பக்கங்கள்

மச்சான் தயவு இருந்தா மலை ஏறி புளைக்கலாம்

ஒரு தகவலை பதிவாய் சொல்ல அமர்ந்த போது, இரு தலைப்புகள் என்னை சூழ்ந்தன. ஒன்று 'மச்சான் தயவு இருந்தா மலை ஏறி புளைக்கலாம்' மற்றது 'முத்து குளிக்க வாரிகளா'

இரண்டில் ஒன்று தலைப்பாய் கொள்ளலாம் என்று தோன்றியது. என்னடா படுக்காளி இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற... என்று கேட்பது கேட்கிறது.

பல பல நுற்றாண்டுகளாய் பாண்டி நாட்டு முத்து ரொம்ப பிரபலம். பாண்டிய நாட்டின் மிக பிரசித்தி பெற்ற முத்து நகர் சார்ந்த ஒரு தகவல் இது.

முத்து எடுப்பது என்பது, கடலில் மூழ்கி, சேற்றில் துளாவி, சிப்பி எடுத்து பின்னர் சிப்பியை பிளந்து முத்தை புடுங்குவது. சிப்பியை எடுப்பது முத்து குளிப்பது.

மேற்படி விவரங்கள்.

என்று முத்து குளிப்பது அரசு உடமையாய் ஆக்கப் பட்டு, முத்து ரத்தானதோ, அதற்கு முந்திய கால கட்டத்தில் உருவான ஒரு சமூக பழ‌க்கம் இது.

முத்து குளிக்க கடலின் உள் செல்லும் முன், அவன் இடுப்பில் கயிறு கட்டி அதன் மறு முனையை உடன் உள்ளவனுக்கு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். கடலின் ஆழத்தில் முச்ச‌டக்கி செல்லும் மீனவன், சில நேரம் ஆர்வம் காரணமாய் அல்லது இன்ன பிற காரணங்களினால் மயங்கி விழும் அபாயம் உண்டு. இடுப்பில் கட்டிய கயிறு பதத்தில் அதன் அசைவு கொண்டு கடலுக்கு அடியில் உள்ள விவரம் தெரியும் புத்திசாலித்தனம் உண்டு சக தோழ‌னுக்கு.

கடலுக்கடியில் சிப்பி தேடும் அதே நேரத்தில் உன்னிப்பாய் படகிலிருந்து கயிறு தூக்கி விட வேண்டிய கட்டாயம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் கை கயிறில் உள்ளது உள்ளே சென்ற தோழனின் உயிர். உயிர் விலை தெரிந்து செய்ய வெண்டிய வேலை இது. சரி இப்படி ஒரு பொருப்பான பணியை யாரிடம் கொடுபது. மரபு படி இந்த வேலையை யார் செய்தார்கள். காலம் காலமாய் அவர்கள் கொடுத்தது மச்சானிடம். உறவு முறையில் மைத்துனன். அதாவது பெண்டாட்டியின் உடன் பிறந்தவன், இளையவனோ மூத்த்வனோ எதுவாயினும் ஓகே.

கடலும் கடல் சார்ந்த இடத்தில் இப்படி ஒரு பழக்கம் என்றால், மலையும் மலை சார்ந்த இடங்களில் தேன் எடுக்க செல்லும் போதும், இந்த கயிறு கட்டி கொடுத்ததும் தாலி கயிறு தொடர்பிலே தான். மச்சான்கிட்ட்தான்.

ஒரு நிமிடம் சிந்தித்தால் இந்த ஆழமான உறவு, உயிரையே நம்பி ஒப்படைக்கும் உறவு நம்பிக்கை இன்று உண்டா....

நம் உயிரை ஒரு கயிறில் கட்டிவிட்டு அதை யாரிடம் கொடுக்க முடியும்.

இந்த கேள்வி நாம் இது வரை வாழ்ந்த்தின் வீகம் புரியும்.

மூன்று கடிதங்கள்

இந்த பதிவில் மூன்று கடிதங்களை பதிவிட்டு விட்டேன்.

1. நான் மனோதத்துவ மருத்துவர் டாக்டர் ருத்ரனுக்கு எழுதியது
2. என் அண்ணன் அக்கடித்த்துக்கு மறுமொழி
3. என் மறுமொழி

கடிதம் : 1

அன்புள்ள டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு,

தங்கள் பதிவு படித்தேன். தன்னையழித்தல் : மிக ஆழமான கருத்து பகிர்வு.

