பக்கங்கள்

ஆன்மீக அல்வா – (பகுதி – 4)

நீராவி இன்ஜின கண்டுபிடிச்சது யாரு? கம்புயூட்டர கண்டுபிடிச்சது யாரு? வேக வேகமாய் நடந்து கொண்டிருந்த இரு பள்ளி சிறுவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை களவாடி காற்று நம் காதுகளுக்கு சொன்னதே மேற்கூரிய இந்த கேள்விகள். சக நண்பனை கேள்விகளால் துளைத்தான்,  எக்ஸாம் எழுதப் போகும் நம்ம சின்ன வாண்டு. 

கேள்வி கேட்கப்பட்ட கண்மணி  பொறுமையின்றி திருப்பி கேட்டான் எக்ஸாம கண்டுபிடிச்சது 
யாருடா, அவன் மட்டும் கையில கிடைச்சான்னா.....

எப்படி இருக்கும். எக்ஸாம் எனும் ஒன்று இல்லாமலே இருந்தால். ஆஹா சூப்பரப்பு. பிரஷர் இல்லை, பயம் இல்லை. எக்ஸாம் பீவர் இல்லை.... எவ்வளவு நல்லாயிருக்கும், ஆஹா பரவாயில்லையே... நிறைய இல்லை இருக்கே எனும்போது, அது மட்டுமா.

இன்னும் நிறைய இல்லைகளும் உண்டு. நோக்கம் இல்லை, வெற்றி இல்லை, படிப்பினை இல்லை, அறிவு விருத்தி இல்லை, பிரமோஷன் இல்லை. எனவே பிடிக்குதோ இல்லையோ தேர்வு அவசியமாகிறது.

இதோ நம் ஆன்மீக அல்வா தொடருக்கும் ஒரு காலாண்டு தேர்வு. ஆமா இதுவரை சாதிச்சது என்ன, எங்கு நிற்கிறோம் நாம், என அடுத்த பகுதியில் ஒரு குயீக் ரிவியூ செய்வோமா. யெஸ், நல்ல முடிவுதான். அடுத்த பகுதியில் நாம் இதுவரை பேசிய தகவல்களை அலசி, நாம் அடைய நினைத்த இலக்கை அடைந்தோமா, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என தெளிவு அடைவது நல்லதல்லவா. செய்வோம்.

அண்மையில் நம் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி, யோகா கற்றுக் கொள்ள சென்றாராம். அப்படியா என்ன, நம்பவே முடியல, அதிருக்கட்டும் அது என்ன ஆன்மீக தொடர்ல பகுத்தறிவு பகலவன் என்டிரி கொடுக்கிறாரே என தாங்கள் புருவமுயர்த்தினாலும், பத்திரிக்கை சொன்ன ஒரு தகவலையே இங்கு தருகிறேன். யோகா வாத்தியார் யோகப் பயிற்ச்சியில் ஒரு கட்டத்தில் ஒரு போஸில் நிற்கச் சொல்லி விட்டு, ஓம் நாராயணயாய நமஹ என சொல்லுங்கள் என சொல்ல, நம்மாளுக்கு பகுத்தறிவு தடுத்து விட்டது. 

என்னால் நாராயணா என சொல்ல முடியாது என சொல்ல, என்ன செய்வது என பொதுக்குழு கூட்டாமலேயே அங்கு விவாதிக்கப்பட்ட்து.

பின்னர் எல்லோரையும் திருப்தி செய்யும் வண்ணம், ஒரு கூட்டணி ஷேரிங் பார்மூலா தயாரிக்கப்பட்டது. வாய் விட்டு வார்த்தை பதம் ஒன்றை சொல்லி, சொல்லி வணங்க வேண்டும் அவ்வளவு தானே, எனக்கு சூரியன் ரொம்ப பிடிக்கும் சூரியனே என சொல்லவா, என கேட்டு அனுமதி வாங்கி. வாய் விட்டு சூரியனே எனக்கு சக்தி கொடு எனும் ரீதியில் முழங்கி, யோகா முடிந்து விட்டது.

இதுபோல் ஒரு சோதனை நம்மாளு எட்டையபுரத்து எதார்த்த எம்டனுக்கு வந்தது. அவரும் யோகா பயிற்சிக்கு செல்ல, ஓம் என வாய் விட்டு கத்துங்கள் என யோகா வாத்தியார் சொன்னார்.  ஓம் எனும் ஒலியை சொல்ல மறுத்து விட, அவரை புரிந்து அமைதியாய் அருகில் வந்து வாத்தியார் இப்படி சொன்னாராம்.

உங்கள் கையெடுத்து அடி வயிற்றில் வைத்து கொண்டு, உங்கள் காலை யானை மிதித்த மாதிரி சத்தமாக ஆ !!! என ஒரு நான்கைந்து வினாடிகள் சத்தம் எழுப்புங்கள். உள்ளுக்குள் ஒரு அதிர்வு தெரிகிறதா. சரி அப்படியே கையை உயர்த்தி நெஞ்சில் விலா எலும்பருகில் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, ஐஸ் கட்டிய வாய்க்குள்ள போட்டா மாதிரி  உ...ஊ.... என நான்கைந்து வினாடிகள் சொன்னால் மார்புப் பகுதியின் உள்ளே அதிர்வு, அதே கையை உயர்த்தி நெத்தியில் வைத்து கொண்டு பஸ் கார் ஓட்டி விளையாடுற மாதிரி ம்....ம்.... என நான்கைந்து வினாடிகள் சொன்னால் மண்டைக்குள்ள புல்லா கிர்ருங்கும்..... 

இந்த ஆ + ஊ + ம் = ஓம் !!!

ஆ, ஊ, ம் எனும் வார்த்தைகளை கோர்த்தால் கிடைப்பது ஓம். எனவே ஓம் என சொல்லும் போது உள்ளுக்குள் இந்த மூன்று இடங்களிலும் அதிர்வு ஏற்படும்.

சரி உங்களால் ஓம் சொல்ல முடியவில்லை, சிறு வயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்ட மத நம்பிக்கையை மீற வேண்டாம். உங்களுக்கு மனம் ஒப்பவில்லை என்றால் ஆமென் என சொல்லுங்கள், அல்லது ஆமீன் / அல்லா சொல்லுங்கள், புத்தம் என சொல்லுங்கள் எல்லாம் ஒரே எபக்ட்டுதான் என்றார்.

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் உடலுக்கு தேவையான கிரியேட்டிவ் எனர்ஜி தரும் சுரப்பிகள் இருக்கின்றன. எல்லா புரொடெக்‌ஷன் ஐட்டங்களும் இங்கு இருக்கிறது, மார்புப் பகுதியில் உள்ளுக்குள் மெயிண்டெனென்ஸ் எனர்ஜி செக்‌ஷன் இருக்கிறது, கண்ட்ரோல் செக்‌ஷன் பூராவும் தலைப்பகுதியில் இருக்கிறது.

கடவுளை மூன்று தெய்வங்களாகவும், படைக்க, காக்க அழிக்க என மூன்று தொழில்கள் செய்வதாய் சொன்னதே இந்த செயல்பாட்டின் அடிப்படை எனும் காலஷேபம் கூட காம்பிரமைஸிங்கா இருக்கே என கடவுள் தோன்றலின் விளக்கத்துக்கு பொருத்தமா இருக்கே என கன்வின்ஸூடு கந்தசாமி சொல்றாரு.

ஆங்... சாமி பூதம் எல்லாம் கிடையாது. பத்து நாள் பல்லு விளக்காம கூட இருப்பேன், சாமி பேர மட்டும் என் பல்லுல பட வுட மாட்டேன், அந்த சாமி பேர நான் சொல்லவே மாட்டேன் என முடிவெடுப்பதும், என்னதான் இருக்கு என சோதிச்சு பார்ப்போமே என வாய்விட்டு ஒரு கத்து கத்தினால் என்னாகும் என நாமே சோதித்து முடிவு எடுக்கும் சக்தி நம் கைகளில் உள்ளது.

ஆன்மீக பயிற்சி எனும் சுவை தெரிய இதோ ஒரு ஆடியோ பைல் இருக்கிறது. கொஞ்ச நேரம் ஒதுக்கி இந்த ஒலிச் சந்தியை கேளுங்கள். நல்ல ஒரு அனுபவம் கிடைக்க ஆல் த பெஸ்ட்.




அப்போ தனியா உக்கார்ந்துகிட்டு ஆ....ன்னு கத்துறதுதான் ஆன்மீகமா.... இந்த ஆ... வோட.  ராகம் தான் ஆன்மீகமா.... என நைட்டு தூக்கத்தோட பைட்டு போடும் டைட்டு மைட்டானிக் கேக்கிறாரே, அவருக்கு ஒரு பதில சொல்லிட்டு மேல போவோமா....   

ஆன்மீகம் என்றால் என்ன? சிம்பிளா சுருக்கமா ஒரு விளக்கத்துக்கு முயற்ச்சிக்கலாமே. இது ஆன்மாவின் தேடல், ஆண்டவனிடம் சரணாகதி என மற்றவர் சொல்வதையே திருப்பி சொல்லாமல், முழுதும் புரியாத சில வார்த்தைகளுக்கு லீவும் கொடுத்துவிட்டு வேறு ஒரு புதிய கோணத்தில் கோணல் மாணலாய் இல்லாமல் ஸ்டெய்ராய் சொல்ல முயற்ச்சிப்போமா.  

வெயில் சுட்டெரிக்கும் ஒரு மதிய வேளையில், மேல் மூச்சு கீழ் மூச்சு எல்லாம் வாங்கி, தாகம் தொண்டைய பதம் பார்க்கிற நம்ம பரந்தாமன பாருங்களேன். உடல் பூரா தளர்ந்து தண்ணீர் தண்ணீர் என மட்டுமே ஏங்குகிறது. சுத்தி சுத்தி எங்காவது தண்ணீ இருக்கா என பார்க்கிறார். எங்குமே இல்ல. வேற வழியே இல்லாம அதை தேடி தேடி நடக்கிறார். கடைசி கடைசியா, ஒரு வேப்ப மரமும், மண் பானையும் குளிர்ந்த தண்ணீரும் பார்த்தார். சுர்ருன்னு ஒரு ஜில்லிப்பு. ஒரு நிம்மதி, அரக்க பரக்க ஓடி வந்து பானைய தொறந்து ஆ.... வேக வேகமா தண்ணீர் மொந்து ஒரு ரெண்டு மொடக்கு குடிச்சார். சுகம், அப்படியே லயிச்சு போயிட்டார். மொடக் மொடக்குன்னு ஒரு ரெண்டு சொம்பு தண்ணி உள்ள போனதும், கண்ண மூடி, அந்த சுகத்தில் ஆழ்ந்தார். அப்போ வேப்ப மரத்து காத்து சுழன்று அடிச்சுச்சு. ஹா.... என ஒரு நீண்ட பெறுமூச்சு விட்டு, கண்ண மூடி அப்படியே உக்கார்ந்துட்டார்.

வாசக நண்பர்களே, நிச்சயம் நாமும் முன் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு சுகம் அனுபவித்து இருப்போம். ஒரு சிறு வேண்டுகோள் அல்லது பயிற்சி. இப்படி ஒரு சூழலை, தாங்கள் அனுபவித்த நிகழ்வை மனதில் அனுமதித்து அப்போதைய தங்களின் உணர்வையும் நிலையையும் கொஞ்சம் அனுபவியுங்களேன்.

சரி, இப்போ சில கேள்விகள், வாசிப்பதை நிறுத்தி விட்டு சில நொடிகள் கண் மூடி அமர்ந்து இதில் பங்கு பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். இல்லையா, வேக வேகமா வெறுமே வாசிச்சு கிட்டு தான் இருந்தீர்கள் என்றால் மீண்டும் ஒரு முறை வேண்டுகிறேன், செய்துதான் பார்ப்போமே. என்னதான் இருக்கிறது இந்த ஆன்மீகத்தில் என இரண்டில் ஒன்று பார்க்கும் முடிவில் இருந்து நாம் பின் வாங்க வேண்டாம், வெறுமனே கருத்து சேர்க்கும் கோஷ்டியில் ஒருவர் என நம்மை அனுமதிக்க வேண்டாம்.  

சரி இனி ஒரு கேள்வி. அது ஏன் கண்ண மூடுறோம்.

அந்த சுகத்தை அனுபவிக்க ஆசைப்படுகிறோம். ஆழமா உள்ளுக்குள் போய் அந்த ஆ... ஹா.... நேரத்தை இன்னும் கிட்ட்த்தில் தரிசிக்க. அவ்வுணர்ச்சியை மனசில் பதிக்க விரும்பியே அப்படி செய்கிறோம். மற்றொன்று அந்த சுகம் போய் விடக்கூடாது என்பதற்க்காக. பார்வையிலோ, மற்ற புற விசயங்களிலோ நம் கவனம் சிதறக் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம். இன்னும் உபரியாய் தங்களுக்கு தோன்றியதை எனக்கு மின்ன்ஞ்சலிலோ, பின்னூட்டத்திலோ சொல்லுங்களேன்.  

இது மனித மனதின் ஒரு ஆழமான, முக்கியமான தேவை. அந்த ஆ!!! நேரம் அல்லது ஹா!!!! நேரம்.

காலையில் எழுந்து தூக்கத்தை உதறிவிட்டு வாக்கிங் போவதும், வாக்கிங்கும் வேண்டாம், பார்க்கிங்கும் வேண்டாம், நான் இன்னும் தூங்கறேன் என இழுத்து போர்த்தி தூங்குவது என மனிதன் செய்யும் எந்த செயல்களின் பின்னால் இருப்பது இந்த ஆ... அல்லது ஹா நேரத்துக்கு செல்வதற்காகத்தான். அப்படியா என்றால் ஆம், நம் எந்த செய்கைக்கும் பின் ஒளிந்து இருப்பது அல்லது பூதாகாரமாய் பரவி நிற்பது இந்த நினைப்புக்கு தான். மேலை நாட்டின் ஒரு அறிஞன் சொன்னது போல், ஒற்றை வரியில் சொன்னால். மனித வாழ்வின் நம் அத்தனை செயல்களின் நோக்கம் என்ன ‘AVOID PAIN AND SEEK PLEASURE’

பாருங்களேன், உணவு, உறவு, வெற்றி, கேளிக்கை என எந்த நம் செயல்களிலும் ஒழிந்து கொண்டிருப்பது இந்த தேவைதான். செத்து போன எங்க அம்மா இருந்தா எப்படி இருக்கும், எங்க ஊர் சாப்பாடு இருந்தா எப்படி இருக்கும், என் வீட்டு லோன் சாங்ஷன் ஆனா எப்படி இருக்கும் என எந்த ஒரு ஏக்கத்திலும் அடி நாதமாய் இருப்பது அந்த ஹா... தான்.

இந்த ஆ... அல்லது ஹா !!!! நேரத்துக்கு விசா வாங்கவே .... அதில் இன்னும் கொஞ்சம் ஆழமாகவோ, நீளமாகவோ இருக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவது ஆன்மீக சிந்தனைகளும் பயிற்சிகளும்.

இன்றைய சிந்தைகளை அசை போட அவகாசம் எடுத்து தொடரும் எனும் வேகத்தடையை அனுமதிப்போமா.



தொடரும்.......

ஆன்மீக அல்வா – (பகுதி – 3)

கிரிக்கெட்டில மட்டை எடுத்துட்டு போன, நம்ம எதிரி வட்டமா ஒரு முட்டை வாங்கினா டக் அவுட், எல்லா விக்கெட்டையும் வச்சிக்க நீன்னு நம்மகிட்ட கொடுத்து ஆப்போஸிட் பார்ட்டி அப்பிட் ஆயிட்டா ஆல் ஆவுட், டிரெயின்ல டிக்கட் எடுக்கலேன்னா வித் அவுட், நம்ம ஆன்மீக அல்வா தொடர் சூப்பர் ஹிட்டு என தமிழிஸில் தாங்கள் அளிக்கும் வாக்குகளுக்கும், தொடர் ஆதரவுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

நான் பெரிதும் நேசிக்கும் ஒரு நண்பர், உங்க கார்ட்டூன் எல்லாம் பிரமாதம் என உன்னிப்பாய் கவனித்து விட்டு மின்னஞ்சலில் சொன்னார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. சென்ற பகுதியில் ஒரு கார்ட்டூன், என் புருசன் என்னை மானே மானேன்னு கூப்பிடுறாரு, அதனால இனி நாந்தான் மான், நீ வேற பேரு வைச்சுக்கோ என ஒரு கார்ட்டூன். மனித வாழ்க்கையில், மாறுமா நம் அடையாளங்கள்??? சமூகம் நம் மேல் பூசும் வண்ணப் பூச்சு எப்படி நம்மை மாற்றியமைக்கின்றன, என சொல்வதற்காக சித்தரிக்கப்பட்டது. ஆழமான கருத்துக்களை எளிமையாய், எபக்டிவ்வாய் சொல்ல கேலிச்சித்திரம் கை கொடுக்கிறது.

ஒரு நண்பர் மட்டும் அக்கரையாய் என்னருகில் வந்து, இந்த தொடர் கலகலப்பாய் செல்கிறது, வழுக்கிட்டு வாய்க்கால்ல போறா மாதிரி இருக்கு, சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை, என்றாலும் ஆன்மீகம் என ஆரம்பித்து விட்டு இப்படி பொறுப்பில்லாமல் கொண்டு செல்லலாமா என கேட்க, அவரின் உண்மை அக்கரையை மனதில் கொண்டு சொன்னேன். செய்துறலாமுங்க, நிச்சயம் ஆரோக்கியமா ஆழமான ஒரு மாறுதல் கொண்டு வர திட்டம் இருக்கு. இதை விளக்கமாய் சொல்கிறேன், வாருங்களேன் அடுத்த பாராவுக்கு.


உங்கள் அலுவலக மேஜை, அல்லது அதன் மேஜை டிராயர், இல்லை வீட்டு அலமாரி ஏன் ஒரு பைல் இப்படி மேற்கூரிய சமாச்சாரங்கள் நிரம்பி வழியும் ஒரு தருணத்தில் இனி காற்று கூட இதில் வைக்க முடியாது என ஒரு நிலை வரும்போது, வேற வழியே இல்லாமல், ஓகே!!! ஒதுங்க வைக்கிறேன் என அடுக்க தொடங்குவோம். நிச்சயம் இது மாதிரி ஒரு அனுபவம் நம் வாசக நேயருக்கு இருக்கும் என நம்புகிறேன், இல்லையா உடனே செய்து விடுங்கள்.

ஒதுங்க வைக்கிறேன் என சொல்லி என்ன செய்வோம், ஒவ்வொண்ணாய் வெளியே எடுத்து அதனதன் பிரிவில் (categorize) வைப்பது முதல் வேலை. அடுத்தது, சே இன்னுமா இத வச்சிகிட்டு இருக்கோம், என அவசியமில்லாததை தூக்கி கடாசுவோம், பின்னர் எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்த்தால் இருக்கும் வெற்றிடத்தை வெறிப்போம், அந்த அந்தகாரத்தை அறிந்ததால் அதன் அளவு, இயல்பு எல்லாம் நமக்கு தெளிவாய் தெரியும்.
இனி ஒவ்வொன்றாய், நமக்கு தேவையானதை அவசியமானதை உள்ளே வைத்து முடிக்கும் போது, ஹேய்... அதெப்படி இன்னும் நிறைய இடம் இருக்கே, இன்னும் ஒரு வண்டி சாமான உள்ள வைக்கலாமே என தோணும். அதெப்படி கொஞ்ச நேரத்துக்கு முன்னால காத்த கூட வைக்க முடியாதுன்னு யோசிச்ச இடத்துல எப்படி இவ்வளவு இடம் கிடைச்சுது.

இதுதான் நேயர்களே நம்மை நாம் ஒருங்கிணைப்பது. நம் பழக்கங்கள், செயல்கள், சிந்தனைகள், வேல்யூ சிஸ்டம், போக தீர்மானித்த பார்வை என எல்லாவற்றையும் வெளிய எடுத்து வைத்து அவற்றை புரிந்து அல்லது பிரிச்சு மேஞ்சுட்டு அப்பாலிக்கா அடுக்கினா வாழ்க்கைல அமைதியும் சமாதானமும் தெளிவும் இருக்கும் என நம்புகிறேன். நம் வாழ்க்கையை இப்படி அடிக்கடி அடுக்கி வைத்தால் அம்சமானது, சரி அடிக்கடி செய்ய முடியலேன்னா கூட, எப்பவாவது ஒரு முறை அடுக்கி வைக்க வேண்டும் எனும் கோரிக்கைதான்.

ஐ ம் சாரி, டைம் இல்ல, நான் ரொம்ப பிஸி என பீலா உடுவது யாரை திருப்திபடுத்த.... யோவ் அதுதான் தெரியுமேயாய்யா ஒரு நாளைக்கு 24 மணி நேரம்ன்னு பின்ன நேரம் இல்லன்னா எப்படி. சும்மா ஓடி ஓடி ஒஞ்சு போறதுல என்ன அர்த்தம்ன்னு. கோபக்கார கோவிந்தன் கேக்குறாரே.... அது சரிதானான்னு தோணுது. நம் அடிப்படைகளை புரிந்து தேவைகள் தெரிந்து நமக்கு வேண்டிய லக்கேஜூடன் பயணம் செய்தால், நம் வாழ்க்கை எனும் பயணம் சிறப்பானதாகும்.

ஆன்மீகம் என நிறைய தகவல்களை சேர்த்து வைத்து அமுக்கி வைத்து திணறிக் கொண்டு இருக்கிறோமே, கடவுள்ன்னா என்ன, விதின்னா என்ன, வாழ்வின் நோக்கம்ன்னா என்ன, நித்திய வாழ்வு சாத்தியமா என எத்தனை எத்தனை கேள்விகள். ஆனாலும் பாருங்களேன் நம் ஆன்மீக சிந்தனைகளில் நிறைய பயம்தான் இருக்கிறது. இந்தா போறாரே அவரு ரொம்ப நல்லவரு.... காட் பியரிங் மேன்..... என சுட்டிக் காட்டி, கடவுளுக்கு பயந்தவர் சமூகத்தில் மரியாதைக்குறியவர், நம்பிக்கைக்குரியவர்.

கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் எனும் பூச்சாண்டி அவசியமா அல்லது, காட் இஸ் லவ், அன்பே கடவுள் என அதிரடியாய் சொல்லி கடவுளை அன்போ காதலோ செய்ய முடியுமா. சுமை சுமந்து சோர்ந்து போயிருக்கும் நம் நண்பர்களுக்கு முதுகு சொறிந்து விடும் நோக்கம் அல்ல இத்தொடர், அவர்கள் சுமைகளுக்கு சும்மாடு தர முடியுமா, அல்லது சிலவற்றை தூக்கி கடாச முடியுமா என அக்கரையுடன் யோசித்தே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என மேலும் அவரை சமாதானம் செய்ய ஒரு குட்டியாய் கதை சொன்னேன்.

உலகின் மிக சிறந்த பல் டாக்டர் ஜப்பான்ல இருந்தாரு, அவரு பேரு மிஸ்டர். பிரிச்சு மேஞ்சுருவார். அவர்கிட்ட டிரிட்மெண்ட் எடுத்துக்கலாம்ன்னு எட்டூரூ கடியூரப்பா போனாராம். கடவாய்ல ஒரு சொத்தை பல்லு அதை வலிக்காம ரூட் கேனல் பண்ணுங்கன்னு டாக்டருக்கு கோரிக்கை வைச்சாராம். போயி உக்கார்ந்தவுடனே யூ சி டாக்டர், எனக்கு என்னாச்சுன்னா நீட்டி முழங்க, டாக்டர் உஷ்ன்னு சொல்லி ரஜினிகாந்த் பாட்ஷா ஸ்டைல்ல கையை சுழற்றி காட்டி, சூக்கிமின்னா சூட்டிங்கா சூல்பிச்சுன்னாராம்.

எடியூரப்பாக்கு ஒண்ணும் புரியல, டெண்டல் டேபிள்ல உக்கார்ந்த்தும், கடந்த ரெண்டு வருசமான்னு மறுபடி தொடங்க, பாட்ஷா ஸ்டைல்ல மறுபடி கைய சுழற்றி சூக்கிமின்னா சூட்டிங்கா சூல்பிச்சுன்னாராம். எடியூரப்பா பேசாம இருந்துட்டாரு. வேலையெல்லாம் முடிஞ்சதும், சூப்பர், யப்பாடி, எவ்வளவு தொந்தரவு கொடுத்துக்கிட்டு இருந்துச்சு இந்த பல்லு. நச்சுன்னு சரி பண்ணிட்டீங்க. நான் நினைச்சதவிட நல்லா முடிஞ்சுது, இருந்தாலும் நடு நடுவே ஏதோ பாட்ஷா ஸ்டைல்ல கைய சுழற்றி சுழற்றி சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம்முன்னு கேட்டாராம்.

மெல்லிசா சிரிச்சுகிட்டே டாக்டர் சொன்னாராம். நல்லா தெரியுமூங்கோ.... ஐ நோ மை ஜாப், ஐ வில் டூ இட், யூ ஜெஸ்ட் ரிலாக்ஸ் !!!

கடையில போயி முட்டை வாங்கினா கரெக்கிட்டு, உடைச்சு கல்லுல ஊத்தினா ஆம்லேட்டு, எனக்கு இதுதான் வேண்டும் என பந்தியில் அமரலாம், படிக்கும் போது அமர முடியாது. விவாதங்களோ சர்ச்சைகளோ என்றுமே செயல்பாடு விதைத்ததில்லை. நம் தொடரின் நோக்கம் மிக எளிமையானது, ஆழமாய் உள் சென்று ஆன்மீகத்தின் நோக்கம் உணர்ந்து, நம் அடிப்படைகளை தரிசித்து, மிக நிச்சயமாய் நல்ல ஒரு மாற்றம் கொணரும் செயல் விதைப்பதே.

சூடம் அல்லது கற்பூரம் முகர்ந்து பார்த்திருக்கிறீர்களா. வெள்ளை உருவத்தில் மூக்கை துளைத்து ஒரு நருமணம் நம்மில் அதிரடியாய் படரும். ஆங்.... கொஞ்சம் ஸ்ட்ராங் ஸ்மெல்தான். நம்மையும் அறியாமல் கண்கள் செருகி, ஆழ்ந்த நீண்ட மூச்சு உழ் இழுத்து, உடலை தளர்த்தி அந்த வாசத்தில் அமிழ்ந்து போவோம். நிச்சயம் என்ன சிந்தனை மனதில் இருந்தாலும் எளிதில் தட்டி விட்டு மனதை ஒரு முகப் படுத்தும். தீ பற்ற வைத்தால், பட்டென பற்றி, எரிந்து முடித்து எரிந்த சுவடு இல்லாமல் இருக்கும். இது ஒரு நச்சுக் கிருமி நாசினி கூட, சில ஆயூர்வேதங்களில் அறிவியலிலும் இதன் மருந்து தன்மை பயன்படுத்தப்படுகிறது. வெறும் காற்றில் கரைந்து கூட ஒரு நறுமணத்தையும் கிருமி நாசினியாகவும் இது செயல்படும்.

இந்த கற்பூரம் ஆசியாவில் மட்டுமே இருக்க கூடிய ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சமாச்சாரம். அதனால் தானோ என்னவோ, இந்தியாவில் தொடங்கிய ஒரு மதத்தில் மட்டும் இது பயன்படுத்தப்படுகிறது

நம் வீடுகளில் இந்து மதம் இல்லாத வீடுகளின் ஷெல்புகளில் கற்பூரத்துக்கு இடம் உண்டா. கிடையாது. ஏன், எனும் எளிமையான கேள்விக்கு விடை காண, இந்த கற்பூரத்தின் கவர் பார்த்தால் புரியும் அதன் சூட்சமம். இந்து கடவுள் உருவங்களே பெரும்பான்மையாய் அதில் இருக்கும். அது ஏன், ஒரு பொருள் ஒரு நல்ல கிருமி நாசினி, நறுமணப் பொருள், அதெப்படி ஒரு மதத்துக்கு மட்டும் தாரை வார்க்கப்பட்டது.

கரெக்ட்டு, எனும் நம் சிந்தனைக்கு இன்னொரு அடையாளம் நினைவுக்கு வரும். அது குத்துவிளக்கு. தமிழ் கலாச்சாரத்தின் புண்ணியத்தில் குத்து விளக்கு இப்படி முழுவதும் ஒரு மத்த்தினுடைய முத்திரை குத்தப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரை குறையாய் விளக்கப் பட்டு குழப்பத்தோடே இருக்கிறது. சில இடங்களில் இதை தமிழ் எனவும் சில இடங்களில் இதை இந்துக்களின் விளக்கு எனவும் குறிக்கப்படுகிறது.

உங்கள் வீடுகளில் நெய் விளக்கு ஏற்றியிருக்கிறீர்களா. அதன் மணமும் ஒளியும் நிச்சயம் பிரத்யேகமானவை. அது போல் மஞ்சள், குங்குமம், துளசி, இன்னும் எத்தனை எத்தனையோ பொருட்கள்.

கிறிஸ்தவர்களின் மெழுகுதிரி, சாம்பிராணி, கொமஞ்சான், இஸ்லாமிய அத்தர், இன்னும் எத்தனை எத்தனை.

வாசக நேயர்களே ஒரு பொருள், அல்லது ஒரு ஒலி எப்படி ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமாகும். அதை உபயோகிக்கும் உரிமை எனக்கு மறுக்கப்படுமா.... மனிதனாய் பிறந்த நம் எல்லோருக்கும் அனுமதி உண்டல்லவா.

நல்ல விசயங்கள் பொருட்கள் எல்லாம் எல்லோருக்கும் சொந்தமானதே. அதை எங்களது என உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை, அது போல் இது அவர்களது என எதையும் ஒதுக்கும் அலட்சியமும் நமக்கு வேண்டாம். நம் தொடரின் முதல் பகுதி கேலிச் சித்திரம் சொன்னது போல், குளத்தோட கோவிச்சுகிட்டு தண்ணி குடிக்காம போனா யாருக்கு நஷ்டம்.

இனியொரு விதி செய்வோம், அதை என்னாளும் காப்போம். மதங்களின் பெயரால் என்றும் நம்மை பலவீனமாக்க அனுமதியோம். மனிதர்கள் அத்தனையும் ஒன்றே !!! எனும் ஒப்பற்ற தத்துவமே நம் தாய்மொழி. இல்லாது, நம்மை கூறு போடும் எந்த சக்தியையும் சகதியாக்குவோம், அச்சகதியின் மேல் எழுப்புவோம் நம் சக்தியின் சாம்ராஜ்யம்.

அல்வா கொஞ்சம் சூடாகி போச்சு, அடி பிடிக்கறதுக்கு முன்னால ஆற வைக்க, தொடரும் என அறிவிப்போமே.

அடுத்த பகுதியில் சந்திப்போமா....


தொடரும்....

ஆன்மீக அல்வா – (பகுதி – 2)

வாசக தோழமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. தங்களின் ஆதரவும் ஆலோசனையும் இத்தொடரின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் விளங்குகிறது.

உறுதுணை என்றதும் நம்ம உட்டாலங்கடி உன்னிகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வர்றார்.ஒரு நாள் உட்டாலங்கடி உன்னிகிருஷ்ணன் பேங்க்குக்கு போனாராம், உள்ள போயிட்டு அதே ஸ்பீடுல வெளிய ஓடி வந்து. உஸ். ஆ...ன்னு கைய உதறிகிட்டே ஓடி வந்தாராம்.

தடுத்து நிறுத்தி என்னங்க ஆச்சுன்னு கேட்ட்துக்கு. பணம் எடுக்க அக்கவுண்ட்ல கை விட்டேன், ஷாக் அடிச்சுருச்சுன்னாராம்.

அதென்னங்க இது அனியாயப்பட்ட ஊருல இப்படி எல்லாமா நடக்கும், இப்படி ஏன் ஷாக் அடிக்குது, நீங்க என்ன செஞ்சீங்கன்னதுக்கு. கரண்ட் அக்கவுண்ட்ல எக்குத் தப்பா கை விட்டுட்டேன்னு சொன்னாராம்.

அது மாதிரி தொட்டா டொமார்ன்னு ஷாக் அடிக்கிற சப்ஜெக்ட் ஆன்மீகம். அப்படி ஒரு ஆழமான சப்ஜெக்ட் எடுத்து தொடர் எழுதுறதுனால, சுர்ருன்னு சூட்டிப்பா இருக்குது அதோட கூட கொஞ்சம் யூஸ்...புல்லாவும் இருக்கு எனும் தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி. தங்கள் அன்புக்கு நன்றி கூறி, மன நிறைவுடன் நம் இரண்டாம் பகுதிக்கு செல்வோமா.

மக்கள் தொகை, சதவிகிதம் என ஜல்லியடித்த நம் முந்தைய பதிவு நமக்கு சொல்வது என்ன, மனித இனம் பூமி முழுதிலும் பரவி இருந்தாலும், ஒரு சில இடங்களில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் நெருக்கியும் இருக்கிறது. அப்படி இருக்க காரணம், சோறு கண்ட இடம் சொர்க்கமே என எங்கு குடிக்க தண்ணீரும், இருக்க இடமும் பாதுகாப்பும் கிடைக்கிறதோ அங்கு பட்டரை போட்டு பகுத்துண்பவனே மனிதன். ஒரு குடும்பமாய் சமூகமாய் அவன் கூடி கும்மியடிப்பது மனித இயல்பு.

இல்லேன்னு சொல்லாம, மனுசன இருக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம், ஒருத்தனா ஒத்தையா வாழு என்று, ஹூமும்... சான்ஸே இல்லை, ஒரே நாள்ல ஓடி வந்துருவான். ஆனா கேட்டா மட்டும் லீவ் மீ அலோன், தனிமையே இனிமை என ஆக்ட் கொடுப்பான். இது இன்று நேற்று அல்ல, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி என முழங்கிய கற்காலம் தொட்டு இருந்திருக்க வேண்டும்.

அப்படி, மக்கள் அதிகம் வாழும் இடத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக அவசியம். அடுத்தவனுக்கு பாதகமில்லாமல் வாழ ஒரு நெறிமுறை நிச்சயம் வேண்டும். இப்படி ஒரு இடத்தில் ஒரு மதம் உருவாக்கப்பட்டால், பின்பற்றப்பட்டால் அதுதானே முண்ணனியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. வேதாரணியத்துல இடி இடிச்சா, வெள்ளியங்கிரியிலா மழை பெய்யும்.

ஒரு மதம் வளர மரம் போல, மண்ணும், நீரும், உரமும் வேண்டும். அரசியல் வியாபாரம் கலாச்சாரம் என்பவையே இம்மரம் வளர காரணகர்த்தாக்கள். நம் வீட்டுல இருக்கிற பிள்ளை பெண்டுகள் மாதிரி மதங்களும் வளர்ந்து இருக்கும், ஏன் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இன்றைய நிலவரப்படி சில பேப்பர்களை புரட்டிப் பார்த்து அந்த தாள் தரும் தகவல்கள் அடிப்படையில் முக்கியமாய் நான்கு முன்னில் நிற்கிறது. இன்னும் ஒரு நூறு மதங்களும் நிலுவையில் உள்ளன என்றாலும். கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தமதம், ஹிந்துமதம், இவை நாலுதான் பெரும் கட்சிகள். இதுலயும் ஒரு சுவாரசியமான தகவல் உண்டு.

இருக்கிற நாலு மதமும் இரண்டே இடங்கள்ல இருந்துதான். ஒண்ணு இந்தியா, இன்னொன்னு வளைகூடா. ஆளுக்கு ஒரு ஜோடி மதம் உண்டாக்கியிருக்குது இந்த இரண்டு இடங்களும். அது ஏங்க எனும் கேள்வி கேக்கலாம், கேட்டு கிடைக்கிற விடையில் பெரிய சுவாரசியம் இல்லேங்கறதால, நெக்ஸ்ட்டுக்கு ஜம்புவோம்.

