பக்கங்கள்

ரஜினி... பார்க்கத் தவறும் கோணம்

ஒரு முண்ணனி தொலைக்காட்சி, 'இந்த டீகேட்டின் சிறந்த இந்தியன்’ எனும் விருதை சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்துக்கு வழங்கி கௌரவப்படுத்தியது. அவார்டு வாங்க அவர் மேடைக்கு அழைக்கப்பட, மின்னலென வந்து, அன்பாக…. ஒரு நிறைந்த அமைதியாய் நின்றார்.

மேடையில் ரஜினி பாந்தமாக நிற்க, மிச்சமிருந்தவர்கள் எல்லோரும் ஒரு வித பரவசத்தில் இருந்தனர். பிரணாய் ராய், சிதம்பரம், வித்யா பாலன், திரிஷா என எல்லோருமே ஒரு குழந்தை போல் குதூகலத்துடன் இருந்தனர். அதிலும் வித்யா பாலன் எங்கள் அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என மகிழ்ந்து கூறினார். ரஜினி எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு திரை உருவம் என்பதை, அந்த ஒரு காட்சியே விளக்கி சொன்னது.

1996 தொடங்கி இன்று வரை, ரஜினி எங்கு சென்றாலும் கேட்கப்படும் ஒரு கேள்வி, அரசியலுக்கு வருவீர்களா…. இல்லையா????. இக்கேள்வி எல்லோராலும், எல்லா நேரத்திலும் கேட்கப்பட்டும் கூட, இன்றும் ஓயவில்லை.

ஆச்சரியமாக இருக்கிறது, இப்படி ஒரு கேள்வி பதில் பெறாமல் இத்தனை நாட்களுக்கு நீண்டிருக்கிறதே…. என்றாலும் இன்றும் இந்த கேள்விகளும், அவர் எண்ணம் தெரிந்து கொள்ளும் முயற்சியும் சலிக்கவில்லை என்பது ஆச்சரியமான நிசர்சனம்.

வழக்கமாக கேட்கப்படும், அதே!!! கேள்வி இன்றும் கேட்கப்பட்டது. அவரோ சிரித்துக் கொண்டே, இல்லை அரசியல் பற்றி கருத்து சொல்ல விருப்பமில்லை என்றார். இது குறித்து எனக்கு தோன்றியதையே இங்கு பதிக்கிறேன்.

ரஜினி தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்தவர் மிகப்பெரிய சாதனைகள் செய்தவர், அவருக்கான வாழ்வு பற்றிய புரிதலும், தெளிவும் நிச்சயம் ஒரு கோணத்தில் இருக்கும் என்பது நமக்கு புரிகிறது. நாம் அறியாத, நாம் புரியாத பரிமாணங்களை அவர் தரிசித்திருக்கலாம், என்றாலும், எனது சில எண்ணங்கள்.

சரணாகதி தத்துவத்தின் மிகச் சரியான எடுத்துக்காட்டு ரஜினிதான். அடைந்துள்ள வெற்றி, தன் உழைப்பால் அல்ல, தன் சிந்தனையால் அல்ல, எல்லாம் இறைவன் அருள், இறைவன் அருள் மட்டுமே, வேறு ஒன்றுமே இல்லை, என 100 சதவிகிதம் உள்ளுக்குள் நம்புகிறார், அதையே பேசுகிறார்.

அவரது எத்தனையோ செய்கைகள் இதைத்தான் நமக்கு சொல்கின்றன. இல்லையென்றால், எந்திரன் எனும் திரைப்படம் வெளி வந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற நேரத்தில் கூட நாலு முழ வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, கையில் தட்டு வைத்து புளியோதரை சாப்பிடும் அளவுக்கு ஒரு யதார்த்தம் மிகப் பெரிய ஆச்சரியமே.

அவரை அரசியலுக்கு வா… வா… எனச் சொல்லும் பொது மக்களின் மனதை பார்த்தால், அந்த விண்ணப்பத்தில் ஒரே ஒரு எண்ணம்தான் உண்டு. நம்மை ஆள நல்ல ஒரு மனிதன் வேண்டும், நேர்மையான திடமான வீர்மான ஒரு தலைவன் வேண்டும் என நினைக்கும் நினைப்பு மட்டுமே இருக்கிறது. தமிழகத்தின் நிறைய பேருக்கு தெரிந்த இந்த குணங்கள் உள்ளவர் ரஜினிகாந்த். எனவேதான் எங்களை ஆள வாருங்கள் என அழைக்கிறார்கள்.

என்றாலும், அரசியலுக்கு வருவதென்பது, ஓப்பன் வேனில் சிரித்து கையாட்டி, மைக்கில் பேசுவது மட்டுமல்ல. ஓட்டுக்களை வாங்கி, தேர்தலில் வெற்றி பெற்று, கோட்டையில் அமர்வது மட்டுமல்ல. அரசியலின் அடி நாதம் நிர்வாகம். அவரை வரச் சொல்லி வற்புறுத்தும் மக்களுக்கு, இதை விளக்க ஒரு சிறு கற்பனை சம்பவம்.