//// தற்கொலை என்றால் என்ன? தன்னுயிர் அழித்துக் கொள்ளுதல் தற்கொலை. ////

/// உயிர் என்பது எது? சிந்தையா செயலா? ////

நல்ல கேள்வி, ஆனால் ஒரு பதிலையும் சொல்லுங்களேன். மருத்துவர் என்பதால் உயிரின் பரிமாணம் தங்களுக்கு சிந்தையா செயலா என்பதாய் மட்டுமே தோன்றுகிறது.

என்னைக் கேட்டால், கம்புயூட்டரின் கிளாக் ஜெனரேட்டர் உயிர்.

பிராஸரோ, ஹார்ட் டிஸ்கோ, டி.சி. கரெண்டோ உயிர் அல்ல. கம்புயூட்டரைப் போல் மனிதனுக்கு, ஒரு ஆல்டேர்னேட்டிங் பல்ஸ் தருவது, மனிதனை செயல் படுத்துவதே உயிரின் வேலை. இந்து மித்தாலஜி படி குண்டலினி, எனும் தகவல் சரியாயிருக்குமோ எனவும் ஒரு சிந்தை.

/// ஒருவனது உணர்ச்சிகளை அவனது தன்மானத்தை அவனது ஒப்பனையென்றாலும் காட்டிக்கொள்ளும் உருவத்தைக் காலில் போட்டு மிதித்து கந்தலாக்கி காறி உமிழ்வது ஒரு கொலை என்றால், அதை நிறையவே செய்திருக்கிறேன். ////

ஹப்பா! என்ன ஒரு நல்ல சிந்தனை.

1. my name is Red. Oman Farakhi சொல்லும் விசயம் போல மிகவும் சுவாரசியமான தகவல்கள்.
2. இந்த பதிவு, ஒரு மனித வாழ்வு, இறப்பு, தத்துவம் என்பதாய்த்தான் எனக்கு தெரிகிறது.

புத்தகம் எழுத தேவையான ஒரு மேட்டரை பதிவோடு நிறுத்தினால் எப்படி. இன்னும் தொடருங்கள்.

அன்புடன்

____ (படுக்காளி)

கடிதம் : 2

உங்களைப் போன்ற ஒரு அறிவுஜீவிக்கு இது ஆழமாக சிந்திக்க வேண்டிய கரு.

என்னைப் போன்ற பண்பற்ற (பண்பட்ட) பகுத்தறிவுவாதிக்கு இந்த உயிர் / ஆன்மா சிந்தனைக்கு எளிய விடை உண்டு.

உடல் இயங்கிக் கொண்டிருக்கும் வரை உயிர் உள்ளது. விபத்தாலோ, உடல் நலக்குறைவாலோ, முதுமையாலோ, தேவையான சத்து மற்றும் தாதுக்கள் குறைந்ததாலோ உடல் இயங்க முடியாமல் போய் நின்று விடுகிறது. உயிரற்ற ஒரு உடல் தனது சுகாதாரத்திற்கு கேடு என்பதாலும் துர் நாற்றம் வீசும் என்பதாலும் - செதத பிணத்தை சாகவிருக்கும் பிணங்கள் - ஆறாவது அறிவின் படி - எரித்து, புதைத்து, நீரில் வீசி எறிந்து என இன்ன பிற வழிகளில் அப்புறப்படுத்தி விடுகின்றன. அவ்வளவு தான்.

ஆனால் - சக மனிதனின் இறப்பை இயற்கையின் நியதி என ஏற்றுக்கொள்ள உறவுகளும் உணர்வுகளும் தடுப்பதால் மனிதன் சோகமும் துக்கமும் கொள்கிறான்.

இந்த அவனது பலவீனத்தை ஆன்மீகவாதிகளும் மதங்களும் பயன்படுத்திக் கொண்டு இல்லாத கற்பனைகளை உருவாக்கி குண்டலினி சமைத்து கொண்டாடுகின்றன. வழக்கம் போல அங்ஙானத்தைப் பயன் படுத்தி விங்ஙானத்திற்கு சாயம் பூசுகிறது மெங்ஙானம். ஆறுதல் சொல்லப் புறப்பட்ட ஆன்மீகவாதிகள் ஆறாம் அறிவையே அழிக்கிறார்கள்.

இறந்தோர்கள் ஆன்மா வடிவிலே நம் நடுவிலேயே வாழ்கிறார்கள்..

சாந்தி அடையும் வரை புளிய மரத்திலே தொங்குகிறார்கள்...

மறுபிறவி எடுத்து மீண்டும் பிறந்து வருகிறார்கள்...

மறு உலகில் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்...