இவ்வாறாகத்தானே நம் மதங்கள் தமக்கே உரிய வீகத்தில் வளர்ந்தும் தேய்ந்தும் வருகிறது. என்றாலும் இந்த வளர்ச்சி / தேய்ச்சி விகிதம் என நாம் ஆராயும் போது, அவற்றின் தொடங்கிய இடமும், ஜனத்தொகையும் பக்கத்தில் வைத்து கொண்டே பார்ப்பது நல்லது. இல்லாமல் கூட அதன் கோட்பாடுகள், தன்மைகள், நம்பிக்கை எல்லாவற்றின் துணையுடன் பார்த்தல் நலம். இல்லையேல் தவறான பாதைக்கு நம் கணிப்பு கரை கடக்கும்.

சரி இக்கேள்விகளினூடே இம்மதங்களின் வயதென்ன எனவும் ஒரு துணைக் கேள்வி கேட்போமா. என்ன இருக்கும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 2 அல்லது 4 ஆயிரங்கள் இருக்கும்.அம்புட்டுதேன், எனும் போது அப்படி போடு அருவாள, ஏங்க நம்ம மனித இனத்தின் வயசு சில லட்சம் வருடங்கள் ஆச்சே. அப்போ இந்த மதங்களின் தோற்றத்துக்கு முன்னால என்னவா இருந்துச்சு என ஒரு சிந்தையும் வருகிறது.

அது வேற ஒண்ணுமில்லை, கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து ஸ்திரப்பட்டு நல்ல ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. இன்று நாம் கெட்டிக்கா பிடித்து கொள்ளும் மத நம்பிக்கைகள் இக்க்காலத்துக்கு முன்ன இல்லையா. நாம் அடித்து கொள்ளும், அடுத்தவனை வெடித்து கொல்லும் மதங்கள் நம் முன்னோர்களுக்கு முக்கியமாய் இல்லியோ...

எது எப்படியோ மதத்தின் பெயரால் ஒரு உடலோ, ஏன் மனமோ வெட்டுண்டால் அது மதம்தான்.

மதம் நம் வழிபாட்டில் மட்டுமல்லாது நம் உணவு வகைகளிலும் பழக்கங்களிலும் பக்காவாக இருக்கிறதே. பாய் ஆயிரம் சொல்லுங்க உங்க வீட்டு பிரியாணி பக்குவம் நமக்கு வர்ரதில்ல. அதைன்னவோ போங்க பிரியாணின்னா அது உங்களிதுதான், ஒரு பிடி பிடிச்சுறீங்க என்றவரை இவர் மடக்கிச் சொன்னார். சாமி உங்க வீட்டு புளியோதரையும் சக்கரைப் பொங்கலும் தேவாமிர்தம்யா. எனும் இருவரும் சொல்லுவார் நம்ம பீட்டர் வீட்டுல சாப்பிட்டோமே கேக்கு, அது கேக்குங்க, இன்னும் கொஞ்சம் கொடுன்னு கேக்க வைக்குது என்பார்.
நாம் ஒருவேளை அடுத்த வீட்டில் பொறந்திருந்தால், நம் உடை, உணவு, மொழி, எல்லாம் அல்லவா மாறியிருக்கும்.

வெற்று நெற்றியில் சேர்த்த புருவங்கள் ஒரு மார்க்கம் எனவும், மெயின் குங்குமத்துக்கு மேலாக்கா வகிடுல வைச்சிருக்கேன் பாத்துகிட்டியா....நான் கல்யாணம் ஆனவ எனும் சங்கேத மொழியும் மதங்கள் நம் வாழ்வில் ஆற்றும் பங்கு புரியுமல்லவா.

இன்று ஒரு தெளிவு பெற முடியுமா. மதம் இன்று விதைத்திருக்கும் விதம் விதை தெரிந்து நாம் விழித்து கொள்ள முடியுமா. நான் என்பது இந்த சமூகம் வரைந்த சித்திரம். உலகிற் சிறந்தது என் மதம்தான், நான் சார்ந்திருக்கும் மதம்தான் எனும் வாக்கியத்தின் வால்யூம் குறைத்து, நான் பெரிசும் இல்ல, நீ சிறிசும் இல்ல என சொல்ல முடியுமா,

எம்மதமும் சம்மதம் எனும் முழக்கம் அர்த்தமற்றது. அப்படியிருக்க சாத்தியமும் இல்லை, அவசியமும் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் வேண்டாம். நான் சார்ந்திருக்கும் மதம் நல்லதே எனும் தெளிவோடு, என் மதம் பெரிசும் இல்ல, உன்னோது சிறிசும் இல்ல என நினைக்க துவங்கினால் ஒரு மிக பெரிய மாற்றம் நிகழும்.

அம்மாற்றத்திற்கு நம்முள் உற்று நோக்கி நம் அடையாளங்களின் ஆணி வேருக்கு செல்ல வேண்டும். சக மனிதனை பார்த்து அவன் சங்கதிகள் புரிய வேண்டும்.

முடியுமா???? .... முடியும்மா !!!! .... முயன்றால்....

மதங்களின் மாண்பு புரிந்து நம்மை மாற்றினால் மாற்றம் நிகழும்.

தொடரும்...............