தமிழ் நாட்டின் ஒரு முக்கிய நகரத்தின் மையத்தில், பரபரப்பான ஒரு சாலையின் ப்ளாட்பார்ம் கடைகள் மிகுந்து இருக்கிறது.

எங்களால் நடக்க முடியவில்லை. சாலையில் விபத்துக்கள் அதிகரிக்கிறது. மிகவும் தொந்தரவா இருக்கு இந்த நடைபாதைக் கடைகளை நகர்த்துங்க எனும் மனு ஆட்சியாளரான தங்களை வந்தடைகிறது.

இல்லைங்க இதுதான் எங்க பொழப்பு, எங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு. வேற இடம் போக சொன்னீங்கன்னா பிசினஸ் ஓடாது. தயவுசெஞ்சு எங்கள இங்கயே இருக்க விடுங்க எனும் மக்கள் கூட்டம் இன்னொரு பக்கம்.

தாங்கள் என்ன முடிவெடுப்பீர்கள். இருவரும் தங்கள் குடி மக்கள் தான். சட்டப்படி பார்த்து அவற்றை உடனடியாக அகற்றுவீர்களா, அல்லது மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வீர்களா….

நாடு என்பதே, டார்வின் தத்துவப்படி சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட், என நம்பும் மக்களின் போராட்டங்கள் நிறைந்ததே. இதில் எந்த பிரிவை ஆதரிப்பது என்பது மிகவும் நுணுக்கமான ஒரு முடிவு எடுத்தல். இது போல் ஒன்றல்ல இரண்டல்ல, ஓராயிரம் பிரச்சனைகள் வரும். ஒரு நாளைக்கு 25 மணி நேரத்துக்கான வேலை பளுவோடு வருவது தான் முதல்வர் பதவி. மேற்கூரிய இந்த முடிவு எடுக்க உச்சகட்டமாக ஒன்றிரண்டு வினாடிகள் தான் உங்களுக்கு கிடைக்கலாம்.

இத்தகைய ஒரு நிர்வாகப் பணியை ஆர்வத்துடன் ஆத்மார்த்ததுடன், நேர்மையுடன் மனிதாபிமானத்துடன் செய்யும் முனைப்பு ஒரு நல்ல முதல்வருக்கு வேண்டும். எடுக்கும் முடிவில் ஒரு பிரிவினருக்கு சாதகமும், இன்னொரு பிரிவுக்கு பாதகமும் இருக்க வாய்ப்புண்டு. தொலை நோக்கு பார்வையும், கட்சியை கட்டி காப்பாற்றி, அரசியலும் செய்து, ஆட்சியும் செய்யும் மிக கடினமான ஒரு பணியே முதல்வர் நாற்காலி.

மீண்டும் ரஜினியின் மன நிலையில் பார்க்கும் போதும், அவரது ஆழமான நம்பிக்கையில், என் கையில் எதுவும் இல்லை, தான் இறைவன் இயக்கும் ஒரு கருவி மட்டுமே, இறைவன் சித்தம் இருந்தால்…. அவரது கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என நினைக்கிறார்.

அரசியலுக்கு வரணுமா … வேண்டாமான்னு, எனக்கு தெரியாது என தெளிவாய் இருக்கிறார். வருவேன் வரமாட்டேன் என தெரியாது என்கிறார். ஆனால் அவரது இந்த நிலைப்பாடு அவர் குழப்புகிறார், சுய விளம்பரம் தேடுகிறார் என மற்றவரால் புரிந்து கொள்ளப்படுகிறது.

என்றாலும் ஒரு கேள்வி, ஒரு படையப்பாவின் வெற்றிக்கு பிறகு, அவர் சோர்ந்து போகாமல் இன்னும் வெற்றி பெறுவேன் என முயற்சிக்கிறாரே. ஒரு பாபாவின் தோல்விக்கு பின்னரும் சந்திரமுகி என முயற்சிக்கிறாரே. ஒரு சிவாஜி, ஒரு எந்திரன் ஒரு ராணா என மீண்டும் மீண்டும் முயல்கிறாரே.


இது எல்லா வற்றிற்கும் அடிப்படையில் என்ன இருக்கிறது.

ரஜினி காணும் அந்த இறை சக்தி மட்டும் தான் இருக்கிறதா…. தனி மனித முயற்சிகள் இல்லையா….

நாமோ தொடர்ந்து அவரை, உங்கள் முயற்சியால் வந்தது என பார்க்க சொல்லி நிந்திக்கிறோம். இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருப்பதால் தான் இந்த நிலை.

