இசை ராஜாங்கம், கண்களை கொஞ்சும் ஒளிப்பதிவு, பலமான திரைக்கதை, என எல்லா பரிமாணங்களிலும் நெஞ்சை அள்ளும் சினிமா.

நீர்த் தாவரம் ஒன்று, கொப்பும் குலையுமாய், தண்ணீரில் முழ்கியும் மூழ்காமலும் ஆற்று நீரின் வேகத்தில் மயிலிறகு போல் அசைந்தாடும் அந்த ஆரம்ப காட்சியிலேயே படத்தின் தரம் நமக்கு புரிகிறது. ரசனையின் கட்டியம் கூறுகிறது. இயக்குனருக்கும், எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

அதிலும் டைட்டில் கார்டில் முதல் பெயராய் இளையராஜாவை போட்டு ‘அட… இது புதுசா இருக்கே, வழக்கமா ஹீரோ பேருதான போடுவாங்க என நம்மை சிந்திக்க வைத்து. அப்படி ஏன் முதலில் அவர் பெயர் வருகிறது என்பதை ஜஸ்டிபை செய்யும் இசை. ’இசையுலகின் சூப்பர் ஸ்டார்’ என சொல்லும் அளவுக்கு அம்சமான இசை.

திரைக்கதை அமைப்பில் ஒரு புதுமை. ஒரு காட்சியின் முடிவு, அந்த காட்சியில் சொல்லப்படாமல் அடுத்த காட்சியில் காண்பிப்பது நல்ல உத்தி. அடுத்த காட்சி என்ன என பார்வையாளனை எதிர்பார்க்க வைக்கும் நேர்த்தி.

உதாரணத்துக்கு ஒன்று. தங்கள் பயணத்தில், அன்பாய் சந்திக்கும் அந்த பெண்ணிடம் விடை பெற்று,….. போகலாமா என தீர்மானித்து இருவரும் கிளம்ப, அந்த பெண் வாஞ்சையுடன் சோகத்துடன் பார்க்க இவர்களும் பிரிய மனமில்லாமல் பார்க்க, …. டேய்…. ஒண்ணாப் போங்களேண்டா என நாமெல்லாம் ஏங்க, என்ன நடந்தது என்ன சொல்லாமல் காட்சி முடிந்து விடுகிறது. அடுத்த காட்சி ஒரு லாரி செல்கிறது, கேமரா சுழன்று நகரும் போது மூவரும் அமர்ந்திருப்பதை நாம் காணலாம். எனும் போது, அவர்கள் பேசி முடிவெடுத்து ஒன்றாய் பயணம் செய்கிறார்கள் என நமக்கு புரிகிறது. இதுபோல் பல காட்சிகள் அமைத்து பட ஓட்டத்துக்கு பெரிதும் சுவாரசியம் கூட்டியிருக்கிறார்கள்.

இத்தகைய தரமான திரைப்படங்கள் தமிழில் வருவது நமக்கு பெருமை. வாழ்த்துக்கள். மென்மேலும் இது போல் திரைப்படங்கள் வரவேண்டும் என ஆசிப்போம்.

நிற்க, இது ஒரு காப்பி என சூடான விவாதங்கள் ஒரு புறம் அரங்கேற. அதற்கு பதிலாக, இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் நிறைய வேறுபாடு உண்டு என விளக்கம் அளித்து இன்னொரு புறமும் அனல் பறக்க, என் எளிய சிந்தனை இதுவே. என்னைப் போன்றோருக்கு அன்னிய சினிமா பார்க்கும் வாய்ப்புக்கள் குறைவு, கப்பிஜோரா, டொப்பிமாரா என பார்க்கும் வசதிகளும் இல்லை, எனும் போது. எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் எனும் பாரதியின் முழக்கம் முறைதானே.


சில கேள்விகள்.


· இப்படத்தின் மூலம், சமூகத்துக்கு சொல்ல நினைக்கும் கருத்து என்ன.


· இப்படி ஒரு கதைக்களமும், கதை மாந்தர்களும் தேர்த்தெடுக்க காரணம் என்ன


· இக்கதையின் மாந்தர்கள் யார்…???.நாயகன்--- மன நிலை பிறண்ட, சமுதாயத்துடன் இயல்பாய் வாழ இயலாத மனிதன் --- . காதல் எனும் பெயரில் தன்னை பறி கொடுத்து, விபச்சார விதியில் விழுந்து, வாழ்வு செல்லும் பாதை அறியாத நாயகி, இப்படி வஞ்சிக்கப்பட்ட பரிதாவத்திற்குறிய மனிதர்களின் வாழ்வு பற்றிய படங்கள் மட்டும்தான் ஏன் கலைப்படம் ஆகிறது.

· ஆற்றல் மிக்க, செயல் திறன் மிகுந்த, சாதிக்கும் மனிதர்களின் கதை, ஏன் வணிக சினிமா என முத்திரை குத்தப் படுகிறது.

· வாழ்வின் இருண்ட பக்கங்களும், நிதர்சனங்களும் தெரிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இதுதான் சினிமா. இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் இயல்பு, இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என சொல்வது அபத்தம். இத்தகைய ரசனையுள்ளோரின் மனச்சிக்கல் கொஞ்சம் அபாயகரமானதே. தங்களுக்கு தாங்களே இவர்கள் வரைந்து கொள்ளும் அறிவு ஜீவீ லேபல்கள் சமூக அங்கிகாரத்திற்கென்றால் பிரச்சனையில்லை, உண்மையிலேயே இதெல்லாம் பிடித்தால்…. சாரி, நோ கமெண்ட்ஸ்.

· இயக்குனரே, இதுக்கு முந்தைய படங்கள் குப்பை, இதுதான் பெஸ்ட் என சொல்ல வேண்டிய அவசியம் எதனால் வந்தது.

· மன நிலை பிரண்டால், நடிப்புக்கு ஸ்கோப் ஜாஸ்தி என்பதால், கோணங்கி சேட்டைகளும் அங்க அசைவுகளுமாக எது செய்தாலும் நடிப்பு என்றாகி விட்டது துரதிருஷ்டம்.

· நாம் முன்னமே பார்த்து ரசித்த சேது, இன்ன பிற திரைப்படங்களின் உரசல் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. மிகவும் பாராட்டப்படும் அந்த அம்மா கிளைமாக்ஸ்சை சேது --- ஈஸ்ட்மென் கலர் புத்தம் புதிய காப்பி எனலாமா.

· பெரும்பாலான ரசிகர்களை வசிகரிக்கவில்லை,வணிகத்தில் தோல்வி எனும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு….. ரசனையில் கோளாறு என பாமரன் மீது பாயாமல், வீண் கோபங்களை விட்டுவிட்டு, மக்களின் அங்கீகாரமும், கலை மேன்மையும், வசூலும் தவிர்க்க முடியாத சினிமாவின் அங்கங்கள் என்பது உணரப்பட வேண்டிய உண்மை.

தாட்... பூட்... தஞ்சாவூர் !!!

பேமானி…!! கஸ்மாலம்….!! எங்கேயா பாக்குறீயே.. இங்க பாருடா…. காத இங்க கொடுத்துட்டு கவனத்த எங்கேயோ வைச்சிருக்கியேடா…. பொறம்போக்கே….
சொல்றத கேட்டு அத யோசிடா என் யோக்கியரே….!!!

என் குடியிருப்பின் கதவு தாண்டி, என் காதை குடைந்தது இந்த வசவு சொற்கள். என்ன ஒரு துணிச்சல்… என் எதிரிலே என்னை திட்டும் எகத்தாளம். வார்த்தைகளில் உணர்த்த இயலாத மகா எரிச்சல் எனக்குள் மண்டியது. மனதிற்குள் நானும் திட்ட துவங்கினேன். சே!!! தொடங்கிட்டாண்டா தொம்ஸ் கட்டை!!!, ஏண்டா எமப் பய மவனே! உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா.

என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு, காலைல ஏந்திருச்சு, அரக்க பரக்க கொட்டிக்கிட்டு, ஆபிஸ்ல போயி குத்தும் குடைச்சலும் வாங்கி அதத் தாங்கி, குத்துயிரும் குலையுயிருமா வீட்டுக்கு வந்தா. வீடு சும்மா… சுகமாவா இருக்கு, இங்க பல கொடுமைகள் இங்க ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது. பால்காரன், வாடகை, கரண்டு பில், பைப்பில தண்ணீ வரல இப்படி ஓராயிரம் பிரச்சனை. குத்துதே குடையுதேன்னு நான் யாருகிட்ட போய் கத்துறது. நான் என்ன செய்யுறது, எதை காப்பாத்துறது. வீடு, ஆபிஸ், சமூகம்ன்னு மொத்தக் குத்தகையில குத்துது. கோபம் இயலாமையை இடித்துரைக்க, என் கோபம் லேசாய் அழுகையாக ஆனது. மனதிற்குள் ஒரு விசும்பல்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி. ஊரும் உலகமும் நல்லா சுகமா இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை. என்ன வரம் வாங்கி வந்தேன் இப்படி. அழுகையில் கரைய என்னை நான் அனுமதித்தேன். அந்த உணர்வில் சில நிமிடங்கள் நகர, மேலும் மேலும் நான் அதில் கரைய, வேறு சிந்தனைகள் அற்றுப் போயிற்று.

அதில் ஒரு சுகம் தெரிந்தது. உடல் அசையாது, உணர்வு மட்டும் விழித்து இருந்தது. குளிர் பழகிய அல்லது பாதித்த உடல், சுள்ளென சூரிய கதிர்கள் படும்போது மனம் ஸ்தம்பித்து மோன நிலையில் இருக்குமே, இன்னும் இன்னும் என ஏங்குமே. சிந்தனை எதுமில்லாமல் சோம்பலாய் முடங்கி நிற்குமே அது போல் ஒரு நிலை. இப்போது வெளிக்குரல் இல்லை. ஹப்பா!!! போயிட்டான் போலருக்கு

மெல்லமாய் தலை நீட்டி வெளியில் பார்த்தேன். எங்கும் போகவில்லை அங்கேயே தான் இருக்கிறான். உக்கிரமாய் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவன், அசிங்கமாய் நின்று கொண்டிருந்தவன், இப்ப மண்டையை சொறிந்து கொண்டு உட்கார்ந்திருக்கான். அவ்வளவுதான். சே!!! நாத்தம் குடல புடுங்குது. அழுக்கும் தூசியும் அவனை அப்பி பிடித்திருக்க, அவனை பார்ப்பதே ஒரு தண்டனை. யேயப்பா!!! என்ன உயரம், நிச்சயம் ஒரு ஏழடி இருப்பான். அசப்பில் என் உடல் மற்றும் முகவெட்டு. ம்….. உடல் அசைவில் கூட என்னை மாதிரியே.

எனக்கு மட்டும் இல்லை. பக்கத்து வீட்டு ராமசாமிக்கும்... ராமசாமி உருவத்தில் இதுபோல் ஒரு தொல்லை. ராமசாமியை பார்த்து உரத்த குரலில் திட்டிக் கொண்டிருக்கிறான். என்ன ஒரு வித்தியாசம் என் தொல்லை போல உயரம் இல்லை, குள்ளமான உருவம், கூடிப்போனால் ஒரு நாலடி இருக்கும். என்றாலும் ராமசாமி நல்ல உயரம், அவன் ஆறடி நாலங்குலம் இருப்பான். எதிர்வீட்டு ஏகாம்பரத்துக்கும் எங்களை மாதிரியே. அழுக்காய், நாத்தமாய் அவனுக்கும் இதே தொல்லை.

எனக்கு திட்டு தூய செந்தமிழில். ராமசாமிக்கு அக்மார்க் கெட்ட வார்த்தையில் அன்னிய பாஷையில் திட்டு. ஆங்கிலம் ஸ்டைலாக இருந்தாலும், சே… வாயில் சொல்ல முடியாத அசிங்க அசிங்க வார்த்தைகள். அடப் பாவிகளா!! இந்த குடியிருப்பு மொத்தத்துக்கும் இப்படி ஒரு தொல்லையா. இப்படி குத்தகை எடுத்துக்கிட்டு குத்துறாங்களே… இவனுங்கள கேக்க யாருமே இல்லியா…. சரி யாரிவனுங்க…. ஏன் இந்த பாடு படுத்துறானுக… எல்லாருக்கும் இப்படி ஒரு அவஸ்தை இருக்கே. என்ன இது.

உடல் சோபாவில் தளர்ந்தது. மூச்சு நீண்ட தாள லயத்தில் ஆழமாக ஆனது. இவனுங்க திட்டுதலை தாண்டி என்ன சொல்றானுங்கன்னு கேட்டதில்லையே. அரை குறையா சில வார்த்தைகள் காதில விழுது. திட்டுற வார்த்தையிலயும் இவனுங்க நாத்தத்துலயுந்தான் நம்ம திங்கிங் போகுதே இல்லாம…. நம்மால கான்சேண்ட்ரேட் பண்ண முடியல. சரி இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு எடுத்துறுவோம்.

ஒண்ணு நான், இல்லைன்னா அவன்…. அவனுக்காச்சு எனக்காச்சு.

அவனை உள்ளே வர அனுமதித்தேன். கதவு திறந்து அவன் உள் நுழைந்ததும் நான் அதிர்ச்சியானேன். கண்கள் நிலை குத்தின. கண்கள் மூடி திறந்து என்னை நானே சோதித்து கொண்டேன்.

நான் பார்ப்பது சரியா, ஏதேனும் பார்வைக் கோளாறா, என்பது போல் கண்ணை மூடி மூடி பார்த்தேன். என்ன இது … எப்படி இது…. சரி!!! அப்படி என்ன ஆச்சரியம் எனக் கேட்கிறீர்களா.

வெளியில் இருந்து அவன் கத்திய போது, அவனுக்கு ஏழடி உயரம் இருந்தது, இப்போதோ 1 அடிக்கும் கீழே…. வெளியில் இருந்து அவன் கத்திய போது அழுக்கும், நாத்தமும்… இப்போதோ அவன் மீது நறுமணம் கமழும் நல்ல வாசனை.

பேச்சு வராமல், நான் திகைத்து நிற்க, அவன் தான் தொடங்கினான், ம்… அன்பிற்குறிய என்னவனே… எப்படி இருக்கிறாய். எப்போதோ என்னை உள்ளே அழைத்திருக்கலாம். ஏன் பயந்தாய். ஏன் இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறாய்…. நிச்சயம் நான் உன் நண்பன் தான், உன் முன்னேற்றம் தான் என் விருப்பம்.

அதெல்லாம் இருக்கட்டும் நீ யார்,

நான்????…. அட… என்னை தெரியாதா… நான் தான் நீ. உன் மனதின் ஒரு மலர் நான்.

குழப்பாதே நீ யார்.

உன்னை செப்பனிடுவது யார் யார். மனசு, சிந்தனை, மனசாட்சி. இப்படி பல பெயர்கள் இருக்கலாம். பெயரா முக்கியம், செயல் தானே முக்கியம், உன்னை செயல் படுத்துவது எனது வேலை. உன்னை நெறிப்படுத்தி, ஆலோசனை வழங்குவது எனது வேலை.

இந்த பதிவின் தலைப்பை தமிழில் அர்த்தம் சொல்லுங்களேன், எதிரில் இருந்த குள்ளன் என்னிடம் கேட்க, தலையை சொறிந்தவாறு படுக்காளி இட்ட தலைப்பை ஸ்கோர்ல் செய்து பார்த்து, சொன்னேன். ‘குய்யோ முறையோ என கத்தி…. தாட் பூட்!!! தாம் பூம்!!! என பேசுவது அல்லது குதிப்பது.

ஆஹா!! அற்புதமான விளக்கம். ஆம், தமிழில் இதன் அர்த்தம் சொல்வது பிரச்சனை விளக்கம். அதற்கான தீர்வும் அதே வார்த்தை பதத்தில், அதே தலைப்பில் இருக்கிறது. என்ன கொஞ்சம் சௌகரியக் குறைவாய் ஆங்கிலத்தில் உள்ளது. நே!!!! என விளித்தேன்.

குள்ளனை பார்த்து கேட்டேன், ஆமா இந்த பதிவு தலைப்பிலேயே கேள்வியும் பதிலும் இருக்குன்னு பதிவு எழுதுற படுக்காளிக்கு தெரியுமா… என நான் கேட்டவுடன். கலகலவென சிரித்து சொன்னான். பாவம் படுக்காளி, அவன் ஒரு புள்ள பூச்சு, அப்புராணி. தமிழ் மட்டுந்தான் அவனுக்கு தெரியும், இங்கிலீஷ்ல அதுக்கு சொல்யூஷன இருக்கிறது எனக்கு மட்டுந்தான் தெரியும், இப்ப உனக்கு அத சொல்லப் போறேன்…

நான் சுவாரசியமானேன்…… ஆர்வம் மேலிட சீட்டின் நுனி நகர்ந்து காதை தீட்டிக் கொண்டேன். மனதிற்குள் நமட்டுச் சிரிப்பு, ‘அப்போ என்ன சொல்ற, படுக்காளிக்கு இந்த விசயம் தெரியவே தெரியாதா…. ஐய்யோ… ஐய்யோ….’

நன்றாக் கேட்டுக்கோ…. என்னை அனுமதித்து உள் வர அனுமதித்தாயல்லவா அதில் இருக்கிறது உனது வெற்றி. பயப்படாதே, அமைதியாய் அன்பாய் என்னை பேச விடு, நான் சொல்வதை கேள். ஏழடி என நீ நினைத்தது ஓரடி தானே…. அழுக்கு என நீ நினைத்தது இல்லை தானே. ஆம் என்னை அனுமதிக்கும் மனப் பக்குவம் வருவது தான் சிரமம். வந்து விட்டால் எல்லாம் வெற்றிதான். உனக்கு வெளியில் இருந்து உரக்கச் சொல்ல ஆள் இல்லையென்றால் மனிதனான் நீ மகான் ஆகிவிடலாம். இது நீ நினைப்பது போல் மிகச் சிரமமான காரியம் இல்லை. ஈசிதான்….

ராமசாமியும் ரங்கசாமியும் உள்ளே அனுமதிக்காமலேயே செத்து கூட போகலாம். சரி இது தான் அந்த ரகசியம். மூன்று வார்த்தை பதங்கள்

தாட் என்பது நினைவு,

பூட் என்பதில் காலுக்கு செருப்பு / எட்டி உதை… செய்தால் மீண்டும் தமிழுக்கு வருகிறது.

தஞ்சாவூர் – பெரிய கோவில் கற்றளி

உன் நினைவுகளை நெறிப்படுத்தினால் நீயும் தஞ்சை கோவில் போல் சந்திர சூரியர் உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும் சாஸ்வதம் அல்லது சாதனை படைப்பாய்.