.....இப்படி அண்டப்புழுகுகளை அள்ளி விட்டு ஆதாயம் தேடுகிறது ஆன்மீகம்.

இப்படி குரூரமாக பதிலளித்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறேன். ஆணித்தரமாக என் கருத்தைச் சொல்லவும் உங்கள் சிந்தனையைத் தூண்டவும் வேண்டுமென்றே இப்படி எழுதுகிறேன்,

நிறைவாக ஒரு கேள்வி...

குண்டலினி / ஆன்மா போன்றவை மனிதனுக்கு மட்டும் தானா ? மற்ற உயிரினங்களுக்கும் உண்டா ? நான் நாளொன்றுக்கு நூறு கொசுக்களைக் கொல்கிறேன். இந்த கொசுக்களின் ஆவிகள் என்னை சுற்றிக்கொண்டிருக்கினவா ?

என்றென்றும் அன்புடன்
ஜோ பாஸ்கர்.


கடிதம் : 3

அன்பு அண்ணனுக்கு,

பிரமாதம்!!! சூப்பர். அக்கினிக் குஞ்சொன்றை இம்மெயிலில் (இம்மையிலும்) கண்டேன்.

ஆணித்தரமான கருத்து, அற்புதமான தமிழில்.

1. ஆன்மா இருக்கிறது என ஏன் நினைக்கிறாய் ?
2. மனிதம் உடலுடன் புல்ஸ்டாப் என ஏன் ஒத்துக் கொள்ள மறுக்கிறாய்?
3. ஆன்மா என ஒன்று இருந்தால் எல்லா ஜீவனுக்கும் உண்டா?
4. ஆன்மீகத்தின் நோக்கம் அறிவா, ஆதாயமா ?

எந்தக் கேள்வியுமே சாரம் குறைந்ததல்ல.

ஏன் எனக்கு உயிர் பற்றி இப்படி தோன்றியது. ஆன்மா என்ற ஒன்று உள்ளதாய் ஏன் உறுதி, என ஆணி வேரை உலுக்கி விட்டது. ஒரு வேளை நான் படித்த சில தகவல்களை உணமை என நம்பி நட்டாற்றில் நிற்கிறேனோ....

இதுதான் சரி என சொல்ல திடமும் திர்மானமும் இப்போது இல்லை. எனில் என்ன செய்ய.....

தங்கள் கேள்விகள் என்னுள் பிரசவித்த என் விடை தேடலை நம்புகிறேன். ...
அன்புடன்

_____ (படுக்காளி)

இது உங்களுக்காக

என்ன தவம் செய்தேன் இப்படி ஒரு தோழமை பெற.

வாழ்வின் அடிப்படையை நாங்கள் விவாதிக்க, விவாதத்தின் முடிவில் ஒரு கவிதை எழுதி அனுப்பினார் ஜனனி.
உன்னத தமிழில் உயர்ந்த கருத்தில் கவிதை மின்னுகிறது.
ஜனனியின் தமிழ் கனல் விதைக்கிறதே. மிக்க நன்றி.
அந்த கவிதை கிழே.

இது உங்களுக்காக
பறவைகள் தம் குஞ்சுகளுக்கு
பறக்கத்தான் சொல்லிக்கொடுக்கின்றன!
பதுங்குவதற்கு அல்ல!

விலங்குகள் தம் குட்டிகளுக்கு
வேட்டையாடத்தான் சொல்லிக்கொடுக்கின்றன!
உணவை பதப்படுத்தி வைக்க அல்ல!

தன்ணுள் இருக்கும் தண்ணீரை
துளி மிச்சமில்லாமல் தருகிறது மேகம்!
மறுநாள் தேவைப்படுமோ என்று
மூட்டை கட்டி வைப்பதில்லை!

பத்து கூடுகள் கட்ட
பட்டாம்பூச்சி நினைத்ததில்லை
பகுத்தறிவு படைத்த நீயே சொல்
உயர்திணை யார் என்று!

உலகில் படைக்கப்பட்ட
முதல் மனிதனின் சொத்து விவரம்
உனக்கு தெரியுமா ?
உன்னைப்போல் அவன்
சேர்த்துவைக்க நின்னைத்திருந்தால்
உனக்கு ஏதும் எஞ்சியிருக்குமா ?

மலர்த்தோட்டம் போடு! அதை
உன் தோட்ட்த்தில் உள்ள
மரத்திலிருக்கும் தேனிக்களுக்கு
குத்தகை விடு!
மலர்களை ரசி! தேனை ருசி!
புரிந்துகொள்ளாமல்
பூக்கடை போடுகிறவன்
பைத்தியக்காரன்!

ஈசலாய் பிறந்திருந்தால்
இன்றே வாழ்ந்திருப்பாய்!
மனிதனாய் பிறந்ததால்
மறந்து போய்விட்டாயோ ?

எல்லாவற்றிற்கும் விடை
உன்னிடம் இருக்கிறது!
கேள்வியை தேர்வு செய்ய
கற்றுக்கொள் நண்பா!

வாழ்க்கை
வாழ்வதற்குதான்!
வாடகைக்கு விடுவதற்க்கல்ல!

அன்புடன்,
ஜனனி

3 இடியட்ஸ் – திரை விமர்சனம்

நல்ல படம் என பல்வேறு விமர்சகர்களால் பாராட்டப்பட்டும், வெளியான சில தினங்களிலேயே 100 கோடி வருவாய் எனவும் இரு தளங்களிலுமே இந்த படம் அடைந்திருக்கும் வெற்றி, மிகவும் சந்தோசமாகவும் ஆறுதலாகவும் உள்ளது.

பொழுதுபோக்கே பிரதானம், வியாபாரமே எங்கள் இலக்கு !!! ரசிகர்களுக்கு பிடித்த்தை கொடுக்கிறோம் என டகால்டி விடாமல், திரைப்படம் என்பது கலை வடிவம், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு ஊடகம் என பொறுப்புணர்ச்சியோடு கச்சை கட்டி நிற்பது மிகவும் ஆரோக்கியமானது, அற்புதமானது.

சரி கதை என்ன.
மனிதனாய் பிறந்த எல்லாரையும் நம் சமுதாயம்‘கேட்டுக்கோ நைனா.... இப்படித்தான் இருக்கோணும்’ என ஒரு பாட்டு பாடுகிறது, . பாட்டுப் பாடி பாடாய் படுத்துகிறது. அப்படி படி, இப்படி இரு, என சமூகம் மனிதனுக்கு சில கோட்பாடுகளை தினிக்கிறது.

உன் பையன் இஞ்சினியரா, டாக்டரா சீக்கிரம் சொல்லு. வாழ்க்கையில் பணம் சம்பாதித்தானா இல்லையா டக்குன்னு சொல்லு என வேவு பார்த்து இது இரண்டும் இல்லையா அப்போ வேஸ்ட், நீயெல்லாம் தோன்றலின் தோன்றாமை நன்று என அவசரமாய் சீல் குத்தும்.

அந்த குத்துக்கு பயந்து திணித்தலுக்கு திணறி, மூச்சு முட்டும் பரிதாவத்துக்குறிய ஜீவன் தான் மனிதன், அல்லது முக்கி முனகி முகாரி பாடும் ஜீவனம் தான் மனிதம்.

வாட் நான்செஸ் இஸ்திஸ்.... என கோபமாய் கேள்வி கேட்டார் அமீர்கான், தன் தாரே ஜமீன் பர் படத்தில். என்ன சிறிய குறைபாடுடன் பிறந்த அவாஸ்தி அதில் கதையின் நாயகன். இதில் என்னைப் போல், உங்களைப் போல் சராசரி மனித இயல்பே கதையின் நாயகன். தாரே சமீன் பர்ரின் இன்னொரு எக்ஸ்டேன்ஷன் எனவும் இதை சொல்ல்லாம். எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் தான், என்றாலும் மனிதர்களாய் இயல்பாய் இருப்பது இயற்கை எனும் அடிப்படை தத்துவமே இந்த படத்தின் கதை.

நான் முக்கியம் இல்ல, நல்ல கதை தான் ஹீரோ என தன்னை முன்னிலைப்படுத்தாது, கதையை களம் இறக்கி விடுவது ஆமீர் ஸ்டைல். இதிலும் அப்படியே.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தை தரை இறங்க வைத்து, தூங்கிக் கொண்டிருக்கும் நண்பனை தட்டி எழுப்பி தங்கள் உயிர் நண்பனை தேடுவதில் பரபரப்பாய் தொடங்கும் கதை. நண்பர்கள் ஒன்றிணைய, இயற்கை எழில் சூழும் சிம்லா சாலையில் கார் விரைய, டைட்டிலுடன் பயணிக்க, ரசிகர்களான நாமெல்லாம் எழுந்து உட்காரும் ஒரு தருணம். அப்போது நிமிர்ந்து உட்கார்ந்த நாம், இறுதி வரை நம்மோடு நம் இதயத்துடன் இணைகிறது இந்த சினிமா.

திரைப்படத்தின் களம், காலேஜ் கேம்பஸ், அதுவும் டெக்னிக்கல் கேம்பஸ் என்பதால் நாய்குட்டிகள் கிலோபைட், மெகா பைட் எனும் நாமகரணம். வாத்தியாய் பெருமையாக, ஒரு பேனாவை காண்பித்து அதை பற்றி தம்பட்டம் அடிக்க, ஸீரோ டிகிரி சூழ் நிலையில் கஷ்டப்பட்டு ஏன் பேனா கண்டுபிடிக்கணும்... பென்சில் போதாதா என பகுத்தறிவு கேள்வி ஆகட்டும், எக்ஸாம் எழுதலைன்னா அடுத்ததா எழுத்லாம் அப்பா போனா வருவாரா என கேள்வி கேட்கும் யதார்த்தமும், ஆல் இஸ் வெல் என இதயம் தடவி சொல்லும் புது கட்டிப்பிடி வைத்தியமும், வைரஸின் முரட்டுத்தனமான டிசிப்பிளின் டிங்கிடாங்கிகளும், சுவாரசியத்தின் நல் முத்துக்கள்.

கதா நாயகியை சந்தித்து, அவளுக்கு பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை சரியில்லை, ரொம்ப நொர நாட்டியம் இவன், விலைப்பட்டியல் பார்த்து வாழும் கழுதை இவன்....... வேண்டாம்மா உனக்கு அவன் சகவாசம், என குளிர்பான கோப்பையை கையில் வாங்கிவிட்டு சொல்லும் யதார்த்தமும் என தரத்தில் உயர்ந்து, எங்கும் காப்பியடிக்காமல் சுயமாய் ரூம் போட்டு யோசித்த சிந்தனையுமாய் பட்டையை கிளப்புகிறது.

மாதவன், கரீனா, என அத்தனை கதாபாத்திரங்களும் பாத்திரப்படைப்பை பரிமளிக்கிறது. ஒளிப்பதிவு, இசை நம் அனுபவத்தை கூட்டுகிறது.

குறிப்பாய் சொல்ல வேண்டுமென்றால், கதை துவங்கிய நண்பர்களின் பயணம் சென்றடைவது சிம்லா பங்களாவை. தேடிச் செல்லும், சிம்லா பங்களா அடைவதும், அங்கு சாவு வீட்டின் அடையாளம் பார்த்தவுடன், சரி செத்துப் போயிட்டாண்டா.... என நாம் ரொட்டினாய் சிந்திக்க. தாடி வைத்த ஆளை காண்பித்து, இவர் தான் செத்தார் என சொன்னதில் ஆகட்டும். பின்னர் சம்பந்தமே இல்லாத ஆள் அறிமுகமாகி, வீட்டில் உள்ள புகைப்படமும் அதை உறுதி செய்ய நண்பர்களோடு சேர்ந்து நாமும் திகைத்து மண்டையை பிச்சுக்கும் இண்டெர்வல் பஞ்ச் சூப்பர். நிச்சயம் டீ பாப்கார்ன் எல்லாம் தேடாமல், இயற்கை உபாதை மட்டும் அர்ஜெண்டாய் முடித்து விட்டு, அடுத்தது என்ன என எதிர்பார்க்கும் அதிரடி டிவிஸ்ட்.

கரெண்ட் கட்டானதில், மழை பெய்ந்து தண்ணீர் கட்டியதனால், ஆஸ்பத்திரி வரை செல்ல முடியாத சூழ் நிலை உருவாகும் போது பதட்டத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம். அதனால் என்ன, நான் இருக்கிறேன் என அனுபவமே இல்லாத அமீர் பிரசவம் பார்க்கிறேன் என களத்தில் குதிக்கும் அந்த காட்சி உணர்ச்சிகளின் குவியல். அதிலும் அந்த பிஞ்சுக்கு உயிர் கொடுக்கும் ஆல் இஸ் வெல் அற்புதத்தின் சிகரம். நம் எல்லாருக்குமே குழந்தை பிறப்பை பற்றிய அதீத உணர்வும் பயமும் உண்டு. இக்காட்சி நம்மிடம் இருந்து அனுமதி பெறாமலே...... , ,சில கண்ணீர் சொட்டுக்களை
மலர வைக்கிறது. சபாஷ்...

கடைசி காட்சி நல்ல இன்ப அதிர்ச்சி. நல்ல படம், சூப்பரா யிருக்குடா என நாமெல்லாம் தீர்மாணம் செய்து விட்ட பின்னும் கூட அந்த பரபர கிளைமாக்ஸ், ஒரு பம்பர் போனஸ்.... உச்சா நண்பனுக்கு உச்சகட்ட்த்தில் கிடைக்கும் ஷாக் பார்த்து விட்டு, டேய் நம்மாளு இங்கனதான் இருக்கான் பாருங்டா என நண்பர்கள் பரபரப்பாவதும், சகஜமாய் வந்து டீ மாஸ்டர் அறிமுகமாவதும், பின்னர் ஸ்கூட்டரில் பறந்து வந்து கன்னத்தில் அடிக்கும் கதா நாயகி என நச்சு கிளைமாக்ஸ்.

தெனாவெட்டு பிரெண்டு, நக்கல் செய்து திரும்ப, ஏன் பேர் தெரியாதே உனக்கு, என ஆமிர் பேப்பே காட்டும் போது, அந்த பிரெண்டு மட்டும் அல்ல நாமும் அதிர்ச்சி அடைகிறோம்.

மனதில் தோன்றிய சில சின்ன நெருடல்கள். பொறுப்பான படைப்பாளிகளாய் இருப்பதால் இந்த உரிமை எடுத்துக் கொள்ள தோன்றியது.

· விமானத்தை நிறுத்தி, ஏமாற்றுவது சுவாரசியமான தொடக்கம் என்றாலும். எவ்வளவு சப்பை கட்டு கட்டினாலும், நிச்சயம் அது தனிமனித ஒழுக்க மீறலே. சினிமா சராசரி மனிதனின் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் இது போல் விசயங்களை தவிர்ப்பது நல்லது.

· ராகிங் கொடுமையை சமயோகிதமாய் ஷாக் கொடுத்து தவிர்த்தாலும் ராகிங்கை எதிர்த்து போராடு என மாணவருக்கு சொல்லாமல் சொல்லுகிறதே. நிஜ வாழ்க்கையில் இப்படி எதிர்மறையாய் முடிவு எடுக்கும் போது சில சமயம் விபரீத விளைவுகள் அல்லவா விளையும்.

அதை விட ஒரு நல்ல யோசனை, அடங்குவது போல் அடங்கி விட்டு அசட்டை செய்யாமல் இருப்பது ராகிங்கில் எளிதல்லவா.

· என்னதான் இயல்பு என்றாலும் சிறுநீர், குளியல் என பயாஸ்கோப் காட்டி, பாத்ரூமில் கேமரா நுழையலாமா.

நீண்ட நாட்களுக்கு பிறகு, எடுத்தா இப்படி படம் எடுக்கணும் இல்லையா, எகிறிக் குதிச்சு ஓடிருங்க என படைப்பாளிகளை பார்த்து நாம் பஞ்ச் டயலாக் பேச வைத்திருக்கும் படம்.



3 இடியட்ஸ் 3 சியர்ஸ்.

அவதார் – திரை விமர்சனம்

மாபெரும் டைட்டானிக் வெற்றி, 1200 கோடி செலவிலான மெகா பட்ஜெட் முயற்சி, ஏறக்குறைய 15 வருட உழைப்பு என அவதார் பற்றிய எக்ஸ்பெக்டேஷன் மீட்டர் எக்கச்சக்கமாய் எகிறிவிட்ட்து. எவ்வளவு எதிர்பார்த்து போனாலும் அதையும் மிஞ்சி படம் சூப்பரா இருக்கு என சில நண்பர்களும். டைட்டானிக் மாதிரி இல்லைங்க, ரொம்ப எதிர்பார்க்காதீங்க, படம் பரவாயில்லை என சில நண்பர்களும் சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் தான் இந்த வார இறுதியில் பார்த்தேன்.

ஒற்றை வரியில் சொல்லணும்னா, நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு. தாங்கள் செலவிட்ட நேரத்துக்கும் பணத்துக்கும் முழு உத்தரவாதம். வீட்டின் கடைக்குட்டி முதல் மூத்தவர் வரை ரசித்து பார்க்கும் வண்ணம் தைரியமாய் தியேட்டர் போய் பார்க்கலாம்.

அவதார் என சுத்த சமஸ்கிருத்த்தில் நம் இந்திய சிந்தையை உள்ளடக்கிய கதைக் கருதான். சரி கதை என்ன. வெள்ளைக்காரன் படத்துல ஒரு குறை உண்டு. கதை என்பது அரைகுறையாத்தான் எனக்கு புரியும். என்னைப் போல் பாதி புரிபவர்களுக்கு கீழ் உள்ள பேரா நல்லது. இல்லையா உங்களுக்கு கதை புரியும் என்றாலோ அல்லது கதை கேட்டு படம் பார்த்தா புடிக்காது என்றாலோ ஒரு ஜம்ப் செய்து அடுத்த்து சென்று விடுங்கள்.

(பிராஜெக்ட் டகால்டி 12345 என பெயரிட்டு படுக்காளி வலைத்தளத்தில் நான் எழுதிய தொடரின் கதை ஏறக்குறைய இதே கதைக்கரு)

பூமிக்கு அப்பால் ஒரு கிரகம். அங்கே நம் கிரகம் போல் உயிரினங்கள் செடி கொடிகள், நீர் எல்லாம் உண்டு. இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்கள் நாவி இனமும் உண்டு. அங்குள்ள சீதோஷனத்தின் புண்ணியத்தில் அடாப்ட் செய்த்தால் நீண்ட உருவமும், ஆக்ஸிஷன் குறைவால் நீல நிறமும் பெற்று ஏறக்குறைய அழகாகவே இருக்கிறார்கள். இதை எப்படியோ வலை வீசி கண்டும் பிடித்து விட்டார்கள் நம் செல்லக்குட்டிகள். இதை கண்டுபிடித்த நம் பூமியில் உள்ள மனிதனுக்கு அவர்கள் மீதெல்லாம் அக்கறை இல்லை. அங்கு கிடைக்கும் ஒரு தனிமத்தின் மீது கொள்ளை பிரியம். அதன் பயனும் விலையும் அலாதியானது. எப்படியாவது இதை எடுக்க வேண்டும் என அங்கே பட்டரை போடுகிறது அந்த சக்தி வாய்ந்த குழு.

அவர்கள் செய்யும் கூசக்களித்தனம் இதுதான். மனித டி.என்.ஏ துணையுடன் நாவியின் டி.என்.ஏ. இணைத்து நாவி போல் உடலமைப்பு செய்து விடுகிறார்கள். உடம்பு செய்தவர்கள், உயிர் செய்ய முடியவில்லை. அது ஆண்டவன் வேலை அல்லவா. மனித உயிரை பிரித்து எடுத்து அதை நாவி உடம்பில் செலுத்தி நாவிகள் குழுவிலே நம்மாளை வேவு வேலை பார்க்க சொல்கிறார்கள். அப்படி வேவு வேலை பார்க்க வந்த கதா நாயகன், இறந்து விட அவன் இரட்டைச் சகோதரனை கதா நாயகனாக்கி கதை தொடங்குகிறது. பாவம் பிறவியில் கால் ஊனமானவன் நம் ஹீரோ. அவனை அழைத்து வந்து அண்ணன் உடல் காண்பித்து, அஞ்சலி செய்த பின் நாவியின் உடல் காண்பிக்கிறார்கள். அதன் உயரம் பார்த்து ஆச்சர்யிக்கிறான். சரி உன் அண்ணன் டி.என்.ஏ. வில் இருந்து (அதாவது உன்னிதும் தான்) உருவாக்கியதை பார் எனும் போது, பாசத்துடன் அந்த கண்ணாடிப் பேழையை பார்க்கிறான். சரி வா உன் உயிரை பிய்த்து அங்கே செலுத்தி கூடு விட்டு கூடு பாய்வோம் என்கிறார்கள்.

பிறவியிலே நடக்க முடியாதவன், கால்கள் பார்த்து பூரிக்கிறான். கால் துவளும் வரை ஓடுகிறான். அந்த உடலை அவன் உயிர் நேசிக்கிறது. இப்போது பண்டோரா எனும் கிரகத்துக்கு செல்கிறான். ஆர்வக் கோளாறினால் கொஞ்சம் எல்லை கடக்க, அங்குள்ள மிருகத்தின் துரத்தலுக்கு பயந்து ஓடும் போது, தன் குழுவை பிரிகிறான். இரவில் வெளிச்சம் வேண்டி தீ பத்தவைக்க, நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல், அந்த தீயின் வெளிச்சத்திலே அவனை கொல்ல விலங்குகள் வருகிறது. வருவது வீரியமான டிராகன் அமைப்பு உள்ள பறக்கும் கோர பற்கள் கொண்ட விநோதம்.

இந்த ஆபத்துக்கு மேல, டாப்பில இருந்து இன்னொரு டேஞ்சர். சரி இந்த பயல போட்டு தள்ளிர வேண்டியதுதான் என நாவி குழுவை சேர்ந்த தலைவனின் புதல்வி மரத்துக்கு மேலே. அம்பு எடுத்து, நாணில் பூட்டி விடும் சமயத்தில், வேண்டாம் என ஒரு சக்தி தடுக்கிறது. அவன் நல்லவன் வல்லவன் என கோடி காட்ட, அவனை காத்து விலங்குகளை துரத்தி விட்டு. யப்பா நீ போ, இங்கே இருக்காதே.... நீ பச்சபுள்ள என அறிவுரை சொல்கிறாள். விடுவானா, அவளை பின் தொடர்ந்து சென்று என்னையும் சேர்த்துக் கொள் என மன்றாடுகிறான். குழுவின் தலைவி சில சோதனைகள் செய்த பின், இவன் நல்லவன் என அத்தாட்சி அழிக்க, சரி இவனுக்கு தேவையான பழக்க வழக்கங்களை நீயே கற்றுக் கொடு என ஒத்துக் கொள்கிறார்கள்.

உணவு, போக்குவரத்து, தற்காப்பு, பிரார்த்தனை என அந்த வாழ்வியல் முறையை கற்றுக் கொள்கிறான். அவனுக்கு அது பிடித்தும் போய் விடுகிறது. இவனை அனுப்பிய மனுசப் பயலுவ என்ன செய்யுறாங்க, பரபரப்பான அந்த காட்சிகள் என்ன என்பதை எல்லாம், வெண் திரை விளக்கும்.

அவதார் ஒரு அனுபவம். திரைப்பட்த்தின் புதிய பரிமாணத்தில் மகிழ்ந்திருக்க ஒரு சந்தர்ப்பம். நடிக்க ஆள் வேண்டாம், கம்புயூட்டர் வச்சு நானே வரைஞ்சிக்கிறேன் என டைரக்டர் களம் இறங்கினால் என்ன செய்வது. இறைவன் உருவாக்கிய பூமியை, மனுசப்பய அதுல மரம் வெட்டலைன்னா, இப்படித்தான் இருந்திருக்குமோ என சிந்திக்க வைக்க ஒரு முயற்ச்சி. பரம சுகம் 3டி அனுபவம். 3டி என்பதால் கண்ணுக்கு நேரா அம்பு விடு, கைக்கெட்டுற தூரத்துல ஐஸ்கீரிம் காட்டு என்பதாய் எலிமெண்டரி ஸ்கூல் எபக்ட்ஸ் இல்லை. கண்ணை உறுத்தாத நம் மிக அருகில் வந்து பூச்சாண்டி எல்லாம் காட்டாது, நேர்த்தியான செயல் திட்டம்.

அடர்ந்த காடு, உயர்ந்த மரம், பெரிய நீர்வீழ்ச்சி, ஆக்ரோஷமான மிருகம் என நம் கற்பனை கடந்து, அடேயப்பா என அதிசயிக்க வைக்கும். இசை, ஒளிப்பதிவு என பிரித்துப் பார்த்து இது நல்லா இருக்கு, என பிரிக்க முடியாத வண்ணம் அனுபவத்தில் நம்மை இணைக்கும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த வறுமையில் உழன்று, வீட்டு வாடகை எல்லாம் கொடுக்க முடியாது தன் காரில் குடித்தனம் செய்த ஒரு துணை நடிகரையே ஹீரோவாக்கினார் ஜேம்ஸ் கேமரூன் எனும் போது அவர் புத்திசாலித்தனம் தெரிகிறது. அவரது முகத்தையும் மார்பையும் பார்க்கும் போது அவர் ஊனமுற்றவராக இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. துவளும் காலும் அவரது பாடி லேங்குவேஜும் அவர் உண்மையிலேயே ஊனமுற்றவரோ என கேள்வியும் கேட்கிறது. விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். மிச்ச எல்லாம் கம்புயூட்டர் ஜெனரேட்ட்ட் என்பதால், நல்லா ஆக்ட் கொடுத்துருக்காங்க என சொல்ல வேண்டிய அவசியம் எல்லாம் இல்லாமல் போச்சு.

டைட்டானிக் காதல் சொன்ன படம். அழகான ஹீரோ, ஹீரோயின் ஏன் வில்லன் கூட அம்சம் என அழகுணர்ச்சி த்தும்பிய படம். சொன்ன மேட்டர் வேர லவ்ஸ். அந்த பழங்கஞ்சிதான் இப்பவும் வேணும், அதேதான் எனக்கு மறுபடி வேணும் என அடம் பிடிக்காமல், புதிய அனுபவம் மாறுபட்ட சிந்தனைக்காக அவதார் நிச்சயம் பார்க்கலாம்.