ஒன்று நிச்சயம், என்று ரஜினி,…. தான்…… தனது முயற்சி, தன்னால் இந்த வெற்றி என அவர் பார்க்கத் துவங்கினால் நாம் இப்போது அறியும் ரஜினி காணாமல் போவார்.

'சித்தம்' இயக்குனர்களுடன் ஒரு சந்திப்பு

படுக்காளி: வணக்கம், தங்கள் சித்தம் குறும்படம் பார்த்தேன்.

சித்தம்: ரொம்ப சந்தோசம்.

படுக்காளி: அதென்ன புதுசா இருக்கே பேர் சித்தம்….?

சித்தம்: சித்தம் என்பது மிகவும் சுவாரசியமான ஒரு மனித உணர்வு. மனித இயலாமையின் உச்சம் வரும் போது…. யப்பா… முடியல…. நான் இல்லை, எனக்கு மேல் ஒரு சக்தி உண்டு என ஒத்துக் கொண்டு நாம் சொல்லுவது இந்த சித்தம் எனும் வார்த்தை.

படுக்காளி: புரியலீங்களே…

சித்தம்: நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது, நம்மால் முயன்ற வரை முட்டி மோதி பார்த்து விட்டு, ஒன்றுமே முடியாத போது… இனி நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனும் போது… ஹூம்…. ஆண்டவனுக்கு சித்தம் இருந்தா நடக்கட்டும் அல்லது விதியோட சித்தப்படி நடக்கும் என சொல்வது நம் மனித குலத்தின் மிகப் பெரிய பலம்..

படுக்காளி: சரி, இக்குறும்படத்தின் நோக்கம் என்ன…

சித்தம்: அவ்வுணர்ச்சியை கோடிட்டு காட்டி, ஒரு உணர்வின் பாசிட்டிவ் விதை விதைப்பதே எங்கள் எண்ணம் இந்த குறும்படம் பார்வையாளருக்கு ஒரு ஆக்கபூர்வமான சிந்தனையை விதைத்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி, நிறைவு.

படுக்காளி : சரி சித்தத்தின் கதை என்ன, ஒரு வரிக்கதை சொல்லுங்களேன்….

சித்தம்: ஒரு வரி என்ன… ஒரு வார்த்தையில் சொல்கிறோம். பணப்பயணம்.

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு காத்துலயா போயிடும். நிச்சயம் இல்லை எனும் தத்துவத்தின் அடிப்படையில், ஆட்டய போட்ட அமௌண்ட்ல ஒட்டைய போட்டு, எப்படி !!! அவனையே கதறிகிட்டு கொண்டு வர வைக்கிறார்கள். அதன் பின் பணம் கைக்கு வரும் வேளையில் அது எங்கு போகிறது எனும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் சித்தம்.

படுக்காளி: தங்கள் குழுவைப் பற்றி சொல்லுங்களேன்.

சித்தம்: அனுபவங்கள் இல்லாமல், ஆர்வம் மட்டும் மிகுந்த நண்பர் குழு.

படுக்காளி: சித்தம் தொடங்கியது எப்படி

சித்தம்: நாலு கேரக்டருக்குள்ள…. நமக்குள்ள இருக்கிற ஆட்களுக்கு தகுந்த மாதிரி இருக்கணும், பெரிய உடையலங்காரமோ, மேக்கப்போ, செட்டிங்ஸ் அல்லது ரயில்வே ஸ்டேஷன் இதுமாதிரி எந்த பின்புலமோ, இருக்க கூடாது. எதார்த்தமா, 10-15 நிமிசத்துல சொல்லி முடிக்கிற மாதிரி இருக்கணும். என்றாலும் வலிமையான ஒரு கருத்தை முன் வைக்கணும் என எங்களது எல்லைகளின் வரைமுறைகளை தெரிந்தும் புரிந்தும் நாங்கள் அமைத்துக் கொண்ட களமே சித்தம்.

படுக்காளி: வாசகர்களுக்கான வேண்டுகோள்

சித்தம்: மழலை நடை, மழலை பேச்சு என்பது திரைப்பட உருவாக்கத்துக்கும் பொருந்தும் தானே. சித்தம் திரையாக்கத்தில் இன்னும் மேம்பாடுகள் செய்யலாம் என்பது எங்களுக்கும் தெரிகிறது / புரிகிறது. அதை நோக்கி பயணிக்கிறோம். இந்த கன்னி முயற்சிக்கு அனுசரணையும்ஆலோசனையும் மிக மிக அவசியம்.

படுக்காளி: வாழ்த்துக்கள். தங்களின் எதிர்காலத் திட்டம்

சித்தம்: எல்லாம் ஆண்டவன் சித்தங்க… நம்ம கையில என்ன இருக்கு

என்று அவர்கள் என்னிடம் திருப்பி சொல்ல, படுக்காளி நான் திகைத்து நின்றேன்.

சித்தம் குறும்படத்தின் பகுதி - 1

http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

சித்தம் குறும்படத்தின் பகுதி - 2

http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw